அயலி விமர்சனம் : அயலி பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி சமூதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி போராடி ஜெயிக்கும் சாமர்த்தியசாலியான சாதனைப்பெண் | ரேட்டிங்: 3.5/5

0
494

அயலி விமர்சனம் : அயலி பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி சமூதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி போராடி ஜெயிக்கும் சாமர்த்தியசாலியான சாதனைப்பெண் | ரேட்டிங்: 3.5/5

எஸ். குஷ்மாவதி எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ் தயாரிப்பில், முத்துக்குமார் இயக்கத்தில் உருவான, 8 எபிசோடுகள் அடங்கிய அயலி ஜீ 5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

இதில் அபிநயஸ்ரீ, அனுமோல், அருவி மதன், லிங்கா, சிங்கம்புலி, டிஎஸ்ஆர்.தர்மராஜ், லல்லின், காயத்ரி, தாரா, மேலோடி, பிரகதீஷ்வரன், ஜென்சன்,சிறப்பு தோற்றத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, ஸ்மிருதி வெங்கட், செந்தில்வேல், பகவதிபெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- திரைக்கதை, வசனம்-வீணை மைந்தன், சச்சின், முத்துக்குமார், இசை – ரேவா, எடிட்டிங் – கணேஷ் சிவா, ஒளிப்பதிவு – ராம்ஜி, பிஆர்ஒ ஏய்ம் சதீஷ்.

14ம் நூற்றாண்டில் பனையூர் கிராமத்தில் ஏற்படும் அசம்பாவிதத்தால் அயலி தெய்வத்தின் கோபத்தால் கிராமமே அழிந்து விட்டதாக நம்பி அந்த கிராம மக்கள் அங்கிருந்து வெளியேறி புதுக்கோட்டையில் வீரபண்ணை என்ற இடத்தில் வசிக்க தொடங்குகின்றனர்.  அதன் பின் அந்த கிராமமே பெரியோர்களால் காலம்காலமாக கட்டுப்பாடுகளை வகுத்து அயலியை காவல் தெய்வமாக வழிபாடு செய்தும், அயலி கோயிலுக்குள் குழந்தைகள் பூப்பெய்தவுடன் செல்லக் கூடாது என்றும், அதன்பின் அவர்களுக்கு திருமணத்தை உடனே முடித்து விட வேண்டும் என்று நெறிமுறை வகுத்து வாழ்கின்றனர்.

இதை தவறாமல் பின்பற்றி வரும் போது 1990 காலகட்டத்தில் அந்த கிராமத்தில் தமிழ்செல்வி என்ற எட்டாம் வகுப்பு மாணவி  தன்னுடன் படிக்கும் சக மாணவிகள் ஒன்பதாம் வகுப்பு வரை சென்ற பிறகு படிப்பை நிறுத்தி விட்டு திருமணம் செய்து விடுவதை அறிந்து அதிர்ச்சியாகிறாள். தன் தாயிடம் இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் தமிழ்செல்விக்கு படிப்பதை நிறுத்த வேண்டி வருமோ என்ற பயம் வருகிறது. நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் போய் விடுமோ என்று சிந்தனையுடன் வலம் வருகிறாள். பருவம் அடைந்தவுடன் தன் தோழிகள் சிறு வயதிலேயே படிப்பை நிறுத்திவிட்டு வீட்டு வேலைகளை கற்றுக் கொண்டு திருமணம் செய்து கொண்டு கணவர்களிடம் கஷ்டப்படுவதை பார்த்து அதிர்கிறாள். அவள் பூப்பெய்தும் நாளில் மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்கிறாள். ஒரு சில மாதங்களில் தாய்க்கு இது தெரிய வருகிறது. தன் தாயை சமாதானப்படுத்தி ஒன்பதாவது முடித்து பத்தாவது வகுப்பிற்கும் செல்கிறாள். என்ன தான் மறைத்தாலும், அவள் பூய்பெய்தவில்லை என்ற நம்பிய கிராமத்தார் பெற்றோர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். எங்கே தமிழ்ச்செல்வி பெரிய படிப்பு படித்து விடுவாளோ என்ற பயத்தில் ஊர்மக்கள் அவள் படிப்பை தொடர முட்டுக்கட்டை போடுகின்றனர். இதே சமயத்தில் தோழிகளில் வாழ்க்கையில் பிரச்சனைகள் தலை தூக்க ஆரம்பிக்கிறது. இவற்றுற்கெல்லாம் முடிவு கட்டி வீரப்பண்ணை கிராம பெண்களை ஒன்று திரட்டி தமிழ்ச்செல்வி எப்படி போராடினாள்? தன்னைப் போல் மற்ற குழந்கைகளும் கல்வி கற்க வேண்டும் என்று என்ன திட்டம் தீட்டினாள்? அதில்  வெற்றி பெற்றாளா? ஆண்களை எதிர்த்து குரல் கொடுத்து படிக்கும் தன் உரிமையை நிலை நாட்டச் செய்தாளா? என்பதே க்ளைமேக்ஸ்.

