சூரிய மேற்கூரை வீடுகளுக்கு இலவச மின்சக்தி திட்டத்தைப் பிரதமர் அறிவித்தார்
புதுதில்லி,
இலவச மின்சார வசதி அளிப்பதற்கான சூரிய மேற்கூரை வீடுகளுக்கு இலவச மின்சக்தி என்ற திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அறிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“நிலையான வளர்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வுக்காக, பிரதமரின் சூர்ய வீடு: சூரிய மேற்கூரை வீடுகளுக்கு இலவச மின்சக்தி என்ற திட்டத்தை தொடங்குகிறோம். ரூபாய் 75,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டிலான இந்த திட்டம், ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச மின்சாரத்தை வழங்குவதன் மூலம் 1 கோடி வீடுகளுக்கு ஒளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வழங்கப்படும் கணிசமான மானியங்கள் முதல், அதிக சலுகையுடன் கூடிய வங்கிக் கடன்கள் வரை, மக்களுக்கு எந்தச் செலவும் சுமையாக இல்லாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யும். அனைத்து பங்கெடுப்பாளர்களும் ஒரு தேசிய இணையதளத்துடன் ஒருங்கிணைக்கப்படுவார்கள், இது அதிக வசதியை கொண்டதாகவும் இருக்கும்.
“இந்த திட்டத்தை அடிமட்டத்தில் முன்னெடுப்பதற்காக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகள் சூரிய கூரை அமைக்க ஊக்குவிக்கப்படும். அதே நேரத்தில், இந்த திட்டம் அதிக வருமானம், குறைந்த மின் கட்டணங்கள் மற்றும் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் வழிவகுக்கும்.
“சூரிய சக்தியையும் நிலையான முன்னேற்றத்தையும் அதிகரிப்போம். அனைத்து குடியிருப்பு நுகர்வோரும், குறிப்பாக இளைஞர்கள், சூர்ய வீடு: சூரிய மேற்கூரை வீடுகளுக்கு இலவச மின்சக்தி திட்டத்தில் விண்ணப்பிப்பதன் மூலம் வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.