கடலூர் புயல் சேதப் பகுதிகளை ஆய்வுசெய்ய செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

0
270

கடலூர் புயல் சேதப் பகுதிகளை ஆய்வுசெய்ய செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னைப்புறநகரான வேளச்சேரி, முடிச்சூர் பகுதிகளிலும், கடலூர் புயல் சேதப் பகுதிகளையும் முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

நிவர் புயல் தாக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கமும், உயிர் சேதமும் ஏற்படுத்தவில்லையெனினும் பயிர்கள் மூழ்கியும், சென்னை புறநகர், கடலூர் பகுதிகளில் பொருட் சேதம் அதிகமாக உள்ளது. இன்று சென்னைப்புறநகரான வேளச்சேரி, முடிச்சூர் பகுதிகளிலும், கடலூர் புயல் சேதப் பகுதிகளையும் முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

வேளாண்துறை பாதிப்பு, கால்நடை பாதிப்பு மற்றும் பொருட்சேதம் குறித்த விவரங்களை அறிந்து இதற்குப் பிறகு மத்திய அரசிடம் இதுகுறித்து நிதி பெறுவதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரியவருகிறது.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக 7 மாவட்டங்களில் பேருந்துகளும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் சேவைகளும் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டன. இந்தநிலையில் மேலும் 21 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி வியாழக்கிழமை, சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு செல்லும் 6 ரயில்களின் சேவை இருமார்க்கமாகவும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னை சென்ட்ரல்- பெங்களூரு இடையேயான 4 ரயில்களின் சேவையும், சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் 2 ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் சென்னை சென்ட்ரல்- மங்களூரு இடையேயான ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகிறது. காரைக்குடி- சென்னை, மதுரை- சென்னை, திருச்சி- சென்னை இடையேயான ரயில் சேவைகளும் வியாழன் அன்று இருமார்கமும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரியில் இருந்து டெல்லிக்கு செல்லும் நிஜாமுதீன் ரயில், இருமார்க்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளது . முன்பதிவு செய்தவர்களுக்கான கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.