ஆட்டோ ஓட்டுநர்கள் முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

0
167

ஆட்டோ ஓட்டுநர்கள் முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 136 படுக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அந்த நிகழ்ச்சியில் கடந்துக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை ராஜூவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், சென்னை, சேலம், நெல்லை, செங்கல்பட்டு, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் நோய் பாதிப்பு குறைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், கொரோனா தொற்று இல்லாத 4 ஆயிரம் பேரின் முடிவுகளை தொற்று உடையவர்கள் என மாற்றி அறிவித்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட தனியார் ஆய்வகத்திடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும், இந்த தவறை அவர்களே முன்வந்து கூறியிருப்பதாகவும், தமிழகத்தில் உள்ள தனியார் பரிசோதனை மையங்கள் தணிக்கை செய்யப்படும் என்றும் கூறினார்.

அதுமட்டுமல்லாது, 18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருப்பதாகவும், கொரோனா நேரத்தில் மக்கள் அத்தியாவசிய பணியில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் போன்றவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுவதாகவும் தெரிவித்தார்.