லைசன்ஸ் விமர்சனம் : லைசன்ஸ் பெண்களின் உரிமைகளுக்காக விடாமுயற்சியுடன் வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து போராடும் புதுமைப்பெண் | ரேட்டிங்: 2.5/5

0
200

லைசன்ஸ் விமர்சனம் : லைசன்ஸ் பெண்களின் உரிமைகளுக்காக விடாமுயற்சியுடன் வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து போராடும் புதுமைப்பெண் | ரேட்டிங்: 2.5/5

ஜே ஆர் ஜி புரொடக்‌ஷன்ஸ்; என்.ஜீவானந்தம் தயாரித்திருக்கும் லைசன்ஸ் படத்தை இயக்கியுள்ளார் கணபதி பாலமுருகன்.

இதில் சூப்பர் சிங்கர் பிரபலம் ராஜலட்சுமி, ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா, கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு- காசி விஸ்வநாதன், இசை-பைஜூஜேக்கப், எடிட்டர்-வெரோனிகா பிரசாத், பிஆர்ஒ- கேஎஸ்கே.செல்வா

ராதாரவியின் மகளான பாரதி(ராஜலெட்சுமி) சிறுவயதிலிருந்தே தப்பை தட்டிக் கேட்கும் துணிச்சலான பெண்ணாக வளர்கிறாள். ஆசிரியர் பணியில் சேர்ந்து அதன் பின் திருமணம் செய்து கொண்டு 8 வயதில் மகளும் இருக்க, பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு குரல் கொடுத்து பிரபலமடைகிறார். இதனிடையே பாரதி வேலை செய்யும் பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவர் பாலியல் கொடுமைக்கு தள்ளப்பட ஆத்திரமடையும் பாரதி அந்த குற்றவாளியை தண்டிக்க முயற்சிக்க அது நடக்காமல் போகிறது.இதனால் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் பாரதி தனக்கு துப்பாக்கி தர வேண்டும் என்று மத்திய அரசிடம் விண்ணப்பிக்க சட்ட திட்டங்கள் அவருக்கு சாதகமாக இல்லாததால் நிராகரிக்கப்படுகிறார்.இதனால் பொங்கி எழும் பாரதி தன் வக்கீல் சகோதரன் மூலம் 18 வயது நிரம்பிய பெண்களின் பாதுகாப்பிற்கு, தற்காப்பிற்கும் துப்பாக்கி கொடுக்க வேண்டும் என்று பொதுநல மனுவை போடுகிறார். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வருகிறது. இந்த விசாரணையில் பாரதியின் குடும்பம், சந்தித்த பிரச்சனைகள் வெளிவருகிறது.பொதுநல வழக்கு தனிநபர் வழக்காக திசை மாறக் காரணம் என்ன?  பாரதியின் சிறு வயதில் நடந்த சம்பவம் என்ன? பாரதி தந்தையிடம் ஏன் இருபது ஆண்டு காலம் பேசாமல் இருக்கிறார். மறைக்கப்பட்ட உண்மை என்ன? பெண்களின் பாதுகாப்பிற்காக துப்பாக்கி கொடுக்க நடந்த வழக்கில் ஜெயித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சூப்பர் சிங்கர் பிரபலம் ராஜலட்சுமி செந்தில் அறிமுக படத்தில் கதாநாயாகியாக முதன்மை கதாபாத்திரத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக குரல் கொடுப்பதோடு போராட்ட குணம் கொண்ட பெண்ணாக வருகிறார். தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றவர்களுக்கு ஏற்படாமல் இருக்க எடுக்கும் எச்சரிக்கை நடவடிக்கைகள், எடுக்கும் முடிவுகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஒரு தீர்வை கொடுக்க நினைக்கும் மிரட்டலான ரோலில் யதார்;த்தமாக வாழ்ந்திருக்கிறார்.

