தலைக்கூத்தல் விமர்சனம் : தலைக்கூத்தல் மரண படுக்கையில் பாசமும் தோற்றுப் போகும் என்பதைச் சொல்லும் படம் | ரேட்டிங்: 3.5/5

0
294

தலைக்கூத்தல் விமர்சனம் : தலைக்கூத்தல் மரண படுக்கையில் பாசமும் தோற்றுப் போகும் என்பதைச் சொல்லும் படம் | ரேட்டிங்: 3.5/5

ஒய் நாட் ஸ்டுடியோஸ் எஸ். சஷிகாந்த் தயாரிப்பில், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தலைக்கூத்தல்.
இதில் சமுத்திரக்கனி, கதிர்,வசுந்தரா,வையாபுரி, முருகதாஸ், கதாநந்தி, கலைச்செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தலைக்கூத்தல் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை- கண்ணன் நாராயணன், பாடல்கள் -யுகபாரதி,, ஒளிப்பதிவு – மார்ட்டின் டான்ராஜ், படத்தொகுப்பு- டேனி சார்லஸ், பிஆர்ஓ-நிகில்.

கட்டிட தொழிலாளியான சமுத்திரகனி விபத்தால் தந்தை கலைச்செல்வன் சுயநினைவு இழந்து எழுந்து நடமாட முடியாத நிலையில் இருக்க, அவரை கவனித்துக் கொள்ள தன் தொழிலை விட்டு விட்டு தனியார் ஏடிஎம் வங்கியில் காவலாளியாக வேலை செய்து கொண்டு மனைவி வசுந்தரா மற்றும் மகளுடன் வாழ்கிறார். தந்தையின் மருத்தவ செலவிற்கு கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் சமுத்திரகனிக்கு மனைவி வசுந்தரா தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து குடும்பத்தை நடத்துகிறார். உடல்நலம்குன்றியிருக்கும் தந்தையை தலைக்கூத்தல் முறையில் கொலை செய்துமாறு மனைவி வசுந்தராவும், அவளுடைய குடும்பத்தாரும் சமுத்திரகனியை நிர்பந்திக்கிறார்கள். இதற்கு துளியும் உடன்படாமல் சமுத்திரகனி பிடிவாதம் பிடித்து தந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார். கடன் கொடுத்தவர் வீட்டின் பத்திரத்தை வைத்து விற்க முயல இதனால் சமுத்திரகனிக்கும், வசுந்தராவிற்கும் சண்டை ஏற்பட்டு, தன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுகிறார் வசுந்தரா. அதன் பின் சமுத்திரகனி என்ன முடிவு செய்தார்? தன் தந்தைக்கு தலைக்கூத்தல் செய்ய சம்மதம் தெரிவித்தாரா? சமுத்திரகனியும், வசுந்தராவும் சேர்ந்து வாழ்ந்தார்களா? என்பதே மனதை நெருடும் க்ளைமேக்ஸ்.

சமுத்திரகனி பாசமிகு மகனாக, தந்தைக்கு பணிவிடை செய்வதும், குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும் போது சமாளிக்க முடியாமல் திணரும் போதும், தன் தந்தை கண் திறந்து பார்த்தவுடன் மகிழ்ச்சியடைந்து கிடா வெட்டி ஊருக்கே விருந்து வைப்பதும், கடன்காரரிடம் மன்றாடுவதும், க்ளைமேக்ஸ் காட்சியில் தன் தந்தைக்கு செய்யும் தலைக்கூத்தலை தாங்க முடியாமல் மண்ணில் புதைத்து கொண்டு தன் இயலாமையை நினைத்து மனவேதனைப்படும் இடங்களில் தனித்து நின்று மனதில் பதிகிறார்.

