மாளிகப்புரம் சினிமா விமர்சனம் : மாளிகப்புரம் குழந்தையின் தெய்வ நம்பிக்கையை நிறைவேற்ற இளைஞன் பாதுகாப்பாக வழிகாட்டும் ஆன்மீக பயணம்.அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம் | ரேட்டிங்: 4/5
பிரியா வேணு மற்றும் நீட்ட பின்டோ தயாரித்து டிரிடெண்ட் ஆர்ட்ஸ் தமிழில் வெளியிட மாளிகப்புரம் படத்தை இயக்கியிருக்கிறார் விஷ்ணு சசி சங்கர்.
இப்படத்தில் உன்னி முகுந்தன், சிறுமி தேவா நந்தா, மாஸ்டர் ஸ்ரீPபத், சம்பத் ராம், மனோஜ் கே ஜெயன், டி.ஜெ.ரவி, சஜ்ஜூ குரூப், அஜெய் வாசுதேவ் என பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- எழுத்து-அபிலாஷ் பிள்ளை, இசை-பின்னணி இசை:-ரன்ஜி;ன் ராஜ், ஒளிப்பதிவு-விஷ்ணு நாராயணன், எடிட்டர்-ஷமீர் முகம்மது, வசனம்-வி.பிரபாகர், கலை-சுரேஷ் கொல்லம், சண்டை-ஸ்டணட் சில்வா, நடனம்-ஷெரீப், ஒப்பனை-ஜித்து பயனூர், உடை-அணில் செம்பூர், தயாரிப்பு நிர்வாகி-நிரூப் பின்டோ, பிஆர்ஒ-ஜான்சன்.
கேரளாவில் உள்ள ஒரு சிறிய மலைகிராமத்தில் எட்டு வயது சிறுமி கல்யாணி (தேவநந்தா) தன் பெற்றோர் மற்றும் பாட்டியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறாள். பாட்டி சுவாமி ஐயப்பனை பற்றி சொன்ன கதைகளை கேட்கும் சிறுமி கல்யாணிக்கு சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலுடன் வளர்கிறாள்.தன்னை சபரிமலைக்கு அழைத்துச் செல்லும்படி தனது தந்தையிடம் வற்புறுத்த கல்யாணியை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல அவளுடைய தந்தை அஜயன் ஒப்புக்கொள்கிறார். சிறுமி கல்யாணிக்கு மாலை போட்டு விரதம் இருக்கும் நிலையில் கல்யாணியின் அப்பா கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறார். குடும்பம் பேரிடியில் இருந்த நிலையிலும் அய்யப்பன் மீதுள்ள பக்தி சிறுமிக்கு குறையாமல் இருக்கிறது. சக பள்ளி தோழன் பியூஷ{ம் சிறுமி கல்யாணியும் வீட்டுக்கு தெரியாமல் சபரிமலை புறப்பட்டு செல்கிறார்கள். பஸ் பயணம் செல்லும் வழியில் சிறுமிகளை கடத்தி செல்லும் மாயி (சம்பத்ராம்) சிறுமி கல்யாணியின் மேல் கண் வைத்து தனியாக வருவதை அறிந்து பின் தொடர்ந்து கடத்த நினைக்கிறான். இந்நிலையில் திடீரென வரும் உன்னி முகுந்தன் கல்யாணியை கடத்தல் கும்பலிடம் இருந்து காப்பாற்றி ஐயப்பனை தரிசனம் செய்ய வைக்கிறார். உண்மையில் உன்னி முகுந்தன் யார்? எதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டார்? கடவுளா? மனிதனா? மீண்டும் கல்யாணி குடும்பத்துடன் பத்திரமாக சேர்ந்தாரா? என்பதுதான் கதை.
உன்னி முகுந்தன் ஐய்யப்பனுக்கு இணையான பாதுகாவலராக நடிக்கிறார். முதலில் ஐயப்ப பக்தராக தாடி மற்றும் இனிமையான தெய்வ புன்னகையுடன் தேவநந்தாவின் மனதில் சுவாமி ஐயப்பனாக தோன்றும் வடிவில் குழந்தைகளின் கடவுளாக நம்பும்படி அனைவருக்கும் காட்டப்பட்டாலும், இறுதியில் அவரின் திருப்புமுனை கதாபாத்திரம் சிறப்பாக கொடுக்கப்பட்டு யதார்த்தமாக நடித்து அனைவரையும் கவர்ந்து விடுகிறார். குழந்தைகள் மட்டுமல்ல அனைத்து வயதினருக்கும் சூப்பர் ஹீராவாக தடம் பதித்துள்ளார்.