பாசமிகு தந்தையாக ராதாரவி, மகளின் கோபத்தை எதிர் கொள்ள முடியாமல் தவிக்கும் தருணம், மகளின் பாதுகாப்பிற்காக  துணையாக செல்வதும், இறுதியில் அவரின் தியாகத்தை மகள் உணரும் தருணத்தில் வெளிப்படுத்தும் இயல்பான அமைதியான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார்.

சிறு வயது பாரதியாக வந்து தைரியமாக போராடும் பள்ளி மாணவியாக அபி நட்சத்திரா நீண்ட வசன உச்சரிப்பிலும் நடிப்பிலும் அசத்தியுள்ளார். என்.ஜீவானந்தம், நீதிபதியாக நடித்திருக்கும் கீதா கைலாசம், அரசியல்வாதியாக பழ கருப்பையா, வையாபுரி, நமோ நாராயணன், தன்யா அனன்யா உள்ளிட்ட அனைவரும் கதாபாத்திரங்களின் தன்மையை உணர்ந்து கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

காசி விஸ்வநாதனின் ஒளிப்பதிவு மற்றும் பைஜு ஜேக்கப்பின் பாடல்கள் மற்றும் அழுத்தமான பின்னணி இசை படத்திற்கு பலம். எடிட்டர்-வெரோனிகா பிரசாத் கச்சிதமாக தொகுத்துள்ளார்.

லைசன்ஸ் படத்திற்கு பொருத்தமான டைட்டிலை தேர்ந்தெடுத்திருப்பதற்கு பாராட்டுக்கள்.இக்கட்டான தருணத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அவர்களை தற்காத்து கொள்ள துப்பாக்கி வேண்டும் என்ற பொதுநல வழக்கு போடும் சமூக அக்கறை கொண்ட பெண்ணின் கதைக்களத்தில் அன்றாடம் கேள்விப்படும் பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இயக்கியிருக்கிறார் கணபதி பாலமுருகன். இதில் ப்ளாஷ்பேக் காட்சிகளுடன்,நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமை புள்ளி விவரங்களுடன், அழுத்தமான அர்;த்தமுள்ள கேள்விகளுடன் கூடிய வழக்காடும் வசனங்கள், நீதிமன்ற காட்சிகளுடன் தந்தை, மகள் பாசத்தையும் கலந்து விழிப்புணர்வுடன் புது முகங்களை வைத்து சொல்ல வந்த கருத்தை நேர்த்தியுடன் கொடுத்து இயக்கியுள்ளார் கணபதி பாலமுருகன். துப்பாக்கி உரிமத்தின் சிக்கலான செயல்முறைகளையும், கடுமையான நிபந்தனைகள் இருப்பதையும் சுட்டிக்காட்டி சாமான்யர்களுக்கு உடனே கொடுத்து விடும் ஆயுதம் இல்லை என்பதையும் இறுதியில் நீதிபதியின் வாயிலாக எடுத்துரைத்துள்ளது சிறப்பு.துப்பாக்கி உரிமத்திற்கான பாரதியின் தேடலானது, பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்வதிலும்; அவரது போராட்டம் பாலின சமத்துவத்திற்கான பரந்த சமூகப் போராட்டத்தை பிரதிபலிக்கிறது, ஆழமாக வேரூன்றிய இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வதில் ஏற்படும்; சிக்கல்கள் மற்றும் தடைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உரிமத்தைப் பெறுவதற்கான சட்டப் போராட்டத்தில் அவள் வெற்றி பெறுகிறாளா என்பது சொல்லப்படாத முடிவின் முக்கிய அம்சமாக அமைகிறது, இது பார்வையாளர்களை நீதி மற்றும் சமூக விதிமுறைகளின் சிக்கல்களைப் பற்றி சிந்திக்க வைக்கிறது என்பதே படத்தின் வெற்றி.

மொத்தத்தில் ஜேஆர்ஜி புரடெக்‌ஷன்ஸ் என்.ஜீவானந்தம் தயாரித்திருக்கும் லைசன்ஸ் பெண்களின் உரிமைகளுக்காக விடாமுயற்சியுடன் வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து போராடும் புதுமைப்பெண்.