மைக்கேல் விமர்சனம் : மைக்கேல் அதிரடி ஆக்ஷன் பிரியர்களை அசத்திடும் மைல்கல் | ரேட்டிங்: 2.5/5

0
321

மைக்கேல் விமர்சனம் : மைக்கேல் அதிரடி ஆக்ஷன் பிரியர்களை அசத்திடும் மைல்கல் | ரேட்டிங்: 2.5/5

கரண் சி புரடெக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் இணைந்து தயாரித்திருக்கும் மைக்கேல் படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.
இதில் சந்தீப் கிஷன், கௌதம் வாசுதேவ் மேனன், திவ்யான்ஷாகௌசிக், வரலட்சுமி சரத்குமார், விஜய் சேதுபதி, அனுசுயா, வருண் சதீஷ்,அய்யப்பா ஷர்மா, அணிஷ் குருவில்லா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை – சாம் சி.எஸ், ஒளிப்பதிவு-கிரண் கௌசிக், வசனம்-ராஜன் ராதா மணாளன், கலை இயக்குனர்-காந்தி, படத்தொகுப்பு-ஆர்.சத்திய நாராயணன், சண்டை-தினேஷ் காசி, மக்கள் தொடர்பு-ஏய்ம் சதீஷ்.

மும்பையில் பெரிய கேங்ஸ்டர் குருநாத் என்றாலும் தன் மனைவிக்கு மட்டும் கட்டுப்பட்டவர். மனைவிக்கோ தன் ஒரே மகன் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருப்பவர்.அந்த சமயத்தில்; 13 வயது சிறுவனான மைக்கேல் மும்பைக்கு வரும் நேரத்தில் குருநாத்தை கொலை தாக்குதலிலிருந்து  காப்பாற்றுகிறான். அதன் பின் குருநாத்தின் அரவணைப்பில் வளர்கிறான்;. பின்னர் இன்னொரு தாக்குதலிலிருந்தும் குருநாத்தை காப்பாற்றும் மைக்கேலுக்கு  பார் நடத்தும் உரிமையை ஒப்படைக்கும் அளவிற்கு நம்பிக்கைக்குரியவனாக மாறுகிறான். இதனால் குருநாத்தின் மகனுக்கு உள்ளுக்குள் பகை ஏற்படுகிறது, மைக்கேலை கொலை செய்ய வேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறார். இந்த சமயத்தில் குருநாத்தை கொல்ல சதி திட்டம் தீட்டிய ஆறு பேரில்,  ஐந்து பேரை கொன்று விடும் குருநாத், ஆறாவது நபரான ரத்தனையும்,அவரது மகள் தீராவையும் கொல்ல டெல்லிக்கு மைக்கேலை அனுப்புகிறார். டெல்லிக்கு செல்லும் மைக்கேல் அங்கே தீராவை பின் தொடர்ந்து செல்ல, நாளடைவில் காதலாக மாறுகிறது. ரத்தனையும், தீராவையும் கொல்லாமல் இருக்கும் மைக்கேலை போட்டு தள்ள குருநாத்தின் மகன் ஆவேசமாக புறப்பட்டு சென்று மைக்கேலை அடித்து துப்பாக்கியால் சுட்டு கடலில் தள்ளி விடுகிறான். அதன் பின் மைக்கேல் என்ன ஆனான்? உயிரோடு வந்து காதலி தீராவை காப்பாற்றினானா? குருநாத்திற்கும் மைக்கேலுக்கும் இருக்கும் உறவு என்ன? மைக்கேல் ஏன் குருநாத்திடம் வந்து சேர்ந்தான்? காதலியை கடத்திய குருநாத்தின் மகனை என்ன செய்தான்? என்பதே ஃபிளாஷ்பேக் கதையுடன் இணைந்து செல்லும் கதைக்களம்.

