கொரோனா நிவாரணம்… இன்று முதல் டோக்கன் விநியோகம்…. முதல் தவணையாக ரூ.2000 வழங்கும் திட்டம் தொடக்கம்! 2.07 கோடி பேர் பயன்பெறுவர்!!

0
144

கொரோனா நிவாரணம்… இன்று முதல் டோக்கன் விநியோகம்…. முதல் தவணையாக ரூ.2000 வழங்கும் திட்டம் தொடக்கம்! 2.07 கோடி பேர் பயன்பெறுவர்!!

கொரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில், 10 ஆம் தேதி முதல் 24 வரை தமிழகம் முழுவதும் முழு ஊரங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது. இதனிடையே கொரோனா நிவாரண நிதியாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 4 ஆயிரம் வழங்கப்பட்டும் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் கொரோனா நிவாரண நிதி வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டார். அதன்படி முதல் தவனையாக இந்த மாதம் 2 ஆயிரம், அடுத்த மாதம் 2 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது.

கொரோனா நிவாரண நிதி வழங்கும் வகையில் இன்று முதல் 2.7 கோடி பேருக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

இது குறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ரா சவான் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையில் 4153.39 கோடி செலவில் மே மாதத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 ஆயிரம் நிவாரண தொகையினை முதல் தவணையாக வழங்க அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் ரொக்கம் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட இருப்பதால் அதனை பெறும் ஆர்வத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலை கடைகளுக்கும் ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்க குடும்ப அட்டைதாரர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்கள் வீதம் உரிய படிவத்தில் வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் 10.5.2021 முதல் 12.5.2021 ஆகிய 3 நாட்களில் வீடு தோறும் சென்று நியாய விலை கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்பட வேண்டும். இத்தொகை மே 15ம் தேதி முதல் வழங்கப்பட வேண்டும்.

நியாய விலைக்கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்ப டோக்கன்களில் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் கொரோனா வைரஸ் நிவாரண முதல் தவணைத் தொகை எந்த புகாருக்கும் இடமின்றி வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.