நிவர் புயல் முன்னெச்சரிக்கை: 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்த முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

0
210

நிவர் புயல் முன்னெச்சரிக்கை: 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்த முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

சென்னை, வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது நாளை புயலாக மாறி நாளை மறுநாள் காரைக்கால்-மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கக் கூடும். இந்த புயலுக்கு ‘நிவர் புயல்’ என பெயரிடப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை என தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலில் சீற்றம் ஏற்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புயல் மற்றும் கனமழையை சமாளிக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்த முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளும், 24.11.2020 மதியம் 1.00 மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. பொதுமக்களும், தங்கள் சொந்த வாகனங்கள் மூலம், அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற தேவைகளுக்காக பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.