எதனையும் அழிப்பது எளிது ஆனால் மறுகட்டமைப்பு செய்வது கடினம் – IAS சட்டத்திருத்தம் குறித்து முதல்வர் கடிதம்
சமீபத்தில் ஒன்றிய அரசு அகில இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954ல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது என்றும் இந்த உத்தேச திருத்தங்களுக்கு தன்னுடைய கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் ஒரு இணக்கமான சூழ்நிலைக்கு இந்தத் திருத்தங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஒன்றிய அரசின் வசம் அதிகாரக் குவிப்பிற்கு வழிவகுக்கும் எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் ஆட்சிப் பணி அதிகாரிகளின் பணிச்சூழலை நிர்வகிப்பது குறித்த ஒன்றிய அரசின் தவறான அணுகுமுறைகள் காரணமாக ஏற்கனவே மாநில அரசுகளில் குறிப்பிட்ட சில முதுநிலைகளில் போதுமான எண்ணிக்கையில் அலுவலர்கள் இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது.
ஒன்றிய குரூப்-I நிலை அலுவலர்கள் மூலமாகவும், வெளிச் சந்தையிலிருந்து வல்லுநர்களை தேர்வு செய்யும் (Lateral entry) முறை மூலமாகவும் ஒன்றிய அரசு தனது தேவையை நிறைவு செய்து கொள்ளும் சூழ்நிலையில் மாநில அரசு முழுக்க முழுக்க தன்னுடைய நிர்வாகத் தேவைகளுக்கு குறைவான எண்ணிக்கையில் உள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைச் சார்ந்துள்ளது என்பதை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களுக்குத் தேவையான பல்வேறு ஒன்றிய, மாநில அரசின் திட்டங்களை மாநில அரசுகளே முன்னின்று செயல்படுத்தி வருவதையும், தேசிய பேரிடர்களை எதிர்கொள்ளும் சமயங்களில் போதுமான எண்ணிக்கையில் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மாநில அரசுகளுக்கு தேவைப்படுவதையும் தனது கடித்ததில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மாநில அரசில் பணிபுரியும் அதிகாரிகளை ஒன்றிய அரசு பணிக்கு அனுப்ப வற்புறுத்துவது, ஏற்கனவே போதுமான எண்ணிக்கைக் குறைபாடுள்ள நிலையில் நிர்வாகத்தில் ஒரு தொய்வுநிலையை ஏற்பட்டுத்திவிடும். மேலும், ஒன்றிய அரசு வெளிச் சந்தையிலிருந்து வல்லுநர்களை தேர்வு செய்திடும் முறை ஒன்றிய அரசு பணிக்குச் செல்ல விரும்பும் அலுவலர்களின் ஆர்வத்தையும் ஏற்கனவே குறைத்துள்ளதை தனது கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த புதிய சட்ட திருத்தமானது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் தனித்துவம் வாய்ந்த ஒரு அம்சமான அகில இந்திய ஆட்சிப் பணி என்பதனை சேதமடையச் செய்துவிடும் என்பதையும் இந்திய ஆட்சிப் பணி இதுவரை தேசத்திற்குச் சிறப்பான சேவையாற்றி ஒன்றிய, மாநில அரசுகளுக்கிடையே இணக்கமான உறவுகளின் மூலம் ஒரு வலுவான கட்டமைப்பாக திகழ்வதையும் குறிப்பிட்டுள்ளார்.
உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவின்படி சம்பந்தப்பட்ட அலுவலரின் விருப்பம் மற்றும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஒன்றிய அரசின் பணிக்கு மாற்றமுடியும் எனும் நிலை இந்தியாவின் எஃகு கட்டமைப்பு (steel frame) என்று அழைக்கப்படும் அரசுப் பணி நிர்வாகத்திற்கு ஒரு நிலையற்ற தன்மையையும், அலுவலர்களிடையே பணி ஆர்வத்தையும் குறைக்குமென்றும் முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்கள். இதனை செயல்படுத்தினால் அகில இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் ஒரு நிரந்தர அச்ச உணர்வுடன் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.
