அஸ்வின்ஸ் சினிமா விமர்சனம் :  தியேட்டரில் மட்டுமே பார்க்க வேண்டிய புதுமையும் பழமையும் கலந்த அனுபவம் தரும் பயமுறுத்தும் துரத்தல் த்ரில்லர் | ரேட்டிங்: 4/5

0
517

அஸ்வின்ஸ் சினிமா விமர்சனம் :  தியேட்டரில் மட்டுமே பார்க்க வேண்டிய புதுமையும் பழமையும் கலந்த அனுபவம் தரும் பயமுறுத்தும் துரத்தல் த்ரில்லர் | ரேட்டிங்: 4/5

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (SVCC) BVSN பிரசாத் தயாரித்திருக்க, பாபிநீடு பி வழங்கும் அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கியிருக்கும் படம் ‘அஸ்வின்ஸ்’.

இதில் அர்ஜுனாக வசந்த் ரவி, ஆர்த்தியாக விமலா ராமன், ரித்விகாவாக சரஸ்வதி மேனன்,வருணாக முரளிதரன் எஸ், ராகுலாக உதயதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை – விஜய் சித்தார்த், ஓளிப்பதிவு – ஏ.எம் எட்வின் சகே, பப்ளிசிட்டி டிசைனர் (போஸ்டர்கள்) – சிவா,ஆடை வடிவமைப்பாளர் – காஞ்சன், சவுண்ட் டிசைனர் – சின்க் சினிமா (சச்சின் மற்றும் ஹரி), கலை – டான் பாலா, எடிட்டர் – வெங்கட் ராஜன், இணைத் தயாரிப்பாளர் – பிரவீன் டேனியல், பிஆர்ஒ- சுரேஷ் சந்திரா, ரேகா டிஒன்.

கதைக்களம் இரண்டு காலகட்டமாக பயணிக்கிறது. முதலில் அஸ்வின்ஸ் பற்றிய பின்னணி தகவல்கள் ஒவிய வரைபடத்தின் மூலம் விவரிக்கப்படுகிறது. முன்னொரு காலத்தில் விவசாயி ஒருவரின் இரட்டை சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்க மனவேதனையில் அந்த விவசாயி அஸ்வினி தேவர்களை நோக்கி கடும் தவம் இருக்கிறார். அந்த விவசாயின் தவத்தை மெச்சி தரிசனம் தரும் அஸ்வினி தேவர்கள் ஒருவரை மட்டுமே பிழைக்க வைக்க முடியும், அவனை யாராலும் அழிக்க முடியாது என்றும் அவன் இறப்பு இயற்கையால் மட்டுமே ஏற்படும் என்று கூறி குதிரை தலையுடைய மனித வடிவம் கொண்ட இரண்டு சிலைகளை அந்த விவசாயிடம் கொடுத்து இதை பிரிக்காமல் சேர்த்தே வைத்திருக்க வேண்டும் என்று நிபந்தனையுடன் மறைகின்றனர். ஆனால், உயிருடன் இருக்கும் சிறுவன் தன் சகோதரனை நினைத்து மனவேதனையில் இருக்கும் போது சாத்தான் சிறுவனிடம் வந்து ஒரு குதிரைச் சிலையை கொடுத்தால் சகோதரனை மீண்டும் திருப்பி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூற அதனை நம்பி அந்தச் சிறுவன் கொடுக்கிறான். அவனை ஏமாற்றி அந்தச் சிலையை எடுத்துச் செல்லும் சாத்தான் நரகத்தில் இருந்து ஒரு சாத்தானை  சகோதரன் என்று கூறி  அந்த சிறுவனிடம் அனுப்பி வைக்கிறது. அந்த ஊருக்கு வரும் சாத்தான் சிறுவனால் கிராமமே பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. கிராம மக்கள் ஒன்று கூடி மந்திரவாதிகளை வரவழைத்து சாத்தானிடமிருந்து இரண்டு குதிரை சிலைகளை மீட்டு ஒன்றாக கட்டி பூமிக்கு அடியில் புதைத்து விடுகின்றனர். இத்துடன் இந்த கிளைக்கதை முடிவடைகிறது.

