தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களையும், அரசையும் நெருங்கச் செய்ய வேண்டும்

0
94

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களையும், அரசையும் நெருங்கச் செய்ய வேண்டும்

புதுதில்லி, மக்களையும், அரசையும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெருங்கச் செய்வதே 2047-ஆம் ஆண்டின் இந்தியா என்னும் தொலைநோக்கிற்கு சரியான வரையறையாக இருக்கும் என்று மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்வுத்துறை செயலர் திரு வி ஸ்ரீநிவாஸ் கூறியுள்ளார்.

அதிகபட்ச ஆளுகை, குறைந்தபட்ச நிர்வாகம் என்ற கொள்கை அடிப்படையில் புதிய தலைமுறை சீர்திருத்தங்களையும், புதிய கண்டுபிடிப்புகளையும் ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இந்த கருத்தரங்கு அமைந்துள்ளது என்று அவர் கூறினார். பொறியியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, மின்னணு சேவைகளுக்கு உலகளாவிய அளவில் அணுகுதலை ஏற்படுத்துதல், மாவட்ட அளவில் டிஜிட்டல் முன்முயற்சிகளை மேற்கொள்ளுதல், புதிய தொழில்நுட்பத்தையும், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப மேலாண்மையை மேம்படுத்தவும் ஏதுவாக இந்த கருத்தரங்கு அமையும் என்று எதிர்பார்ப்பதாக திரு ஸ்ரீநிவாஸ் கூறினார்.

“புதிய கண்டுபிடிப்புகளால் 2047-ல் கனவு காணப்படும் இந்தியா” என்ற தலைப்பில் சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நடந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், இளம்  குடிமைப்பணி அதிகாரிகள், இளம் பேராசிரியர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோரை  ஒன்று சேர்த்து மிகப்பெரிய மாநாடுகளை நடத்த இடையறாது பாடுபட்ட அனைவருக்கும்  நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2047-ல் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை மெய்நிகர் முறையில் கண்டு உணர்வதற்கான 3 நாள் மாநாட்டை ஐஐடி-சென்னை நடத்துவதை பாராட்டினார். இந்தியாவின் ஆளுகை அமைப்புகளை டிஜிட்டல் அமைப்புகளாக மாற்றுவது குறித்து துணைச் செயலர் அளவிலான இளம் ஐஏஎஸ் அதிகாரிகள், சென்னை-ஐஐடி பேராசிரியர்கள், ஸ்டார்ட் அப்கள் உடன் இந்தக் கருத்தரங்கில் ஆலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், ஐஐடி சென்னையின் இளம் பேராசிரியர்கள் மற்றும் ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் செயல்படும் ஸ்டார்ட் அப்களுடன் இணைந்து பணியாற்ற 40 இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவித்த அவர், இந்திய ஆளுகை முறையை 2047-ம் ஆண்டுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்துவதற்காக அவர்களது யோசனைகளை வரவேற்றுள்ளதாகக் கூறினார். நீண்ட கால முயற்சியாக, நீண்ட கால செயல்பாடாக இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி-யின் இயக்குநர் பேராசிரியர் காமகோடி, ஐஐடி-சென்னை மூத்த பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.