J பேபி விமர்சனம் : J பேபி தாயின் தியாகத்தையும், பிள்ளைகளின் பரிதவிப்பையும் இணைக்கும் உணர்ச்சிகள் நிறைந்த மனித நேய பாசப்போராட்ட வெற்றி பயணம் | ரேட்டிங்: 4.5/5

0
686

J பேபி விமர்சனம் : J பேபி தாயின் தியாகத்தையும், பிள்ளைகளின் பரிதவிப்பையும் இணைக்கும் உணர்ச்சிகள் நிறைந்த மனித நேய பாசப்போராட்ட வெற்றி பயணம் | ரேட்டிங்: 4.5/5

நீலம் புரொடக்ஷன்ஸ், நீலம் ஸ்டுடியோஸ், விஸ்டாஸ் மீடியா சார்பில் பா.ரஞ்சித், அபயானந்த் சிங், பியூஷ் சிங், சௌரப் குப்தா, அதிதி ஆனந்த், அஷ்வினி சௌத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் J பேபி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுரேஷ் மாரி

இதில் ஊர்வசி, தினேஷ், மாறன் , சேகர் நாராயணன், மெலடி டார்கஸ்,தாட்சாயிணி, இஸ்மத் பானு, சபீதா ராய், மாயா ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை – டோனி பிரிட்டோ, ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன், எடிட்டிங் – சண்முகம் வேலுச்சாமி, கலை – ராமு தங்கராஜ், பாடல்கள் – கபிலன், உமாதேவி , விவேக். பிஆர்ஒ-குணா.

ஒரு நாள் காலை வேளையில் செந்தில் (மாறன்)  மற்றும் சங்கர் (அட்டகத்தி தினேஷ்) ஆகிய இரண்டு சகோதரர்கள் அண்ணாநகர் கே4 காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்படுவதில் இருந்து கதைக்களம் தொடங்குகிறது. சத்தியாநகரில் வசிக்கும் மூத்த சகோதரர் செந்தில் (மாறன்) பெயிண்டராகவும், இளைய சகோதரர் சங்கர் (அட்டகத்தி தினேஷ்) ஷேர் ஆட்டோ டிரைவராகவும் உள்ளனர். மாறனின் திருமணத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு தற்போது வரை ஒருவரோடொருவர் பேசாமல் இருக்கும் சகோதரர்கள் இருவரும் தங்களை ஏன் அங்கு அழைத்தார்கள் என்று யோசித்துக்கொண்டு காவல் நிலையத்தை அடைகிறார்கள். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் அவர்களது அம்மா J பேபி (ஊர்வசி) எங்கே என்று கேட்க இருவரும் அம்மா இருக்கும் இடம் தெரியாமல் முழிக்கிறார்கள். அப்போது அவர்களது தாயார் கொல்கத்தாவில் உள்ள காவல்நிலையத்தில் இருப்பது போலீசாரிடம் இருந்து தெரிய வருகிறது. அதன் பின் இன்ஸ்பெக்டர் இரு சகோதரர்களையும் எச்சரித்து, அவர்கள் கொல்கத்தா சென்று தங்கள் தாயை பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்து தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கொல்கத்தாவில் மூர்த்தி என்பரை தொடர்பு கொள்ள நம்பரை கொடுத்து அனுப்புகிறார். வீட்டிற்கு வரும் சகோதரர்கள் நடந்தவைகளை தங்கள் உடன் பிறந்தவர்களிடம் தெரிவிக்க, அவர்களும் அம்மாவை பத்திரமாக கொண்டு வர பணத்தை ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர். அம்மாவை அழைத்து வர சகோதரர்கள் கொல்கத்தா செல்கின்றனர். அங்கே மூர்த்தியை பார்த்து இருவரும் கொல்கத்தா காவல்நிலையத்திற்கு செல்ல அங்கே அம்மாவை வெகு தொலைவில் உள்ள பாரக்பூர் அரசு பெண்கள் காப்பகத்திற்கு அழைத்து சென்று விட்டதாக கூறுகின்றனர். இதனால் மூர்த்தி இருவரையும் தனக்கு தெரிந்தவர் இடத்தில் தங்க வைத்து விட்டு மறுநாள் பாரக்பூருக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே சென்றவுடன் அம்மா காணாமல் போய் விட்டதை அறிந்து அதிர்கின்றனர். அதன் பின் சசோதரர்கள் இருவரும் அம்மாவை கண்டுபிடித்தார்களா? J பேபி கிடைத்தாரா? மீண்டும் குடும்பத்துடன் இணைந்தாரா? என்பதே J பேபி. படத்தின் உயிரோட்டமுள்ள காட்சிகளின் க்ளைமேக்ஸ்.

