சென்னை மாநகராட்சி மேயராக பிரியா பதவி ஏற்றார்

0
139

சென்னை மாநகராட்சி மேயராக பிரியா பதவி ஏற்றார்

சென்னை: 360 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சியில் இதுவரை 46 மேயர்கள் பதவி வகித்துள்ளனர். ஆங்கிலேயர் கால மேயர்களை தொடர்ந்து தமிழர்கள் மேயராக பதவி வகித்த சிறப்பும் உள்ளது.

சென்னை மேயராக பதவி ஏற்கக்கூடியவர்களுக்கு பல்வேறு சிறப்புகள் வழங்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சியில் பட்டியலின பெண் மேயராக முதன் முதலாக பிரியா பதவி ஏற்றுள்ளார்.

மேயராக தேர்வு செய்யப்பட்ட அவரை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி மேயரின் சிம்மாசனத்திற்கு அழைத்து வந்து அமர வைத்தார். மேயருக்கான அங்கியை வழங்கினார். அதன்பின்னர் செங்கோல் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மேயர் அணியக்கூடிய 105 பவுன் தங்க சங்கிலியை, மேயர் பிரியாவுக்கு கமி‌ஷனர் அணிவித்தார். சென்னை மேயராக பணியாற்றக்கூடிய மேயர்களுக்கு தங்க சங்கிலி அணிவது வழக்கம்.

கடந்த 6 ஆண்டுகளாக மேயர் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் அந்த தங்க சங்கிலி வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது புதிய மேயர் பதவி ஏற்பதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மேயர் அணியக்கூடிய தங்க சங்கிலி வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது.

தங்க சங்கிலி, செங்கோலுடன் மேயர் பிரியா மேயர் இருக்கையை அலங்கரித்தார். புதிய மேயராக பதவியேற்ற பிரியாவுக்கு அவரது அளவுக்கு ஏற்ப புதிய அங்கி தயார் செய்யப்படுகிறது. இன்று தற்காலிகமாக மாற்று அங்கி வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் புதிய மேயர் பிரியா பதவியேற்று அந்த இருக்கையில் அமர்ந்தவுடன் அனைத்து கவுன்சிலர்களும் கைத்தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

மேயர் பயன்படுத்துவதற்கு வழக்கமாக கார் மாநகராட்சி சார்பில் வழங்கப்படும். 6 வருடங்களுக்கு பிறகு புதிய மேயர் பொறுப்பேற்றதை தொடர்ந்து அவருக்கு புதிய கார் வாங்கப்பட்டுள்ளது. ஒரு சில நாட்களில் புதிய கார் அவருக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.