முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்படுகிறார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காத நிலை உள்ளது. இந்நிலையில், டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இது தொடர்பாக பேச முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இன்று இரவு 9.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.
புதிதாக தேர்வாகியுள்ள குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவுள்ளார். அதை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்றதற்காக நன்றி தெரிவிக்கிறார்.
முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்ததாக தமிழக அரசுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி தெரிவித்திருந்தார். அதேபோல், நேரில் சென்று அழைக்கவில்லை என்றாலும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார் என ஸ்டாலினும் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். இந்நிலையில்தான், பிரதமரை சந்தித்த மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவிக்க உள்ளார்.
மேலும், தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகைகள் குறித்தும், ஆளுநர் வசம் கிடப்பில் உள்ள தமிழக அரசின் மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்கவும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நாளை இரவு 10.45 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறார்.