அதன் பின் 1500 வருடங்கள் கழித்து காஞ்சிபுரத்தில் புதைந்திருக்கும் இந்த குதிரை சிலைகளை பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆர்த்தி என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் இந்த சிலைகளை மீட்கிறார். அதன் பின் அந்த சிலைகளை தன்னுடன் லண்டனில் கடலுக்கு நடுவில் இருக்கும் அரண்மனை போன்ற பங்களாவில் ஆராய்ச்சிக்காக தனிமைப்படுத்திக்கொண்டு பதினைந்து உதவியாளர்களுடன் வசிக்கிறார். அதன் பின் அனைத்து உதவியாளர்கள் மர்மமான முறையில் ஒருவர் பின் ஒருவராக இறக்க, இறுதியில் ஆர்த்தியும் தற்கொலை செய்து கொள்கிறார். ஆனால் அவருடைய உடல் மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது. இந்த மர்டர் மிஸ்ட்ரி போலீசாருக்கு பெரிய சாவாலாக அமைகிறது.அந்த பங்களாவிற்கு செல்வதற்கு 12 மணி நேர பகல் பொழுது மட்டும் கடலில் பாதை தெரியும் அதன் பின் அந்த பாதை கடல் நீரால் சூழ்ந்து விடும். தொலை தொடர்பு வசதிகள் கிடைப்பது கடினம்.

இந்த நேரத்தில் அந்த பங்களாவைப் பற்றி தெரிந்து கொண்டு அமானுஷ்யங்கள் பற்றிய விஷயங்களை காட்சிப்படுத்தும் யூ டியூபர்கள் வசந்த் ரவியும், அவரது நான்கு நண்பர்களும் பணத்திற்காக பிளாக் டூரிசம் பற்றிய ஆவணப்படத்தை எடுக்க தைரியமாக செல்கின்றனர். அவர்கள் அந்த பங்களாவிற்கு சென்றவுடன் அவர்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? ஐந்து பேரும் உயிருடன் திரும்பி வந்தார்களா? அவர்களுக்கு நேர்ந்த அமானுஷ்ய அனுபவம் என்ன? வெற்றியுடன் லன்டணிலிருந்து இந்தியாவிற்கு திரும்பினார்களா? என்பதே படத்தின் திகிலூட்டும் அதிரடி க்ளைமேக்ஸ்.

அர்ஜுனாக வசந்த் ரவி லண்டனில் ஆரம்ப காட்சியில் வண்டியிலிருந்து இறங்கும் போதே ஒட்டுனரின் முகபாவனையை பார்த்து அதிர்ச்சியாவது, கடலுக்கு நடுவே இருக்கும் பங்களாவிற்குள் தன் நண்பர்களை காப்பாற்ற தவிப்பது, பின்னர் தீய சக்தியை அழிக்க எடுக்கும் அவதாரம் என்று இருவேறு முகபாவங்கள், சிந்தனைகள், மனஉணர்ச்சிகளை முழுவதுவமாக வெளிப்படுத்தி ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து குறைந்தபட்ச உரையாடல்கள், மற்றும் குரல் ஒலியால் ஏற்ற இறக்கங்களுடன் நடிப்பை கொடுத்து படத்திற்கு பலத்தை கொடுத்துள்ளார்.

ஆர்த்தியாக விமலா ராமன் திகிலின் அரசியாக வந்து அசத்தியுள்ளார். கருப்பு நிறத்தில் திடீரென்று பாய்ந்து வருவதும், கணிணி எதிரில் தன் முகபாவத்தை மாற்றி உணர்ச்சிகளுடன் அவர் பேசும் வசனங்கள், பல இடங்களில் பயமுறுத்துகிறது. இரண்டாம் பகுதியிலிருந்து தான் இவரைச் சுற்றி கதைக்களம் இருப்பதால் தன்னுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து ஸ்பிலிட் பர்சினாலிட்டியாக சிறப்பாக நடித்து கொடுத்துள்ளார் விமலாராமன்.

இவர்களுடன் ரித்விகாவாக சரஸ்வதி மேனன், வருணாக முரளிதரன் எஸ், ராகுலாக உதயதீப் இவரின் ஆரம்ப காட்சி தான் படத்தை தூக்கி நிறுத்துகிறது. இவர்களின் ரியாக்ஷன் படத்திற்கு ஆணிவேறாக இருந்து ஒருவித பயத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறுகின்றனர்.

