நீர் தேர்வு யார் காலத்தில் வந்தது…? சட்டசபையில் அ.தி.மு.க – தி.மு.க காரசார விவாதம்

0
84

நீர் தேர்வு யார் காலத்தில் வந்தது…? சட்டசபையில் அ.தி.மு.க – தி.மு.க காரசார விவாதம்

சென்னை: நீட் தேர்வில் விலக்கு கோரி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டதை கவர்னர் ஆர்.என். ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார்.

மசோதா திருப்பி அனுப்பியதை தொடர்ந்து பிப்ரவரி 5-ஆம் தேதி சட்டமன்ற அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

சிறப்பு கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு பேசும்போது கூறியதாவது:-

தனிப்பட்ட முறையில் கவர்னர் பற்றி கண்டிப்பாக பேச கூடாது; அதை நான் அனுமதிக்க மாட்டேன். ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்மட்ட குழுவின் அறிக்கை காமாலைக் கண்ணுடன் உள்ளது. இது யூகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என கவர்னரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார்.

நீட் தேர்வு விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். தொடர்ந்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் பேசினர்.

அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வு ரத்துக்கு அனைத்து முயற்சிகளும் எடுத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், யாரும் கேட்காத நேரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிமுகவின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொடுத்தார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேசுகையில், அனந்தராமன் குழு குறித்து பேசினார். 1984இல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு இருந்தது. இந்நிலையில் 2005ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாதான் நுழைவுத் தேர்வு ரத்துக்கு முதல்முறையாக சட்டம் கொண்டு வந்தார்.

அதற்க்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 2005இல் சட்டம் கொண்டுவந்தோம் எனக் கூறுவது ஆதாரமற்றது. 2006ஆம் ஆண்டுதான் அனந்தராமனின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்தபின் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது என கூறினார்.

தொடர்ந்து பேசிய விஜயபாஸ்கர், 19 ஜூன் 2005ஆம் தேதி அரசாணை 184-ஐ வெளியிட்டு ரத்து செய்ய உத்தரவிட்டது அப்போதை முதல்வர்தான். அந்த சட்டத்தை எதிர்த்து பிரியதர்ஷினி என்ற மாணவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், சட்டம் ரத்து செய்யப்பட்டது. பின், 2006ஆம் ஆண்டு அதே சட்டத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுதான் தி.மு.க. நிறைவேற்றியது என கூறினார்.

இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, 1984ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு வந்தது என விஜயபாஸ்கரே ஒப்புக் கொண்டுள்ளார். அப்போது அதிமுகவின் ஆட்சிதான் இருந்தது என கூறினார்

தொடர்ந்து பேசிய விஜயபாஸ்கர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே நீட் எதிர்ப்பு குரலை அ.தி.மு.க. கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. வெளியில் பேசும்போது அ.தி.மு.க. யாருக்கோ அடிபணிந்துவிட்டது என கூறும்போதுதான் இதையெல்லாம் பேச கடமைப்பட்டுள்ளேன். நீட் என்ற தேர்வை 27.12.2010-இல் காங்கிரஸ்தான் கொண்டுவந்தது என கூறினார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெர்வித்தனர்.

அப்போது பேசிய முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் விலக்கு மசோதா ஏற்கனவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது. மீண்டும் நிறைவேற்றதான் பேரவை கூடியுள்ளது. இதற்கிடையே வேறு பிரச்சினைகளை பேசி திசைத்திருப்ப வேண்டாம்.

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய இரண்டு நாள்களே மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், உங்கள் ஆட்சியில் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு ஒரு ஆண்டு கழித்துதான் எல்லாருக்கும் தெரியவந்தது என கூறினார்.

அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன் இப்போது நீங்களா? நாங்களா? என பேசிக் கொண்டுபோனால் பிரச்சினை நீண்டு கொண்டே போகும். பேசியதை விடுங்கள் தீர்மானத்திற்கு ஆதரவளியுங்கள் என கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது அ.தி.மு.க. ஆட்சியில்தான் நீட் வந்தது என்ற தவறான கருத்து உள்ளது. தமிழகத்திற்குள் நீட் எப்போது வந்தது என்பதைதான் எனது கட்சியினர் பேசுகிறார். வரலாறை மறுத்து யாரும் பேச முடியாது என கூறினார்.

தொடர்ந்து பேசிய விஜயபாஸ்கர் சட்ட வல்லுநர்களை கொண்டு மிக நுணுக்கமாக நீட் விலக்கு விஷயத்தை கையாள வேண்டும் என கூறினார்.

எடப்பாடி பழனிசாமி பேசும் போது ஆக்கப்பூர்வமான சட்ட வல்லுநர்களை கொண்டு நீட் விலக்கு விஷயத்தில் அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என கூறினார். அதை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.