ஊர்வசி மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் என ஐந்து பிள்ளைகளின் தாயாக J பேபி என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். படம் ஆரம்பித்தவுடன் பிள்ளைகளின் தேடல் காட்சிகள் என்று படம் விரிவடைய அதன் பின் வரும் காட்சியில் தான் பேபியின் என்ட்ரியும், அவரின் பிள்ளைகளின் மேல் அன்பும், சண்டையிட்டு கொள்ளும் மகன்களின் நிலையை பார்த்து பரிதவிப்பும், பின்னர் மனச்சிதைவு ஏற்பட்டு செய்யும் காரியங்கள் பிள்ளைகளுக்கும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதும், மனநல காப்பகத்தில் விட்ட பின் ஏற்படும் அதிர்ச்சி, அங்கிருந்து செல்வதற்காக எடுக்கும் முயற்சிகள், மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல் டீக்கடைக்காரரை ஏமாற்றி விட்டு செல்வதும்,தெரியாமல் கொல்கத்தாவிற்கு சென்று விட, ஜட்ஜ், போலீஸ், காப்பகம், மனநல டாக்டர் என்று ஒரு இடம் விடாமல் அவர் பண்ணும் அளப்பரையும், ஸ்டாலின், இந்திரகாந்தி, ஜெயலலிதா தெரியும் என்று அதட்டல் , உருட்டல் என்று அனைவரையும் மிரட்டும் விதம், இறுதியில் நீதிமன்றக்கதவை பூட்டி விட்டு நடையை கட்டும் ஊர்வசியின் அசால்டான நடிப்பும், அங்கிருக்கும் அனைவரையும் நைனா, சாமி என்று அன்பொழுக கூப்பிடும் குரலுமாக படம் முழுவதும் தன் நடிப்பால் சிரிக்கவும் வைத்து கூடவே கண் கலங்கவும் வைத்து விடுகிறார். ஒரு தாயின் பரிதவிப்பை, இயலாமையை,  பாசத்தை, ஆசையை தன் நடை, உடை, பாவனையில் அசத்தியுள்ளார். இவரின் உணர்ச்சிகரமான தத்ரூபமான நடிப்பிற்கு நிச்சயம் விருதுகள் காத்திருக்கின்றன.

மூத்த மகன் செந்திலாக மாறன் ஆரம்பம் முதல் இறுதி வரை அவர் வரும் காட்சிகள் எல்லாம் கை தட்டல் பெறுகிறது. திருமண தடங்களுடன் ஆரம்பிக்கும் பகை தன் சகோதரனை திட்டிக் கொண்டே இருப்பதும், எதற்கும் பிடி கொடுக்காமல் அடம் பிடிப்பதும், வண்டியில் ஏறும் போது கூட விரைப்பாக செல்வது, ராணுவர் தங்கும் விடுதியில் மது குடிக்க எடுக்கும் முயற்சி, அதன் பின் தண்ணீராக இருப்பதை பார்த்து எரிச்சலுடன் பார்ப்பது,அம்மாவை தேடுவதற்காக ஒன்றாக பயணிக்கும் போது நடக்கும் சம்பவங்கள், மனம் மாறிய பிறகு தன் தம்பி எடுத்த சட்டையை அணிந்து கொண்டு செல்வது என்று ஒவ்வொரு காட்சியிலும் குணச்சித்திர நடிப்பில் ஜொலிக்கிறார்.

சங்கராக அட்டகத்தி தினேஷ் தன் அண்ணனை ஆசையாக என்னப்பா என்று அழைப்பதும், தன் அண்ணனிடம் கோபித்துக் கொள்ளாமல் பொறுமையாக இருப்பது, பொறுப்புள்ள பிள்ளையாக அடக்கமாக அதே சமயம் அழுத்தமாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கொல்கத்தாவில் உதவி செய்யும் மூர்த்தியாக வருபவரின் யதார்த்தமான பேச்சு, உபசரிப்பு, பரிவு, ஈகை தமிழ் மண் கமழும் இராணுவ வீரரின் அளப்பரிய மனது, சிக்கல் ஏற்படும் போதெல்லாம் தைரியத்துடம் துணிந்து நின்று குரல் கொடுத்து, சகோதரர்களுக்கு உதவி செய்வது என்று உண்மையான மனிதரின் பண்பும், தன் குடும்பத்தை இறுதியில் காட்டி கண் கலந்த வைத்து விடுகிறார்.

