சிங்கப்பூர் சலூன் சினிமா விமர்சனம்: சிங்கப்பூர் சலூன் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து மகிழும் விதமாக வெற்றிபடிகட்டில் பல சிகரங்களை தொடும்: 3.5/5

0
375

சிங்கப்பூர் சலூன் சினிமா விமர்சனம்: சிங்கப்பூர் சலூன் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து மகிழும் விதமாக வெற்றிபடிகட்டில் பல சிகரங்களை தொடும்: 3.5/5

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரித்திருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கோகுல்.

ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, ஆன் ஷீடல், சத்யராஜ், லால், ரோபோ ஷங்கர், ஒய்.ஜி மகேந்திரன், தலைவாசல் விஜய், சின்னி ஜெயந்த், ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :- ஒளிப்பதிவாளர் : எம்.சுகுமார், இசை: விவேக்-மெர்வின், எடிட்டர்: செல்வா ஆர்.கே, பின்னணி இசை : ஜாவேத் ரியாஸ், கலை இயக்குனர்: ஜெயச்சந்திரன், நடன இயக்குனர்: பூபதி, ஒலி வடிவமைப்பு : சுரேன்.ஜி – அழகியகூத்தன், ஆடை வடிவமைப்பாளர்: திவ்யா நாகராஜன், ஸ்டண்ட்: பிரபு, டைரக்ஷன் டீம்: செந்தில் விநாயகர், அமீர் ஜமால் கான், வருண் ராஜேந்திரன், சுரேஷ் குரு, ஸ்டீபன், சதீஷ், தயாரிப்பு நிர்வாகி: என். விக்கி, மகா காளி சிவா, வி. பாலமுருகன், பாடல் வரிகள்: உமா தேவி, அறிவு, ஸ்பெஷல் மேக்கப்: ரோஷன், ஒப்பனை: பிரகாஷ், ஸ்டில்ஸ்: ராஜ,பி.ஆர்.ஓ: சுரேஷ் சந்திரா

கதிரின் (ஆர்.ஜே. பாலாஜி) தற்கொலை செய்து கொள்ளும் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலத்துடன் அதற்கான காரணத்தை விவரிப்பதிலிருந்து தான் சிங்கப்பூர் சலூன் கதை தொடங்குகிறது. கிராமத்தில் வசிக்கும் கதிர் மற்றும் பஷீர் சிறுவயதிலிருந்தே உயிர் நண்பர்கள். இவர்கள் இருவரும் சாச்சாவின் (லால்) முடிதிருத்தும் கடையான சிங்கப்பூர் சலூனில் தான் நிறைய நேரம் செலவிடுகின்றனர். சாச்சாவின் முடி திருத்தும் அழகைப் பார்த்து வியந்து அன்று முதல் புகழ்பெற்ற ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் என்ற கதிரின் லட்சியமாகிறது. தன் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக இன்ஜினியரிங் படிப்பை முடித்து விட்டு தன் விருப்பமான சிகையலங்கார நிபுணராக பெரிய நிறுவனத்தில் பயிற்சி பெறுகிறார். அதன் பின் தன் கல்லூரியில் படித்த மீனாட்சி சௌத்ரியை திருமணம் செய்து கொள்கிறார். கதிரின் மாமனார் சத்யராஜ் உதவி செய்ய அலங்கார வேலைகளுக்கு கடன் பெற்று சிங்கப்பூர் சலூன்  என்ற நிறுவனத்தை தொடங்குகிறார். அதன் பின் எதிர்பாராவிதமாக சலூனின் பின்புறம் புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மூன்று பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழ பெரிய சிக்கல்களை எதிர்கொள்கிறார். இவரின் சலூனை சுற்றி ஏழை எளிய மக்கள் குடியேறுகின்றனர். இதனால் இவரின் சலூனிற்கு எதிர்பார்த்த அளவு வாடிக்கையாளர்கள் வராமல் போகின்றனர். தொழில் போட்டி, கடன் சுமை என்று தத்தளிக்கும் கதிர் எவ்வாறு இதிலிருந்து மீள்கிறார்? தற்கொலை வரை செல்லும் கதிரின் மனதை மாற்றுவது யார்? சிங்கப்பூர் சலூன்  பெரிய அளவில் வெற்றி பெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஆர்.ஜே.பாலாஜி நல்லவராகவும், தொழிலில் திறமையானவராகவும் ஒரு சிகையலங்கார நிபுணராக பணிபுரிவதை கௌரவமாக நினைக்கும் வைராக்கியம் கொண்ட இளைஞராகவும், தன் லட்சியத்தை நோக்கி செல்லும் பயணத்தில் ஏற்படும் தடங்கல்களை வென்று காட்டும் தன்னம்பிக்கை கொண்ட கதாபாத்திரத்தை தாங்கி பிடித்துள்ளார்.

