முப்படைகளில் சிறப்பான சாதனை படைத்தவர்களுக்கு மேக்ரிகோர் நினைவுப் பதக்கங்கள்: ஜெனரல் எம்எம் நரவானே வழங்கினார்

0
97

முப்படைகளில் சிறப்பான சாதனை படைத்தவர்களுக்கு மேக்ரிகோர் நினைவுப் பதக்கங்கள்: ஜெனரல் எம்எம் நரவானே வழங்கினார்

புதுதில்லி

இந்திய தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படையில், சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்கு மேக்ரிகோர் நினைவுப் பதக்கத்தை, முப்படைத்  தளபதிகள் குழுவின் தலைவராக இருக்கும் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே இன்று வழங்கினார். இந்த விருது வழங்கும் விழா, ஐக்கிய சேவை நிறுவனத்தில் (யுஎஸ்ஐ)  நடந்தது. இதில் முப்படைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேக்ரிகோர் நினைவுப் பதக்கம் கடந்த 1888ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. யுஎஸ்ஐ நிறுவனத்தை ஏற்படுத்திய மேஜர் ஜெனரல் சர் சார்லஸ் மெட்கபே மேக்ரிகோ நினைவாக இந்தப்  பதக்கம் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்தப்  பதக்கம் ராணுவ உளவு மற்றும் பிரிட்டிஷ் ராணுவம் ஆசியா, ஆப்கானிஸ்தான், திபெத் மற்றும் பர்மாவில் மேற்கொள்ளும் ஆய்வுப்  பயணங்களுக்காக வழங்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின், இந்தப்  பதக்கத்தை   சாகச நடவடிக்கைளில் சாதனை படைப்பவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. பாதுகாப்புப்  படையில் பணியாற்றும் சாகச சாதனை படைத்த  அனைத்து பதவிகளில் உள்ளவர்களுக்கும் இந்தப்  பதக்கம் வழங்கப்படுகிறது.

கடற்படையில் பல சாதனைகள் படைத்த அதிகாரி சஞ்சய் குமாருக்கு இந்தப்  பதக்கம் வழங்கப்பட்டது. இவர் கடந்த 2018-19ம் ஆண்டில் 111 கி.மீ லா அல்ட்ரா போட்டியில் பங்கேற்றார். மும்பை -கோவா அல்ட்ரா  தொடர் ஓட்டப் போட்டியிலும் (563 கி.மீ) இவர் பங்கேற்று  புதிய இந்தியா சாதனைப்  புத்தகத்தில் இடம் பிடித்தார்.

ராணுவத்தில் பணியாற்றும் நயிப் சுபேதார்  சஞ்சீவ் குமார் ஹேங் கிளைடரில் 8 மணி நேரம் 43 நிமிடங்கள் பறந்து புதிய உலக சாதனை படைத்தார். அவருக்கும் மேக்ரிகோர்  பதக்கம் வழங்கப்பட்டது.

விமானப்படை அதிகாரி அன்ச கமார் திவாரி 17,882 அடி உயரத்தில் உள்ள கர்துங்லா கணவாய் பகுதியில் பாராசூட்டில் இறங்கி சாதனை படைத்தார். அவருக்கும் மேக்ரிகோர் பதக்கம் வழங்கப்பட்டது.

ராணுவத்தின் பாரா ஸ்பெஷல்  பட்டாலியனைச்  சேர்ந்த மேஜர் அஜய் குமார் சிங் ‘ஆர்மெக்ஸ்21’ என்ற இமயமலைச்  சாகச பயணத்தில் லடாக்கில் இருந்து  உத்தராகண்ட்டுக்கு 1660 கி.மீ பயணம் செய்து 18,000 அடிக்கும் மேல் உள்ள 26 கணவாய்களைக்  கடந்து சென்றார். இந்த சாகசப் பயணத்தை குளிர்காலத்தில் 119 நாட்கள் மேற்கொண்டார். அவரும், இந்த பதக்கத்தை இன்று பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஜெனரல் நரவானே, ராணுவ பாரம்பரியப்படி சாகசப்  பயணங்களை ஏற்பாடு செய்யும் யுஎஸ்ஐ அமைப்பைப்  பாராட்டினார். சிறப்பான சாதனை படைத்து விருது வென்றவர்களையும் அவர் பாராட்டினார்.