ஜாஸ்பர் திரைவிமர்சனம் : ஜாஸ்பர் மகனை காப்பாற்ற விஸ்வரூபமெடுக்கும் தாதாவின் தந்தை பாசம் | ரேட்டிங்: 2.5/5

0
309

ஜாஸ்பர் திரைவிமர்சனம் : ஜாஸ்பர் மகனை காப்பாற்ற விஸ்வரூபமெடுக்கும் தாதாவின் தந்தை பாசம் | ரேட்டிங்: 2.5/5

விஸ்வரூபி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரிப்பாளர் மணிகண்டன் தயாரிக்க படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் யுவராஜ்.டி.
இதில் விவேக் ராஜகோபால், ஐஸ்வர்யா தத்தா, லாவண்யா, சி.எம்.பாலா, ராஜ் காலேஷ், பிரசாந்த் முரளி, கோட்டயம் ரமேஷ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- குமரன் சிவமணி (டிரம்ஸ் சிவமணி மகன்) இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு மணிகண்டராஜா. படத்தொகுப்பு அபிலாஷ் பாலச்சந்திரன். மக்கள் தொடர்பு டைமண்ட் பாபு.

இளமையில் திமிர் பிடித்தவராக கொஞ்சம் கூட இரக்கமின்றி கிரிமினல்களை கொல்லும் மிரட்டலான தாதாவாக வலம் வருபவர் மிஸ்டர்.ஜெ என்கிற ஜாஸ்பர். தன் வாழ்வில் சந்தித்த பெரும் இழப்பினால் அவை அனைத்தையும் விட்டு எப்போதும் குடித்துக்கொண்டே முதுமையில் வாழ்ந்து வருகிறார்.அனாதை இல்லத்தில் வளரும் ஹரிஷ் (விவேக் ராஜகோபால்) தன் தோழி லாவன்யாவை மணந்து பிள்ளையுடன் வங்கி மேனேஜராக ஜாஸ்பர் வாழும் ஊருக்கு வருகிறான். ஜாஸ்பர் வீட்டில் வாடகைக்கு தங்குகிறார்கள். பேங்க் மேனேஜரான அவரிடம், வின்சென்ட்டின் குழுவினர் 100 கோடி ரூபாய் கருப்பு பணத்தை மாற்றி கொடுக்க சொல்கிறார்கள். சட்ட விரோத செயலில் ஈடுபட மாட்டேன் என்று சொல்லி ஹரிஷ் மறுக்கிறான். இந்நிலையில் இந்த கும்பல் கூட்டம் ஒன்று ஹரிஷை கடத்தி சென்று துன்புறுத்துகிறார்கள். கடத்தப்பட்ட ஹரிஷின் மனைவி தனது கணவனை காப்பாற்ற ஜாஸ்பரை அணுகுகிறார். அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஜாஸ்பர் மீண்டும் தன் வாழ்வில் ஒரு இழப்பை தவிர்ப்பதற்கு மறுபடியும் தாதாவாக ஆக உருவெடுக்கிறார் ஜாஸ்பர். துன்புறுத்தியும் சம்மதிக்காத காரணத்தால் ஹரிஷின் கை விரல்களை வெட்டி லாவண்யாவுக்கு அனுப்புகிறது கடத்தல் கும்பல். முதலில் ஹரிஷை காப்பற்ற சம்மதிக்காத ஜாஸ்பர் பின்னர் கோபம் அடைந்து தனி ஆளாக ஹரிஷை கடத்தியவர்களை தேடி செல்கிறான். திமிர் பிடித்த கொஞ்சம் கூட இரக்கம் இல்லா மிஸ்டர் ஜெ என்னும் ஜாஸ்பர் கடந்த கால வாழ்க்கை என்ன? ஜாஸ்பருக்கும் ஹரிஷ்க்கும் என்ன தொடர்பு? எதற்காக கடத்தல்காரர்களிடமிருந்து ஹரிஷை காப்பாற்ற முன்வருகிறார் ஜாஸ்பர்? யார் அந்த வின்சென்ட்?  என்பதே மீதிக்கதை.

முரட்டுத்தனமான இளவயது ஜாஸ்பர், மற்றும் வங்கி அதிகாரியாக இரட்டை வேடங்களில் விவேக் ராஜகோபால் அடிதடி ஆக்ஷனிலும், பின்னர் அப்பாவியாக மாட்டிக் கொண்டு முழிக்கும் வங்கி அதிகாரியாகவும் கடத்தப்பட்டு துன்புறுத்தப்படும் காட்சிகளில் பதற வைத்து அனுதாபத்தை அள்ளுகிறார்.
வயதான மிஸ்டர் ஜெ தோற்றத்தில் சி.எம்.பாலா மிரட்டலான உயரம், முரட்டு தோற்றத்தில் அளவான நடிப்பை வழங்கி வில்லனாக இருந்து நல்லவனாக மாறும் ஜாஸ்பர் கதாபாத்திரத்தை தாங்கி பிடித்திருக்கிறார்.

மனைவி லாவன்யாவாக ஐஸ்வர்யா தத்தா, போலீசாக நடித்திருக்கும் பிரசாந்த் முரளி, வில்லனாக வின்சென்ட் என்கிற பாஸ்டர் எட்வர்ட் கதாபாத்திரத்தில் ராஜ் காலேஷ் ஆகியோர் நல்ல தேர்வு. அவர்களின் பங்களிப்பு திரைக்கதையின் உயிர்நாடி.

பிரபல இசைக்கலைஞர் ட்ரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணி  அறிமுக படத்தில் அருமையாக மிகச் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்;. வளர மென்மேலும் வாழ்த்துக்கள்.

மணிகண்ட ராஜாவின் ஒளிப்பதிவும், அபிலாஷ் பாலச்சந்திரனின் படத்தொகுப்பும் பரபரப்பான திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.

தாதாவின் வாழ்க்கையில் ஏற்படும் சோகம், அதன் பின் மகனை பிரிந்து தனிமையில் வாழ, இறுதியில் தன் மகனைக் காப்பாற்ற  மீண்டும் தாதாவாக உருமாறி வில்லனை கொன்று சாதிக்கும் திரைக்கதையில் பல காட்சிகள் புரியாத புதிராக முதலில் தோன்றினாலும், பின்னர் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் அதற்கு விடையாக கொடுத்து முடிந்த வரை சிறப்பாக செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் யுவராஜ்.டி.

மொத்தத்தில் விஸ்வரூபி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரிப்பாளர் மணிகண்டன் தயாரித்திருக்கும் ஜாஸ்பர் மகனை காப்பாற்ற விஸ்வரூபமெடுக்கும் தாதாவின் தந்தை பாசம்.