வசுந்தரா முக்கிய கதாபாத்திரத்தில் மாமனாரை பார்த்துக் கொள்வதில் ஒரு சில நேரத்தில் பாசமாகவும், ஒரு சில நேரத்தில் பாரமாகவும் கருதி கணவனிடம் சண்டை, சச்சரவு செய்து முடிவு எடுக்க கட்டாயப்படுத்தும் இடமும், இவர் நல்லவரா, கெட்டவரா என்ற கருத்தில் முரண்பாடான கேரக்டரில் பொருந்தி அழுத்தமாகவும், யதார்த்தமாகவும் செய்து கை தட்டல் பெறுகிறார். மகளாக நடித்திருப்பரும் துருதுருவென்று சிறப்பாக செய்து, கேட்கின்ற கேள்விகளை நறுக்கென்று கேட்டு சிந்திக்க வைத்து அசத்தியுள்ளார்.

தந்தை கலைச்செல்வனின் சிறு வயது தோற்றத்தில் கதிர் தன் காதலி கதாநந்தியை துரத்தி துரத்தி காதலித்து, திருமணம் செய்து, பெற்றோர்களால் பிரித்து வைக்கப்பட அதன் பின் என்ன ஆனது என்ற கேள்விக்குறியான சில இடங்களில் வந்து போகிறார். காதலி வங்காள நடிகை கதாநந்தியாக தன் கண்களாலும். சிரிப்பாலும் வசீகர அழகில் தன் கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். இறுதிக் காட்சியில் கால்களை காட்டி உயிரோடு இருப்பது போல் காட்சிப்படுத்தி, இவர் கதிரை பிரிந்து சென்ற பின்னர் என்ன ஆனார் என்பதை சரியாக காட்டாமல் யூகத்தில் விட்டு விடுகின்றனர்.

படுத்த படுக்கையாக இருக்கும் தந்தையாக கலைச்செல்வன் மிகவும் பொறுமையாக இயல்பாக நடித்துள்ளார். தன் இளமைகால காதல் நினைவுகளை ஒவ்வொரு சம்பவங்களாக இணைத்து நினைத்து பார்ப்பதும், நடப்பது என்னவென்று தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாதவராக, கண் அசைவில் தன்னுடைய பதிலை சொல்லும் விதம் அருமை.

சாமியாரினியாக வையாபுரி, குழந்தை இல்லை என்ற குமறலோடு ஊரை விட்டே ஒடி விடுபவராக நண்பனாக ஆடுகளம் முருகதாஸ்  அனைவருக்குமே இந்தப் படத்தில் முக்கிய வேடங்கள் மட்டுமின்றி பேசம்படியான கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.

யுகபாரதி பாடல்களில் கண்ணன் நாராயணனின் இசையும், பின்னணி இசையும் படத்தின் காட்சிகளுக்கு பொருந்தி மனதை வருடுகிறது.

கிராமத்து நடைமுறைகள், நிகழ்வுகளை நம் கண் முன்னே நிறுத்தி அனைத்து காட்சிக்கோணங்களையும் திறம்பட கொடுத்து அசத்தியுள்ளாhர் ஒளிப்பதிவாளர் மார்ட்டின் டான்ராஜ்.

டேனி சார்லஸ் படத்தொகுப்பை நிறைவாக செய்துள்ளார்.

ஏற்கனவே தலைக்கூத்தல் முறையை கே.டி.என்கிற கருப்புதுரை, பாரம் ஆகிய இரு படங்களில் காட்சிப்படுத்தி வெளிவந்துள்ளது. வயதானவர்களை கருணைக்கொலை செய்யும் தலைக்கூத்தல் முறை இன்றும் தமிழகத்தில் சில கிராமத்தில் நடைமுறையில் உள்ளதாக கூறப்படுபவதை மையப்படுத்தி முதியவர்களை கொல்லும் சம்பிரதாயங்களைப் பற்றி சொல்லி, அதில் கொஞ்சம்  காதல் நினைவுகள், குடும்ப சென்டிமெண்ட் கலந்து செயற்கை மரணத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். இறக்காமல் இயற்கை வைத்தியத்தை தாக்கு பிடிப்பவர்களை  ஆங்கில வைத்தியத்தால் சாகடிப்பதாக இறுதியில் காட்டியுள்ளனர்.

மொத்தத்தில் ஒய் நாட் ஸ்டுடியோஸ் எஸ். சஷிகாந்த் தயாரிப்பில் தலைக்கூத்தல் மரண படுக்கையில் பாசமும் தோற்றுப் போகும் என்பதைச் சொல்லும் படம்.