நிவர் புயல் 320 கிமீ தொலைவில் உள்ளது.. கடும் சூறாவளி புயலாக மாறி இன்று இரவு கரையை கடக்க வாய்ப்பு
வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் புதுச்சேரியில் இருந்து 320 கிமீ தொலைவில் உள்ளது. இது கடும் சூறாவளி புயலாக மாறி இன்று இரவு கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி விவரம் பின் வருமாறு:
நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப் பெற்றுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கு திசையே 320 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 380 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. தற்போது தொடர்ந்து தீவிர புயலாக வடமேற்கு திசையில் இருந்து நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்திற்கு இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்று இரவு கரையை கடக்கும்.
அப்போது பலத்த காற்று மணிக்கு 120 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 27-ஆம் தேதி வரை மழை தொடரும் . அடுத்து 24 மணி நேரத்திற்கு புதுவை கடலூர் மயிலாடுதுறை அரியலூர் பெரம்பலூர் கள்ளக்குறிச்சி விழுப்புரம் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதிக மழையும் பெய்யும். பலத்த காற்று பொருத்தமட்டில் காரைக்கால் மயிலாடுதுறை கடலூர் புதுவை விழுப்புரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 120 முதல் 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக நுங்கம்பாக்கம் 14 சென்டிமீட்டர் அளவில் மீனம்பாக்கத்தில் 12 மீட்டர் மழை பதிவாகியுள்ளது.இவ்வாறு பாலசந்திரன் தெரிவித்தார்.