பேரிடர் காலத்தில் ஆட்டோவை இலவச சேவை வாகனமாக்கிய இளைஞர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி கடிதம்!

0
207

பேரிடர் காலத்தில் ஆட்டோவை இலவச சேவை வாகனமாக்கிய இளைஞர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி கடிதம்!

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. தன்னார்வலர்கள் பலரும், அரசின் நடவடிக்கைகளுக்குத் துணையாகச் செயலாற்றி வருகின்றனர்.

மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் குருராஜ். கடந்த 10 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வரும் இவர் கடந்தாண்டு முதலே மாவட்ட நிர்வாகத்தின் கீழ் தன்னார்வலராக இணைந்து பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்குவது, நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளுக்குச் சென்று காய்கறிகள் வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழலில், அவசர காலத்தேவைக்காக மக்கள் பயணிக்கும் வகையில் தனது ஆட்டோவை இலவச வாகனமாக மாற்றியுள்ளார்.

மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, ஊரடங்கு நேரத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு செல்லும் நபர்களையும் போக்குவரத்து வசதி இல்லாமல் காத்திருக்கும் பயணிகளையும் தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்துச்சென்று சேவையாற்றி வருகிறார்.

“உடல்நலம் குன்றியவர்களையும், கொரோனா நோயாளிகளையும், மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமானால் தனது செல்போன் எண்ணுக்கு அழைத்தால் போதும்; இலவசமாக உதவி செய்வேன்” என அறிவித்திருக்கிறார் ஆட்டோ ஓட்டுநர் குருராஜ்.

இதையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்டோ ஓட்டுநர் குருராஜின் சேவையைப் பாராட்டிக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “மதுரையில் ஆட்டோ ஓட்டுநராக உள்ள உங்களது தொடர்ச்சியான மக்கள் சேவை பாராட்டுக்குரியது.

நீங்களும் உங்களது நண்பர் அன்புநாதனும் தொற்றுக்காலத்தில் அரசின் அனுமதி பெற்று தங்கள் ஆட்டோவை இலவச சேவை வாகனமாக பயன்படுத்தி வருவதை அறிந்து நெகிழ்ந்தேன்.

பேரிடர் காலம் எனும் போர்க்களத்தில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள போர்க்கால நடவடிக்கைகளுக்கு துணை நிற்கும் வகையில் தாங்கள் மேற்கொண்டுள்ள சேவையை அரசின் சார்பில் பாராட்டுகிறேன்.

தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நோய்த் தொற்றுக்கால பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்து நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். இப்பெரும்போரில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அதிமுக்கியமானது! நாம் இணைந்து விரைவில் கொரோனாவை வெல்வோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.