பானி பூரி சினிமா விமர்சனம் : பானி பூரி இக்கால இளம் காதலர்களின் மனநிலையை அச்சு அசலாக பிரதிபலிக்கும் வர்ணஜால கண்ணாடி | ரேட்டிங்: 3/5

0
414

பானி பூரி சினிமா விமர்சனம் : பானி பூரி இக்கால இளம் காதலர்களின் மனநிலையை அச்சு அசலாக பிரதிபலிக்கும் வர்ணஜால கண்ணாடி | ரேட்டிங்: 3/5

ஃபுல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து 8 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர், தமிழ் ஓடிடியான ஷார்ட்ஃபிலிக்ஸில் (ளூழசவகடiஒ) ஸ்ட்ரீம் செய்யப்பட பாலாஜி வேணுகோபால் ‘லிவ்-இன்’ ரிலேஷன்ஷிப் கான்செப்ட்டில் இயக்கியுள்ள ஒரு புதிய இணையத் தொடர் ‘பானி பூரி’.

இந்த ‘பானி பூரி’ இணையத்தொடரில் லிங்கா, ஜம்பிகா, இளங்கோ குமரவேல், கனிகா, ஸ்ரீகிருஷ்ண தயாள், கோபால், வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை – நவ்நீத் சுந்தர், ஒளிப்பதிவு – பிரவீன் பாலு, படத் தொகுப்பு – பி.கே., ஒலி வடிவமைப்பு , கலவை – ராஜேஷ் முக்கத், தயாரிப்பு வடிவமைப்பு – சரவணன் வசந்த், உடைகள் – தீபிகாஷி, நிர்வாக தயாரிப்பு – செல்லதுரை, கிரியேட்டிவ் தயாரிப்பு – கருப்பையா சி.ராம், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்.

லிங்கா மற்றும் ஜம்பிகா காதலர்கள். தன் தோழியின் காதல் திருமண வாழ்க்கை பிரிவில் முடிந்ததை எண்ணி, தன் காதலும் கொஞ்ச நாளில் பிரிவில் முடிந்தால் என்ன செய்வது என்றெண்ணி ஜம்பிகா லிங்காவின் காதலை முறித்துக் கொள்ள முடிவு செய்து லிங்காவிடம் தெரிவிக்கிறாள். இதனை ஏற்காத லிங்கா ஜம்பிகாவை சமாதானம் செய்ய முயற்சித்தும் முடியாமல் போக ஜம்பிகாவின் அப்பா குமரவேலிடம் தெரிவிக்கிறார். குமாரவேல் இருவரையும் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வருகிறார். இவர்கள் ஒருவரையோருவர் புரிந்து கொண்டால் தான் உண்மையான காதலை அறிவார்கள் என்பதை கருத்தில் கொண்டு சில நிபந்தனைகளுடன் ஒரு வாரம் சேர்ந்து இருக்கச் சொல்கிறார். இதனை ஏற்கும் லிங்கா ஜம்பிகாவின் கம்பெனிக்கு சொந்தமான அபார்ட்மெண்டில் தங்குகின்றார். அதன் பின் அவர்கள் இருவரும் ஒரு வாரம் சேர்ந்த இருந்த பிறகு என்ன முடிவு எடுத்தார்கள்? அடுக்குமாடி குடியிருப்பில் அவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் என்ன? இருவரும் ஒன்றாக சேர்ந்தார்களா? என்பதே படத்தின் முடிவு.

லிங்கா வெப் சீரீயஸின் டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு ரோலும் பேசும்படியாக அசத்தலான நடிப்புடன் சிறப்பாக இருக்கிறது என்பதே சாட்சி. காதலுக்காக இறுதி வரை போராடும் காதலன் கதாபாத்திரத்தில் விட்டுக்கொடுக்கும் மனோபாவம், சொல்வதை சரியென்று புரிய வைக்க முயன்று இறுதியில் சமாதானமாக போவது, காதலியின் தந்தைக்கு மரியாதை கொடுக்கும் அதே சமயம் தன் குடும்பத்தாருக்கும் சம பங்கு குறையாமல் பார்த்துக் கொள்ளும் திறன், காதலியின் தந்தைக்கு துணையாக அவர் எடுக்கும் முயற்சி என்று படம் முழுவதும் வந்தாலும் அலுப்பு ஏற்படாத வண்ணம் கதையை தாங்கி பிடித்து அசத்தியுள்ளார் லிங்கா.

