ஆக்சிஜன் சப்ளையே தடுக்கும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம்- டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் கோபம்

0
183

ஆக்சிஜன் சப்ளையே தடுக்கும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம்- டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் கோபம்

புதுடெல்லி: தடுப்பூசி பற்றாக்குறையும் பல மாநிலங்களில் நிலவுகிறது. இதைச் சரி செய்ய மத்திய அரசும் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் நேற்றுமுன்தினம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கங்காராம் மருத்துவமனையில் 25 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர், நேற்று இரவு ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் 20 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர்.

ஆக்சிஜன் சப்ளையை சீரமைத்து, முறையாக வழங்கக் கோரி ஏற்கெனவே டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பாலி அமர்வு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தது. பிச்சை எடுங்கள், திருடுங்கள், கடன் வாங்கியாவது மக்களுக்கு ஆக்சிஜனை கொண்டு வந்து கொடுங்கள் என்று கூறி இருந்தனர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள மகாராஜா அகர்சென் மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருக்கும் நிலையில் அங்கு ஆக்சிஜன் தீர்ந்து போகும் நிலையில் இருக்கிறது. போதுமான ஆக்சிஜன் சப்ளையும் டெல்லி அரசிடம் இருந்து இல்லை. இதையடுத்து, ஆக்சிஜன் சப்ளையை முறையாக வழங்கிடக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பாலி அமர்வு ஆகியோர் முன் இன்று காணொலி மூலம் விசாரணைக்கு வந்தது. மருத்துவமனை தரப்பில் மூத்த வழக்கறிஞர் அலோக் அகர்வால் ஆஜராகினார். அவர் வாதிடுகையில், “ மனுதாரர் மருத்துவமனையில் 306 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். எங்கள் மருத்துமனையில் நேற்று இரவே ஆக்சிஜன் தீர்ந்துவிட்டது.

டெல்லி அரசின் உதவியால் ஆக்சிஜன் பெற்றுள்ளோம், அதுவும் இன்று பிற்பகலில் தீர்ந்துவிடும். அதன்பின் கொரோனா நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். டிஸ்சார்ஜ் செய்யத் தொடங்கிவிட்டோம்” எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், “ நாள்தோறும் இதே கதையைத்தான் கேட்கிறோம். ஆக்சிஜன் சப்ளையில் சூழல் இப்போது என்ன” எனக் கேட்டனர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான அதிகாரி பியூஷ் கோயல் கூறுகையில் “ நாங்கள் நிமிடத்துக்கு நிமிடம் கண்காணித்து வருகிறோம். டெல்லி அரசுடன் பணியாற்றி வருகிறோம். விமானத்தை அனுப்பி ஆக்சிஜன் கொண்டுவரச் செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

டெல்லி அரசு தரப்பில் வழக்கறிஞர் மேஹ்ரா ஆஜராகினார். அவர் கூறுகையில் “ டெல்லிக்கு 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கப்பட்டது. ஆனால், 350 மெட்ரிக் டன் மட்டுமே கிடைத்துள்ளதுஅதிலும் நேற்று 295 மெட்ரிக் டன் மட்டுமே வந்துள்ளது. டெல்லிக்கு மொத்தம் 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கட்டாயம் தேவை.

இல்லாவிட்டால், 24 மணிநேரத்தில் மாநிலத்தின் சுகாதார அமைப்பை உருக்குலைந்துவிடும். பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் நிலைமை ஆபத்தான நிலையில் இருக்கிறது. ஆக்சிஜன் கிடைக்காவிட்டால், ஏதாவது மிகப்பெரிய பேரழிவுகள் நடக்கலாம்” எனத் தெரிவி்த்தார்.

மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார். அவரிடம் நீதிபதிகள், “ மேத்தா, எப்போது டெல்லிக்கு 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும். சரியான தேதியைக் கூறுங்கள். மத்திய அரசு பணியாற்றவில்லை என்று யாரும் குற்றம்சாட்டவில்லை.அதேநேரம், கூட்டம் கூட்டமாக மக்கள் மடிவதை யாரும் பார்க்கவும் முடியாது.

ஆக்சிஜன் சப்ளையே தடுக்கும் மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் யாரையும் விட்டுவைக்க மாட்டோம். ஆக்சிஜன் சப்ளையே தடுப்பவர்கள் குறித்து ஒரு சம்பவத்தை டெல்லி அரசு எங்களிடம் உதாரணமாகக் காட்டினால் போதும் அந்த அதிகாரிகளை தூக்கில் போடுவோம்” என நீதிபதிகள் எச்சரித்தனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.