தமிழ்நாடு முழுவதும் 500 மதுக்கடைகள் இன்று முதல் மூடல்

0
114

தமிழ்நாடு முழுவதும் 500 மதுக்கடைகள் இன்று முதல் மூடல்

சென்னை, தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசுக்கு மது விற்பனை மூலம் அதிக வருவாய் கிடைத்து வருகிறது.

அதன்படி கடந்த 2003-04-ம் நிதி ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 639 கோடியே 93 லட்சமாக இருந்த இந்த வருவாய் 2022-23-ம் ஆண்டில் ரூ.44 ஆயிரத்து 98 கோடியே 56 லட்சமாக அதிகரித்தது.

அதே வேளையில் மதுபானங்கள் பல குடும்பங்களின் சீரழிவுக்கு காரணமாக அமைவதால் மதுக்கடைகளை மூட வேண்டும்.

தமிழ்நாட்டில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபையில் நடைபெற்ற உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற அதிரடி அறிவிப்பு இடம் பெற்றது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து. எந்தெந்த கடைகளை மூடலாம் என்பது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு மிக அருகில் இருக்கும் கடைகள், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பகுதியில் உள்ள கடைகள், மத வழிபாட்டு தலங்களின் அருகில் உள்ள கடைகள் போன்றவற்றை மூடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேபோன்று வருமானம் குறைவாக உள்ள கடைகள், பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள கடைகள், அருகருகே இருக்கும் கடைகள் போன்றவையும் இந்த கணக்கெடுப்பின்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அதுமட்டுமல்லாமல் தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து புகார் அளிக்கப்பட்ட கடைகளையும், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்ற கடைகளையும், தொடர்ந்து கடை செயல்பட கட்டிட உரிமையாளர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ள கடைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஒவ்வொரு மண்டலத்திலும், அதுபோன்று எத்தனை கடைகள் உள்ளன? என்ற பட்டியல் மண்டல மேலாளர்கள் மூலம் பெறப்பட்டது.

அதன்படி, சென்னை மண்டலத்தில் 138 கடைகள், கோவை மண்டலத்தில் 78 கடைகள், மதுரை மண்டலத்தில் 125 கடைகள், சேலம் மண்டலத்தில் 59 கடைகள், திருச்சி மண்டலத்தில் 100 கடைகள் என மொத்தம் 500 மதுபான கடைகளை மூடுவது என இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மாநிலம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்டுள்ள 500 மதுக்கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் மூடப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, அதிகபட்சமாக சென்னையில் 61 கடைகளும், குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கடைகளும் மூடப்படுகின்றன.

‘டாஸ்மாக்’ நிறுவனத்தில் 6 ஆயிரத்து 648 மேற்பார்வையாளர்கள், 14 ஆயிரத்து 794 விற்பனையாளர்கள், 2 ஆயிரத்து 876 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 24 ஆயிரத்து 318 மதுபான சில்லரை விற்பனை கடை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

மூடப்பட உள்ள 500 மதுக்கடைகளில் பணியாற்றி வரும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களை ஆட்கள் பற்றாக்குறை உள்ள கடைகளில் பணி அமர்த்தவும், டாஸ்மாக் நிறுவனத்தில் மாற்றுப்பணி வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான ஆணை விரைவில் பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன என்ற தமிழக அரசின் அறிவிப்பை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.