முதல்வர் ஸ்டாலினின் வேண்டுகோளை அடுத்து பொது நிவாரணநிதிக்கு குவிந்து வரும் நன்கொடை!

0
330

முதல்வர் ஸ்டாலினின் வேண்டுகோளை அடுத்து பொது நிவாரணநிதிக்கு குவிந்து வரும் நன்கொடை!

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பப்படும் நிதி, கொரோனா நிவாரண பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் உறுதி அளித்தார்.

கொரோனா 2வது அலையின் தீவிரம் மாபெரும் பாதிப்பை நாடு முழுவதும் ஏற்படுத்திவருகிறது. தமிழகத்திலும் பாதிப்பின் அளவு கடுமையாக உள்ளது, கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30,000ஐ கடந்துள்ளது. ஒரே நாளில் 297 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று பேரிடரை ஒட்டி, முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், தொழிலதிபர்கள், சமூக அமைப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பப்படும் நிதி, கொரோனா நிவாரண பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் உறுதி அளித்தார்.

முதல்வர் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள், அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி அனுப்பி வருகின்றனர்.

முதலமைச்சரை நேரில் சந்தித்து அரசியல் கட்சியினர், பிரபலங்கள் நேற்று நன்கொடைகளை காசோலையாக வழங்கினர்.

அதன்படி, திமுக அறக்கட்டளையின் சார்பில் கொரோனா நிவாரண பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வழங்கினார். அப்போது துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர்.

விடுதலை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு உள்ளிட்டோருடன் முதல்வரை சந்தித்து 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை அளித்தார்.

பூர்விகா மொபைல்ஸ் நிறுவனம் சார்பில் அதன் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவருடைய மனைவி கனி யுவராஜ் ஆகியோர் முதல்வரை சந்தித்து 50 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.

இதே போல, டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஏ.சி.எஸ் அருண்குமார், முதல்வரை நேரில் சந்தித்து 50 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.

மேலும், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி மற்றும் மேலாண்மை அறங்காவலர் ஆதித்யா ஆகியோர் முதல்வரை சந்தித்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.

நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்தி ஆகியோர் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கினார்கள்.

திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கொரோனா நிவாரண பணிகளுக்காக 25 லட்ச ரூபாய்க்கான ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.

பிரபல திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நிவாரண பணிகளுக்காக 25 லட்ச ரூபாய்க்கான ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன், பல்கலைகழகத்தின் தலைவர் மேரி ஜான்சன் மற்றும் பல்கலைகழகத்தின் துனை தலைவர் மரிய பெர்ணடெட் தமிழரசி ஜான்சன் நிவாரண பணிகளுக்காக ரூபாய் 50 லட்சத்தை வழங்கினார்.

பிரபல திரைப்பட நடிகர் அஜித்குமார் நிவாரண பணிகளுக்காக RTGS மூலமாக 25 லட்சம் ரூபாய் வழங்கினார்.