பேபியின் இளையமகள் செல்வியாக மெலடி டார்கஸ் தன் தாயிடம் கொண்ட அன்பையும், தன் தாய்க்கு ஏற்பட்ட பிரச்சனைகளை அழகாக டாக்டரிடம் விவரிப்பது, தாய் காப்பகத்தை விட்டு செல்லும் போது அழுதுகொண்டே பின்னாடி ஒடிப்போகும் அப்பாவி மகளாக மிகையில்லா நடிப்பு தத்ரூபம்.

சேகர் நாராயணன், தாட்சாயிணி, இஸ்மத் பானு, சபீதா ராய், மாயா ஸ்ரீ என்று ஏகப்பட்ட புதுமுகங்கள் தங்கள் நடிப்பால் தேர்ந்த அறிந்த முகங்களாக தெரிய வைத்துள்ளனர்.

கபிலன், உமாதேவி, விவேக் பாடல்களில் டோனி பிரிட்டோ இசையும், பின்னணி இசையும் மனதை உருக்கிடும்.

ஜெயந்த் சேது மாதவன் சென்னை டூ கொல்கத்தா ரயில் பயணம் ஒரு மறக்க முடியாத தருணங்களை ஏற்படுத்துவதோடு, காவல் நிலையம், மனநலகாப்பகம், கொல்கத்தாஅரசு காப்பகம், நீதிமன்றம் என்று குறைவில்லாமல் நிறையாக அசத்தலாக கொடுத்து காட்சிக் கோணங்களை செதுக்கியுள்ளார்.

எடிட்டிங் – சண்முகம் வேலுச்சாமி, கலை – ராமு தங்கராஜ் காட்சிகளில் பிரதிபலிப்பது கச்சிதம்.

இயக்குனர் சுரேஷ் மாரி உண்மையில் ஒரு குடும்பத்தில் நடந்த வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட J பேபியில் சகோதரரர்கள் சண்டை, மோதல்கள், சச்சரவுகள், இனிய தருணங்கள், தாயின் மனச்சிதைவு நோயால் ஏற்படும் விபரீதங்கள் என்று அனைத்தையும் குழப்பபில்லாமல் தெளிவாக சிறிய அத்தியாயங்களாக நேர்த்தியுடன் கொடுத்துள்ளார். படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் மனித இயல்பு, மனித நேயம் சூழ்நிலைகளை புரிந்து கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்திவிடுவதில் ஐயமில்லை. மகன்களின் பார்வையில் அம்மாவைப் பற்றிய இன்ப நினைவுகளை வழங்கிய இயக்குனர், அம்மா கிடைத்தவுடன் அவரின் குணாதிசயங்களையும், பிள்ளைகள் எந்தளவு பாதிப்புக்குள்ளானார்கள் என்பதையும் சின்னச்சின்ன காட்சிகள் மூலம் விவரித்திருக்கும் பாங்கு படத்தின் உணர்ச்சிகரமான தருணங்களை மீட்டெடுத்து மனதை நெகிழ செய்து விடுகிறது.  தாயின் அன்போடு பிள்ளைகளின் பாசத்தையும் படிப்பினையோடு கலந்த கொடுத்த இயக்குனர் சுரேஷ் மாரியின் கடின உழைப்பிற்கும், முயற்சிக்கும் பாராட்டுக்கள், இவரின் அறிமுக படைப்பு பல விருதுகளை அள்ளுவது நிச்சயம்.

மொத்தத்தில் நீலம் புரொடக்ஷன்ஸ், நீலம் ஸ்டுடியோஸ், விஸ்டாஸ் மீடியா சார்பில் பா.ரஞ்சித், அபயானந்த் சிங், பியூஷ் சிங், சௌரப் குப்தா, அதிதி ஆனந்த், அஷ்வினி சௌத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் J பேபி தாயின் தியாகத்தையும், பிள்ளைகளின் பரிதவிப்பையும் இணைக்கும் உணர்ச்சிகள் நிறைந்த மனித நேய பாசப்போராட்ட வெற்றி பயணம்.