அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தை வாங்க போட்டி போடும் ஓ.டி.டி. தளங்கள்!

0
217

அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தை வாங்க போட்டி போடும் ஓ.டி.டி. தளங்கள்!

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா கடந்தாண்டு பரவத் தொடங்கிய போது, உலகின் எல்லா நாடுகளிலும் திரை அரங்குகள் மூடப்பட்டன. இதனால், மக்களின் பார்வை ஓடிடி தளங்கள் பக்கம் திரும்பின. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டதால் வேறு வழியின்றி திரைத்துறையினரும் ஓடிடி நிறுவனங்களை நாடத் தொடங்கினர். அதன் காரணமாகவே, சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களே ஓடிடியில் வெளியாகும் நிலை ஏற்பட்டது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக, மீண்டும் இரவு நேர ஊரடங்கு, மெட்ரோ நகர்களில் ஊரடங்கு என பல கட்டுப்பாடுகள் தொடங்கிவிட்டன. அதனால் மீண்டும் திரையரங்கம் முடங்கி, திரைத்துறை முடங்கியுள்ளது. தியேட்டர்களை மூடி உள்ளதால் திரைக்கு வர தயாராக இருந்த 50-க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன.

தற்போது, தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் படத்தையும், ஓ.டி.டி. தளம் வாங்கி ஜூன் மாதம் வெளியிடுகிறது. விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், திரிஷா நடித்துள்ள ராங்கி, சிவகார்த்திகேயனின் டாக்டர், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் ஆகிய படங்களையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

இந்த நிலையில்தான் ஓ.டி.டி. தளங்கள் வலிமையை வாங்க போட்டி போடுவதாக கூறப்படுகிறது. ஒருசில ஓ.டி.டி. தளங்கள் விலை பேசுவதாக பரபரப்பு தகவல் பரவி வருகிறது. இந்த வருடம் ஆகஸ்டு மாதம் திரைக்கு வருவதாக இருந்த வலிமை படம் கொரோனாவால் தாமதமாகி உள்ளது. இன்னும் ஒரு வாரம் படப்பிடிப்பு பாக்கி உள்ளது. தீபாவளிக்கு படத்தை திரையிட படக்குழுவினர் ஆர்வமாக உள்ளனர்.

ஆனாலும் அஜித்குமார், தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோர் படத்தை தியேட்டரில் திரையிடும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.