ஜம்பிகா காதலியாக பிடிவாத குணம்,ஆணாதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுப்பது, தன் தந்தை மீது இருக்கும் பாசத்தில் காதலை துறக்க நினைப்பது, எப்போழுதுமே ஏதாவது காரணம் காட்டி காதலனுடன் சண்டை போடுவது, அதற்கான காரணத்தையும் பின்னர் சொல்லும் போது மனதில் இடம் பிடித்து லிங்காவிற்கு இணையாக படம் முழுவதும் வந்து அவருக்கு ஈடு கொடுத்து நடித்திருப்பது சிறப்பு.

இளங்கோ குமரவேல் ஜம்பிகாவின் தந்தையாக, காதலர்களை சேர்த்து வைக்க முயற்சிகள் செய்யும் நல்ல தந்தையாக, தன் மனைவி விட்டு பிரிந்தாலும் மற்றவர்களுக்கு தகுந்த அறிவுரைகளை சொல்லி சேர்த்து வைக்கும் மனோபாவம், இறுதியில் திரும்பி வரும் மனைவியை ஏற்று கொள்ள சொல்லும் காரணம் என்று வசனத்திலும், நடிப்பிலும் இயல்பாக பன்முக தன்மையுடன் நடித்துள்ளார்.

மற்றும் நாயகனின் அண்ணனாக ஸ்ரீகிருஷ்ண தயாள், அண்ணியாக கனிகா, அடுக்குமாடி குடியிருப்புவாசி கோபால், திருமணமாகாமல் விரக்தியில் இருக்கும் நண்பனாக வினோத் சாகர் தாழ்வு மனப்பான்மையை வெளிப்படுத்தும் இடத்தில் யதார்த்தமாகவும், அழுத்தமாகவும் பதிவிடும் இடம் மனதை தொடுகிறது.

காதலியின் வீடு, அடுக்குமாடி குடியிருப்பு இரண்டு இடங்களை அலுப்பு ஏற்படாத வண்ணம் ஒவ்வொரு காட்சிக்கோணத்தையும் வித்தியாசமான முறையில் அமைத்திருக்கும் பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது.

நவ்நீத் சுந்தரின் இசை வித்தியாசமான கணிணி தொழில்நுட்பம் சிறப்பான ஒலி சப்தங்களை நுணுக்கமாக கையாண்டுள்ளது வரவேற்கத்தக்கது.

படத் தொகுப்பு – பி.கே அளவாக கொடுத்துள்ளார்.

காதலன் தாண்டாயுதபாணி (லிங்கா) பெயரில் இருக்கும் பாணியையும், காதலி பூர்ணிமா (ஜம்பிகா)வின் பெயரில் இருந்து பூரியையும் ஒன்று சேர்த்து பானி பூரி என்ற இந்த இணைய தொடருக்கு பெயரிடப்பட்டுள்ளது. நவநாகரீக உலகில் காதல் எவ்வாறு பார்க்கப்படுகிறது, காதலித்து புரிதல் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு ஈகோவால் விவாகரத்து பெறுவது, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, சின்ன விஷயத்தை பெரிதாக்கி சண்டைபோடுவது, பிரிந்து வாழ்வது, சுயநலமாக யோசிப்பது, பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்தாலும் அதிலும் பல சிக்கல்கள், காதலித்து திருமணம் செய்தாலும் பிரச்சனைகள் என்று பலவிதங்களில் திருமண பந்தத்தை அலசி விரசம் இல்லாமல் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் வண்ணம் இருவரின் பிரச்சனையை மையப்படுத்தி நல்ல கருத்துடன் முடித்து அற்புதமாக இயக்கியுள்ளார் பாலாஜி வேணுகோபால்.

ஃபுல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து தமிழ் ஓடிடியான ஷார்ட்ஃபிலிக்ஸில் வெளி வந்திருக்கும் 8 எபிசோடுகள் கொண்ட பானி-பூரி தொடர் இக்கால இளம் காதலர்களின் மனநிலையை அச்சு அசலாக பிரதிபலிக்கும் வர்ணஜால கண்ணாடி.