பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்

0
328

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்

சென்னை,

தமிழ் திரையுலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் இயக்குனர் டி. பி. கஜேந்திரன் (வயது 72).  இவர், புகழ்பெற்ற நடிகை டி. பி.முத்துலட்சுமியின் மகனாவார். இவர் கே. பாலசந்தர், விசு, ராம நாராயணன் போன்றோரிடம் 60 படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.  விசுவின் உதவியாளராக பணியாற்றிய இவரும் விசுவைப் போலவே குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களையே இயக்கினார்.

இவர் எங்க ஊரு காவல்காரன், பட்ஜெட் பத்மநாபன், மிடில்கிலாஸ் மாதவன், சீனா தானா உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். மேலும், பந்தா பரமசிவம், சந்திமுகி, வேலாயுதம், வில்லு, பேரழகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான திரையுலக வாழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில வயது மூப்பு காரணமாக இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இன்று காலை காலமானார். சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நேற்று பழம்பெரும் பாடகி வாணிஜெயராம் உயிரிழந்த நிலையில் இன்று இயக்குனர் டி.பி.கஜேந்திரன் மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.