தொழில்நுட்ப ரீதியாக, இடம், ஒலி, காட்சிகள் என எதுவாக இருந்தாலும் படம் கிட்டத்தட்ட எல்லா அம்சங்களிலும் அற்புதமாக உள்ளது. குறிப்பாக விஜய் சித்தார்த்தின் பின்னணி இசை அபாரம். காட்சிக்கும் மனநிலைக்கும் பொருத்தமான ட்யூன்கள் நியாயமாகப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது, அதுவே படம் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு காரணம். பயமுறுத்தல்கள் உண்மையில் நம்மை பயமுறுத்தும், என்றாலும் ஒலி கலவையானது நம்மையும் அறியாமல் அவ்வப்போது அந்த வினோதமான அனுபவத்தை கொடுக்கும் அளவுக்கு அற்புதமாக உள்ளது. ஒலி வடிவமைப்பாளர்களான சச்சின் மற்றும் ஹரி திரைப்படத்தில் அவர்களின் சிறப்பான பணிக்காக பாராட்டை நிச்சயம் பெறுவார்கள். முதல் 20 நிமிடங்கள் ரசிகர்களை கட்டிப் போடும் ஒலியால் பீதியை கிளப்பி விட்டு அலற விடும் காட்சிகள் தத்ரூபம். பல விருதுகள் ஒலிப்பதிவிற்காக காத்திருக்கின்றன என்பது திண்ணம்.

ஏ.எம் எட்வின் சகே ஒளிப்பதிவு ஹாலிவுட் படக் காட்சிகளை பார்ப்பது போன்ற உணர்வையும், ஏரியல் ஷாட்கள் அதிர்ச்சியையும், பயத்தையும் ஒரு சேர கொடுத்து படத்தில் ஒன்றிட வழிவகை செய்கிறது.

சுற்றுலாப்பயணிகள் வரலாற்று ரீதியாக மர்ம மரணம், திகில், த்ரில் நிறைந்த தனிமையான இடங்களுக்குச் செல்வதற்கான வழிவகைகளை செய்வதே பிளாக் டூரிசம். இதை மையப்படுத்தி இரட்டை கடவுள்களான அஸ்வினியை அடிப்படையாகக் கொண்டு அங்கு யூடியூபர்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் இறந்த பிறகு அந்த மாளிகை மக்கள் வசிக்காமல் இருக்க அதனை ஆவணப்படுத்தி பிரபலப்படுத்த நினைக்கும் போது ஏற்படும் விபரீதங்கள் பற்றியது அஸ்வின்ஸ் திரைக்கதை. ஆரம்பத்தில் இருக்கும் விறுவிறுப்பு கொஞ்சம் சரிவடையும் போது இரண்டாம் பாதியில் புத்துணர்ச்சியூட்டும் புதிய விரிவாக்கத்துடன் கதையின் பயணம் திகிலுக்கு உத்தரவாதம். 20 நிமிட குறும்படம் முழு நீள திரைப்படமாக எழுதி இயக்கி மிரட்டியிருக்கிறார் தருண் தேஜா. சிறந்த நடிகர்கள், ஒலிக்கலவை தொழில்நுட்ப கலைஞர்கள், ஒரு திகில் படத்திற்கான அத்தனை அம்சங்களையும் தேர்ந்தெடுத்து ஹாலிவுட் தரத்தில் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கும் வண்ணம், பிரம்மாண்டத்தையும், திகிலையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தருண் தேஜா. மனிதர்களின் இரண்டு நிலைகளையும், அதை தன்னுடைய மூளைத்திறனால் வசியப்படுத்தி நல்லதும் செய்ய முடிவும், கெட்டதையும் அழிக்க முடியும் என்பதை திறம்பட கையாண்டு திகில், சைக்கலாஜிக்கல் த்ரில்லராக முதல் படத்திலேயே முத்திரை பதித்து பாராட்டுதல்களையும் பெற்று விட்டார் இயக்குனர் தருண் தேஜா.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (SVCC) BVSN பிரசாத் தயாரித்திருக்க, பாபிநீடு பி வழங்கும் படம் ‘அஸ்வின்ஸ் சிறந்த உயர் தொழில் நுட்பம் நிறைந்த திகில் கதையுடன் தியேட்டரில் மட்டுமே பார்க்க வேண்டிய புதுமையும் பழமையும் கலந்த அனுபவம் தரும் பயமுறுத்தும் துரத்தல் த்ரில்லர்.