பூமாதேவிக்கே லஞ்சம் கொடுக்கிறார்கள் ; மரம் நடு விழாவில் மனக்குமுறலை வெளிப்படுத்திய விஷால்

0
150

பூமாதேவிக்கே லஞ்சம் கொடுக்கிறார்கள் ; மரம் நடு விழாவில் மனக்குமுறலை வெளிப்படுத்திய விஷால்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 8-வது நினைவு தினம் சென்னையில் வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொண்டார்.

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் கனவான மரம் நடுவது, இயற்கையை காப்பது என்கிற வேண்டுகோளுக்கு இணங்க தனது தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற மெகா மரம் நடும் விழாவில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் நடிகர் விஷால்.

இந்த நிகழ்வில் நடிகர் விஷால் பேசும்போது, “எனக்கு பிடித்த அரசியல் தலைவர்கள் இரண்டு பேர். ஒருவர் பகத்சிங். இன்னொருவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா. நம் நாட்டின் குடியரசுத் தலைவர் என்கிற அந்த பதவிக்கு மிகப்பெரிய மரியாதை அளித்தவர் ஏபிஜே அப்துல் கலாம் மட்டும்தான்.

தம்பி விஜய் வர்மா விவசாயிகளுக்கு பயன்படும் விதத்தில் ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார். அப்துல் கலாம் போல இவரும் உலக அளவில் புகழ் பெறுவார். அவர் கண்டுபிடித்துள்ள அந்த கருவிகளை நானே வாங்கி விவசாயிகளுக்கு கொடுக்கப் போகிறேன். சாதிக்கத் துடிப்பவர்களுக்கு பதக்கம், சான்றிதழ், கைதட்டல் இவைதான் மேலும் மேலும் ஊக்கம் கொடுக்கும்.

என் தாயின் பெயரில் தேவி அறக்கட்டையை துவங்கி படிக்கும் ஆர்வமுள்ள, வசதியற்ற மாணவிகளுக்கு கல்லூரி படிப்பை வழங்கும் விதமாக என்னாலான உதவிகளை செய்து வருகிறேன். அப்படி நான் இங்கே சேர்த்துவிட்ட சகோதரி ஒருவர் கிடைத்த வாய்ப்பு பயன்படுத்தி மிகப்பெரிய அளவிற்கு உயர்ந்து எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த மூன்று வருட கல்லூரி படிப்பில் புத்தகத்தில் படிப்பதை விட இங்கிருக்கும் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் விஷயங்கள் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் வாழ்க்கையில் கை கொடுக்கும்.

மரம் நடு விழாவில் கலந்து கொண்டு மரம் நட்டோம் சென்றோம் என்று இல்லாமல் அது வளர்ந்து வலுவாக நிற்கும் வரை அதன் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அப்படி வளரும் வரை நான் எனது நபர்கள் மூலமாக அவற்றை கண்காணிப்பேன். அப்படித்தான் எனது தங்கைகளுக்கும் பின்னால் அவர்களுக்கு பாதுகாப்பாக நான் எப்போதும் இருப்பேன். யாராவது உங்களிடம் பிரச்சனை செய்தால் எனக்கு ஒரு அண்ணா இருக்கிறார், அவர் பெயர் விஷால் என்று நீங்கள் தைரியமாக சொல்லுங்கள்.

இன்று இயற்கை மாசுபடுவதற்கு ஒரு வகையில் நாமும் காரணம்.. இயற்கை கொந்தளிக்கும் போது தான் சுனாமி, சைக்லோன் போன்றவை வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இயற்கைக்கு லஞ்சம் கொடுக்கும் அளவிற்கு நம் சமூகம் சென்று கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள் பல பேர் தாங்கள் வாங்கும் லஞ்சப்பணத்தை பூமிக்கு அடியில் தோண்டி புதைத்து வைப்பதன் மூலம் பூமித்தாய்க்கே லஞ்சம் கொடுக்கிறார்கள்.

2010ல் இருந்த சமூகம் வேறு.. இப்போது இருக்கும் சமூகம் வேறு.. இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு இளைஞரும் சோசியல் மீடியாவில் தினமும் நான்கு மணி நேரம் செலவிடுகிறார்கள். அதை குறை சொல்லவில்லை. அதை உங்களுக்கு பிடித்த வகையில் பயன்படுத்துங்கள். அப்துல் கலாம் எப்படி விஷன் 2020 என்று கனவு கண்டாரோ, அதேபோல தான் அவருடைய மாணவனாக நானும் இந்த சமுதாயத்திற்கு என்னால் இயன்ற பணிகளை செய்வேன்.

அன்னை வேளாங்கண்ணி கல்லூரி மட்டுமல்ல, ராமேஸ்வரத்தில் இருக்கும் கல்லூரிகள் வரை எங்களது இறக்கைகளை விரித்து இதுபோன்று என்னுடைய தங்கைகளை படிக்க வைக்கும் முயற்சியை எடுப்போம். மற்றவர்களுக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் ஆயிரம், இரண்டாயிரம் என்று தான் கொடுக்க வேண்டும் என இல்லை.. பசித்தவர்களுக்கு 50 ரூபாய்க்கு அவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து அவர்கள் வயிறு நிறைந்து வாழ்த்தினாலே அது கடவுள் வாழ்த்து போல தான்” என்று கூறினார்.