சத்யராஜ் கஞ்சத்தனம் மிகுந்த மாமனாராக முதல் பாதியில் தனது மருமகன்களுடன் வரும் காட்சிகளில் காமெடி கலக்கல் சூப்பர். சத்யராஜின் வசனவரிகள் அட்டகாசமாக இல்லாவிட்டாலும், அவற்றை அவர் வெளிப்படுத்தும் விதமும் அவரது உணர்ச்சிகள் மிகுந்த வெளிப்பாடுகளும் சிரிக்க வைக்கின்றன.

கிஷன் தாஸ் மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் பொருத்தமானவர்களாக ஆர்.ஜே.பாலாஜிக்கு உறுதுணையாக வந்து போகின்றனர்.  மீனாட்சி சவுத்ரிக்கு படத்தில் அதிகம் வேலை இல்லாவிட்டாலும் முடிந்த வரை வந்து போகிறார்.

அரவிந்த் ஸ்வாமி மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோரின் சிறப்பு தோற்றங்கள் சிந்திக்க வைக்கிறது.

நாயகன் தந்தையாக தலைவாசல் விஜய், கதிரை விலைக்கு வாங்க நினைக்கும் போட்டியாளராக ஜான் விஜய், ஆன் ஷீடல், ஒய்.ஜி மகேந்திரன், சின்னி ஜெயந்த் ஆகியோர் பக்கமேளங்கள்.

படத்தின் ஆரம்பப் காட்சிகளில் வரும் கிராமத்து இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களில் படமாக்கப்பட்ட காட்சிகள், கல்லூரி நாட்கள், சலூன் சம்பந்தப்பட்ட காட்சிகள், ரியாலிட்டி ஷோ பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் காட்சிக் கோணங்களில் சுகுமாரின் கைவண்ணம் தெரிகிறது.

விவேக்-மெர்வினின் இசையும் பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. ஜாவேத் ரியாஸ் பின்னணி இசை சிறப்பு.

செல்வகுமாரின் கச்சிதமான எடிட்டிங் படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது. படகு வடிவில் வடிவமைத்திருக்கும் சிங்கப்பூர் சலூன் கடை செட்டப்பை சிறப்பாக கொடுத்துள்ளார் கலை இயக்குநர் ஜெயச்சந்திரன்.

சிஜி தொழில்நுட்பத்தில் சலூன், கிளிகள், அடுக்குமாடி கட்டடம் என்று முடிந்தவரை தத்ரூபமாக கொடுக்க முயற்சித்துள்ளனர்.

சிகையலங்காரத்தை உன்னதமான தொழிலாகவும், சிகையலங்கார நிபுணர்களை மரியாதைக்கு உரியவர்களாகவும் மாற்றும் கதைக்களத்தில் முதல் பாதி அந்த லட்சியத்தை அடைய நாயகனின் முயற்சி, பயிற்சியுடன் காமெடி கலாட்டாவுடன் நகர அதற்கு எதிர்மறையாக இரண்டாம் பாதி மழை, வெள்ளம், கட்டடம் பேரழிவு, குடியேறும் ஏழை மக்கள், பறவைகளின் சரணாலயம், சிகை திருத்தம் பெறும் ஏழை இளைஞர்களின் நடன டிவி ரியாலிட்டி ஷோ, புகழ் வெளிச்சம், வலைதளப் புரட்சி, சாதனை, சலூனை இடிக்க எடுக்கும் நடவடிக்கை, முறியடிக்கும் முடிவு என்று பல சமூக பிரச்சனைகளை ஒன்றாக இணைத்து ஒரு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வேறு கோணத்தில் சீரியஸாக படைத்துள்ளார் இயக்குனர் கோகுல்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரித்திருக்கும் சிங்கப்பூர் சலூன் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து மகிழும் விதமாக வெற்றிபடிகட்டில் பல சிகரங்களை தொடும்.