அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கடினமான இடுப்பு மூட்டு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை

0
305

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கடினமான இடுப்பு மூட்டு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை

சென்னை, செப். 23–

வடசென்னை மக்களுக்கு கொரோனா சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையை சாரும். இந்நோய்க்கு எதிரான அயராத பணிகளுக்கிடையிலும் இந்த மருத்துவமனையில் எலும்பு மற்றும் முடநீக்கியல் துறை நிபுணர்கள் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்ட 2 நோயாளிகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

29 வயதான சென்னையைச் சேர்ந்த சரவணன், விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர் கடந்த ஜூலை 30ந் தேதி பணிக்கு செல்லும்போது சாலை விபத்து ஏற்பட்டு வலது இடுப்பு மூட்டு விலகி இடுப்பு எலும்புகள் முறிவு ஏற்பட்டன. அவர் தனியார் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்ற பின் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 2 கட்டங்களாக இடுப்பு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் 3 மணி நேரம் ஆனது. இதனை எலும்பு மற்றும் முடநீக்கியல் துறை தலைவர் டி.தொல்காப்பியனின் ஆலோசனைப்படி டாக்டர் ச.அசோகன் தலைமையிலான அறுவை எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர்கள், பொது அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் கொண்ட குழு வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

மற்றொரு நோயாளியான 24 வயது பிரகாஷ் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர், தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றுகிறார். இவருக்கும் கடந்த ஜூலை மாதம் சாலை விபத்தில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 2 கட்டங்களாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நடைபயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனையில் ஒருவருக்கு ரூ.15 லட்சம்

இதுபோன்ற எலும்பு முறிவுகளுக்கு அறுவை சிகிச்சை கட்டாயமாக தேவை. அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அவரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் செயலிழந்த நிலையில் அவதிப்பட வேண்டியிருக்கும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக இம்மருத்துவமனையில் செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சைகளுக்கு தனியார் மருத்துவமனையில் ஒவ்வொருவருக்கும் சுமார் ரூ.15 லட்சம் வரை செலவாகும். கொரோனா காலக்கட்டத்தில் 70 அவசர, 280 (எலக்டிவ்) எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகள் இந்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டன. கொரோனா தொற்று உச்சத்திலிருந்த காலக்கட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுபோன்ற கடினமான சிக்கலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்திருப்பது சிறப்பானது என மருத்துவமனை டீன் டாக்டர் பி.பாலாஜி தெரிவித்தார்.