தமிழ்ச்செல்வியாக அபிநயஸ்ரீ பதிமுன்று வயதிற்கேற்ற தோற்றத்தில் துள்ளித் திரிந்து செல்லும் பள்ளி மாணவியாக, அம்மாவிடம் சண்டை போட்டு அடக்கி கைப்பாவையாக மாற்றி மாட்டி விடுவதும், தந்தையிடம் வெகுளித்தனமாக அடம் பிடித்து அழுது காரியத்தை சாதித்து கொள்வதும், தன் தோழிகளுக்கு அறிவுரை கூறி மாற்ற நினைப்பதும், அதன் பின் ஊர் பெண்களை திசை திருப்பி தன் வசப்படுத்தும் சாதுர்யம் நிறைந்த பெண்ணாக, ஊர் பெரியவர்களை எதிர்த்து போராடி சாதிக்கும் இளம் பெண்ணாக தன் நடிப்பால் ஆச்சர்யப்பட வைத்துவிடுகிறார். பாராட்டுக்கள்.

அம்மா குருவம்மாளாக அனுமோல் அனுபவமும், பக்குவமும், கிராமத்து குறும்புடன் அதகளம் பண்ணிவிடுகிறார்.

அன்பும், கண்டிப்பும் ஒரு சேர கலந்த அப்பா தவசியாக அருவி மதன்,  சத்திவேலாக லிங்கா, திருப்பதியாக சிங்கம்புலி, கணக்கு வாத்தியார் மூர்த்தியாக டிஎஸ்ஆர்.தர்மராஜ், தோழி மைதிலியாக லல்லின், ஈஸ்வரியாக காயத்ரி, கயல்விழியாக தாரா, செல்வியாக மேலோடி, முருகனாக  பிரகதீஷ்வரன், சேகராக ஜென்சன், சிறப்பு தோற்றத்தில் இன்ஸ்பெக்டராக லட்சுமி பிரியா சந்திரமௌலி, ஆங்கில வாத்தியாராக ஸ்மிருதி வெங்கட், கலெக்டராக செந்தில்வேல், எம்எல்ஏவாக பகவதிபெருமாள் என்று எண்ணற்ற நட்சத்திர கதாபாத்திரங்கள் படத்தின் கதைக்கு உறுதுணையாக இருந்து படத்தின் வெற்றிக்கு வழி வகை செய்துள்ளனர்.

பெண் இசையமைப்பாளர் ரேவா எட்டு எபிசோடுகளில் நடக்கும் சம்பவங்களுக்கேற்ற இசையை தனித்துவமாக கொடுத்து கவனிக்க வைக்கிறார். இவரின் கடின உழைப்பிற்கிற்கான பலன் விரைவில் கை கூடி பல படங்களுக்கு இசையமைப்பார்.

கிராம பின்னணியின் கதைக்களத்திற்கேற்ற 1990 கால கட்டத்தை கண் முன் நிறுத்தி, அன்று நடக்கும் சம்பவங்களை காட்சிக் கோணங்களில் சிறப்பாக கொடுத்து, கோயில், வீடுகள், பள்ளி, விழாக்கள், சடங்குகள் என்று அனைத்தையும் அழுத்தமாக கொடுத்து அசத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி.

எடிட்டர் கணேஷ் சிவா கச்சிதமாக கொடுத்துள்ளார்.

வீணை மைந்தன், சச்சின், முத்துக்குமார் ஆகியோரின் திரைக்கதை, வசனம் படத்திற்கு பலம்.

1990ல் நடக்கும் கதைக்களம் என்றாலும் இன்றளவும் பல கிராமங்களில் பெண் கல்வி என்பது எட்டாக்கனியாக உள்ளது. இந்தத் தொடர் தமிழ் செல்வி என்ற இளம்பெண்ணின் வாழ்க்கையையும், அவளைச் சுற்றியுள்ள சமூகத்தின் நெறிமுறைகள் மற்றும் அதன் நம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தையும் சுற்றி வருகிறது.

8 அத்தியாயங்கள் கொண்ட தொடரில் பழங்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களை உடைத்து, ஒரு இளம் பெண் மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக போராடுகிறார்.

நட்சத்திர நடிகர்கள், சமூக செய்தி மற்றும் பொழுதுபோக்கு கதைக்களத்துடன், இந்திய சமுதாயத்தில் பெண் குழந்தைகளின் கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட ஒரு எழுச்சியூட்டும் கதை.

ஒரு வலிமையான பெண்ணின் போராட்டங்களையும் சாதனைகளையும் காட்டுவதன் மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை அழுத்தமாக சொல்லி இயக்கியிருக்கிறார் முத்துக்குமார்.

சமூக வளைதளங்களில் இத்தொடர் திரையுலகினர் முதல் ரசிகர்கள் வரை கொண்டாடும் பிரபல வெப் தொடராக வெற்றி வாகை சூடிக் கொண்டிருக்கிறது.

எஸ். குஷ்மாவதி எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ் தயாரிப்பில், 8 எபிசோடுகள் நிறைந்த ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் அயலி பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி சமூதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி போராடி ஜெயிக்கும் சாமர்த்தியசாலியான சாதனைப்பெண்.