இது தற்போது வளர்ச்சிப் பாதையில் செல்ல விரும்பும் நம்முடைய நாட்டிற்கு உகந்ததல்ல என்றும் தெரிவித்துள்ளார்கள். குடிமைப்பணி அலுவலர்கள் அரசியல் சார்புத்தன்மை இன்றியும், எவ்வித அச்ச உணர்வின்றியும் பணியாற்ற வேண்டும். ஆனால் உத்தேசிக்கப்பட்ட சட்ட திருத்தங்கள் நிர்வாகக் கட்டமைப்பின் தன்மையையும் அதன் பணியாற்றும் செயல்திறனையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மாநிலங்களில் குடிமைப்பணி அதிகாரிகளின் பணிச்சூழலை நிர்வகிப்பதும் சிக்கலாக்கிவிடும். இவற்றினால் மாநில நிர்வாகமும் அதன் மூலம் தேச நலனும் கூட பாதிக்கப்படக்கூடும் என்பதை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
புதிய சட்ட திருத்தத்தின் விளைவுகள் அச்சமூட்டுவதாக உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் உரிய ஆலோசனை மேற்கொள்ளாமல் அவசரமாக சட்ட திருத்தங்களை ஒன்றிய அரசு கொண்டு வர முயற்சிப்பது இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு மிகவும் எதிரானதாகும். இந்தத் திருத்தத்திற்கு தொடர்புடைய இரண்டு அமைப்புகளான மாநிலஅரசுகளும், நிர்வாக கட்டமைப்பும் இதனை வரவேற்கவில்லை என்றும், ஏற்கனவே நடைமுறையிலுள்ள ஒரு ஏற்பாட்டினை மாநில அரசுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு எடுத்துக்கொள்வதும் கூட்டாட்சி அரசியல் அமைப்பிற்கு உகந்ததல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
இது கடந்த 75 ஆண்டுகளாக கவனமாக உருவாக்கப்பட்ட இந்த தேசத்தின் சித்தாந்தங்களை வலுவிழக்கச் செய்யும் என்பதனையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எதனையும் அழிப்பது எளிது ஆனால் மறுகட்டமைப்பு செய்வது கடினமானது. இவ்வாறான கட்டுப்படுத்தக்கூடிய புதிய விதிமுறைகளை வகுப்பதற்குப் பதிலாக மாநில அரசுகளின் ஆலோசனைகளை எடுத்துக்கொண்டு ஒன்றிய அரசு நேர்மறையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அகில இந்திய ஆட்சிப் பணியாளர்களின் பணி அமைப்பினை மேம்படுத்தவும் அவர்கள் பணியாற்றுவதற்கு சாதகமான சூழலையும் உருவாக்குவதன் மூலம் ஒன்றிய அரசுப் பணிகளுக்கு அவர்கள் தாங்களாகவே எவ்வித வற்புறுத்தலும் இல்லாமல் சென்று பணியாற்றக்கூடிய நிலையினை உருவாக்கலாம்.
I have written to @PMOIndia expressing my strong reservations against the proposed amendments to IAS (Cadre) Rules 1954. I also request other Chief ministers to express their opinion about this proposal which shakes the foundation of the federalism of our nation. pic.twitter.com/phnQNVjnsB
— M.K.Stalin (@mkstalin) January 23, 2022
தாங்கள் இது குறித்து மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், நம்மால் கணிக்க இயலாத விளைவுகளை இது நிச்சயம் ஏற்படுத்தும் எனக் கருதுகிறேன். மேலும் சுதந்திரமான சிந்தனை மற்றும் பாதுகாப்பு உணர்வுடன் சேவையாற்றும் ஒரு எஃகு நிர்வாக கட்டமைப்பை உருவாக்க விரும்பிய சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் தொலைநோக்கு சிந்தனையை நாம் நினைவுகூற வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் இந்திய ஆட்சிப் பணி விதிகளில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாறுதல்களை கைவிடுமாறும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் நிர்வாக கட்டமைப்பு குறித்து நமது முன்னோர்கள் அளித்துள்ள உயரிய சிந்தனையான கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் தேசத்தை முன்னெடுத்துச் செல்ல, மாநில அரசுகளோடு கலந்தாலோசனை செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தனது கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்திய பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.