மாளிகப்புரம் டைட்டில் ரோலில் நடித்திருக்கும் சிறுமி தேவநந்தா. சிறுமி கல்யாணியாக தன்னுடைய புன்னகையாலும், நடிப்பாலும் வசீகர முகத்துடன் இந்த வயதில் முதிர்ந்த தேர்ந்த நடிப்பு படத்தின் அனைத்து காட்சிகளிலும் கொடுத்திருக்கும் பங்களிப்பு இயற்கையாக கடவுள் தந்த வரம் போல் தோன்றுகிறது. சிறந்த குழந்தை நட்சித்திரமாக பல விருதுகளை அள்ளுவாள்.
பியூஷாக மாஸ்டர் ஸ்ரீபத் யதார்த்தமான நகைச்சுவை, கல்யாணியை பாதுகாக்கும் சிறிய தூணாக படம் முழுவதும் நிறைவாகவும், இயல்பாகவும் அசத்தியுள்ளார்.
சைஜு குருப் அந்த வழக்கமான அப்பா கதாபாத்திரத்தின் மூலம் கண் கலங்க வைத்து விடுகிறார்.
வில்லனாக சம்பத் ராம் வசனம் குறைவு என்றாலும் முறைக்கும் வில்லப் பார்வையாலேயே அனைவரின் எதிர்ப்பை சம்பாதித்து விடுகிறார்.
ரமேஷ் பிஷாரடி, டி.ஜி.ரவி, ஸ்ரீஜித் ரவி, ஆல்பி பஞ்சிகரன் மற்றும் பலர் படத்தின் மற்ற முக்கிய அரண்களாக இருந்து படத்தை உயர்த்திப் பிடித்து உள்ளனர்.
ரன்ஜின் ராஜின் இசையும், பின்னணி இசையும் படத்தின் தெய்வீக சிந்தனையையும், அனைத்து காட்சிகளையும் உயிர்ப்புடன் கொடுத்து இறுதிக் காட்சியில் பதினெட்டாம் படியில் சிறுமி கால் வைக்கும் போது மெய் சிலிர்க்க வைத்து விடுகிறார்.
விஷ்ணு நாராயணன் ஒளிப்பதிவு படத்தின் ஒவ்வொரு காட்சிக் கோணங்களிலும் உழைப்பும், கண்களுக்கு விருந்து கொடுத்து மண் மணம் மாறாமல், சபரிமலையின் காட்சிகளும், பயணங்களும், சண்டைக்காட்சிகளையும் அழகான மாலை போல் தொடுத்து கொடுத்துள்ளார். வெல்டன்.
எடிட்டர்-ஷமீர் முகம்மது, வசனம்-வி.பிரபாகர், கலை-சுரேஷ் கொல்லம், சண்டை-ஸ்டணட் சில்வா அனைவரின் உழைப்பு படத்தின் வெற்றிக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருந்துள்ளது.
மலையாளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஒடி வசூலை குவித்துக்கொண்டிருக்கும் படம் மாளிகப்புரம். குழந்தையின் தெய் நம்பிக்கையை மையமாக வைத்து நேர்த்தியான கதையை அபிலாஷ் பிள்ளை எழுதி விஷ்ணு சசி சங்கர் இயக்கியிருக்கும் மாளிகப்புரம் என்பது முதன் முதலாக சபரிமலைக்கு செல்லும் பெண் குழந்தையை அழைக்கும் பெயர். தனியாக செல்லும் இரண்டு குழந்தைகளின் ஆன்மீக பயணத்தை மையமாக வைத்து கடவுளிடம் நம்பிக்கை வைத்தால் எந்த ரூபத்திலாவது வந்து உதவி செய்வார் என்பதையும், குழந்தைகள் கண்ணோட்டத்தில் கதையை நகர்த்தி வித்தியாசமான கதைக்களத்தை கொடுத்து அனைவரும் ரசிக்கும் வண்ணமும், சிலிர்க்கும் வண்ணமும் கொடுத்து தனி முத்திரை பதித்துள்ளார் விஷ்ணு சசி சங்கர்.
மொத்தத்தில் பிரியா வேணு மற்றும் நீட்ட பின்டோ தயாரித்து டிரிடெண்ட் ஆர்ட்ஸ் தமிழில் வெளியிட மாளிகப்புரம் குழந்தையின் தெய்வ நம்பிக்கையை நிறைவேற்ற இளைஞன் பாதுகாப்பாக வழிகாட்டும் ஆன்மீக பயணம்.அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம்.