தாயை ஏமாற்றியவர்களை பழி தீர்க்க 13 வயதில் தன்னந்தனியாக புறப்பட்டு குருநாத்தின் நம்பிக்கைக்குரியவனாக மாறும் மைக்கேல் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக சந்தீப் கிஷன், அளவான பேச்சு, வெறித்த பார்வை, பறிகொடுத்த முகபாவனை, முரட்டு உடற்கட்டு என்று தன்னை செதுக்கிக்கொண்டு இந்தப் படத்தில் உயிரை கொடுத்து நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் அளவாகவும், சண்டைக்காட்சிகளில் அதிரடியாகவும் பட்டையை கிளப்பி இருக்கிறார். ஆனால் குண்டடிப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்து மீண்டு வந்த உடனேயே அத்தனை ரவுடிகளையும் கொன்று விட்டு காதலியை மீட்டுச் செல்லும் இடம் நம்பும்படியாக காட்சிப்படுத்தப்படவில்லை. இருந்தாலும் அவரின் உழைப்புக்கு கூடுதல் பாராட்டு.

கேங்ஸ்டர் தலைவன் குருநாத்தாக கௌதம் வாசுதேவ் மேனன் இரட்டை வேடத்துடன், தன்னுடைய ஸ்டைலில் நேர்த்தியாக பயமுறுத்தி விட்டுப் போகிறார்.

காதலி தீராவாக திவ்யான்ஷாகௌசிக் அழகு,கவர்ச்சி இருந்தும் அழுத்தமான பதிவை கொடுக்க முடியவில்லை. அனுசுயா, வருண் சதீஷ்,அய்யப்பா ஷர்மா, அணிஷ் குருவில்லா கூடுதல் சிறப்பு. மற்றும் சிறப்பு தோற்றத்தில் மைக்கேலுக்கு உதவும்  வரலட்சுமி சரத்குமார், விஜய் சேதுபதி சில காட்சிகள் என்றாலும் நச்சென்று பதிந்து விடுகின்றனர்.

சாம் சி.எஸ் இசை அசத்தல் என்றால், பின்னணி இசை அதை விட மிரட்டலாக கொடுத்து படம் முடிந்த பின்னும் அந்த இசை காதுகளில் ஒலிக்கும் அளவிற்கு அதிர செய்துள்ளார்.

கிரண் கௌசிக் காட்சிக்கோணங்கள் பிரம்மிப்பு, ஆச்சர்யம் கலந்த ரெட்ரோ ஸ்டைலுடன் கொடுத்த விதம் அற்புதமாகவும் இது இவருக்கு முதல் படம் என்பதை நம்பமுடியாதவாறு ரத்தத்துடன் அழுத்தமாக காட்சிப்படுத்தி  மறக்க முடியாதவாறு வித்தியாசமாக கொடுத்துள்ளார்.

வசனம்-ராஜன் ராதா மணாளன், கலை இயக்குனர்-காந்தி, படத்தொகுப்பு-ஆர்.சத்திய நாராயணன், சண்டை-தினேஷ் காசி ஆகியோர் அழுத்தமான அஸ்திவாரம் போட்டு மெருகேற்றியுள்ளனர்.

இப்படத்தில் வரும் தாய் செண்டிமென்ட், கேங்ஸ்டர் கதைக்களம், ஹீரோ பில்டப், காதலிக்காக உருகுவது, ஆக்ஷனில் அடித்து நொறுக்குவது, ரெட்ரோ ஸ்டைல் என்று கேஜிஎஃப் படத்தைப் போன்று பல காட்சிகள் உணர்வுபூர்வமாக ஒத்து வருவதால் படத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. யூகிக்கக்கூடிய கதைக்களம், எமோஷன், காதல், ஆக்ஷன் என்று நிறை குறையோடு படத்தை இயக்கியிருக்கிறார். தந்தையை பழிவாங்கும் கதைக்களம், காதலியை காப்பாற்ற எடுக்கும் முயற்சி என்று முதல் பாதி தாய் செண்டிமென்ட், இரண்டாம் பாதி காதலி செண்டிமெனட் கலந்து பழி வாங்கும் கதையை இயக்கியிருக்கிறார் ரஞ்சித் ஜெயக்கொடி. திரைப்படத்தை பிரம்மாண்டமாக காட்ட நினைத்து திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். இரண்டாம் பாகத்திற்கான அறிகுறியுடன் படத்தை முடித்துள்ளார் இயக்குனர் ரஞ்சித் ஜெய்கொடி.

மொத்தத்தில் கரண் சி புரடெக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் இணைந்து தயாரித்திருக்கும் மைக்கேல் அதிரடி ஆக்ஷன் பிரியர்களை அசத்திடும் மைல்கல்.