ரன் பேபி ரன் திரை விமர்சனம்: ரன் பேபி ரன் க்ரைம் த்ரில்லர் கதையில் புதிரும், திருப்பமும் கலந்து சஸ்பென்ஸ் நிறைந்த தேடல் | ரேட்டிங்: 3/5

0
472

ரன் பேபி ரன் திரை விமர்சனம்: ரன் பேபி ரன் க்ரைம் த்ரில்லர் கதையில் புதிரும், திருப்பமும் கலந்து சஸ்பென்ஸ் நிறைந்த தேடல் | ரேட்டிங்: 3/5

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மண்குமார் தயாரித்து ரன் பேபி ரன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜியென் கிருஷ்ணகுமார்.
இதில் ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், இஷா தல்வார், ராதிகா ஆர்.சரத்குமார், ஸ்ம்ருதி வெங்கட், ஜார்ஜ் மரியான், ஜோ மல்லூரி, ஹரிஷ் பேரடி, நாகிநீடு, விவேக் பிரசன்னா, தமிழரசன், கேபி பாலா, கபாலி விஷ்வந்த், ராஜ் அய்யப்பா, பகவதி பெருமாள், பிரியதர்ஷினி, ரெத்திகா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்;கள்:- இசை – சாம். சி.எஸ்., ஒளிப்பதிவு – எஸ். யுவா, எடிட்டர் – ஜி. மதன், கலை இயக்குனர் – வீரமணி கணேசன், ஸ்டண்ட் – ஆர். சக்தி சரவணன், பாடல்கள் – விவேகா, ஆடை வடிவமைப்பாளர்கள் – திவ்யா நாகராஜன், நிஜம் கண்மணி , மக்கள் தொடர்பு – ஜான்சன்

2015 ஆம் ஆண்டில் தொடங்கும் கதைக்களத்தில் அரசு மருத்துவ கல்லூரி  மாணவி சோஃபி (ஸ்ம்ருதி வெங்கட்) கட்டிடத்திலிருந்து கிழே விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார். அவருடைய தோழி தாராவை (ஐஸ்வர்யா ராஜேஷ்) ரவுடிகள் சிலர் துரத்துவது போல் படம் தொடங்குகிறது. அதே சமயம் இஷா தல்வாருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட வங்கி ஊழியர் சத்யா (ஆர்ஜே பாலாஜி) காரில் ஒன்றாகச் செல்லும் போது தாரா பின் இருக்கையில் மறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். பின்னர் அவர் தனது வருங்கால மனைவியை அவரது வீட்டில் இறக்கிவிட்டு தனது அடுக்குமாடி கட்டிடத்திற்கு காரை ஓட்டிச் செல்கிறார். அங்கே தாரா  தான் ஒரு பெரிய ஆபத்தில் மாட்டிக் கொண்டிருப்பதாகவும் தன் கைபேசியை சார்ஜ் செய்து கொண்டு தன் கார்ட்டியனை வரவழைந்து செல்லும் வரையில் சத்யா வீட்டில் இருக்க அனுமதி கேட்டு கெஞ்சுகிறார். அவள் மீது இரக்கம் கொண்டு அவளை உள்ளே அனுமதித்து தன் கணினியில் ஜூம் மீட்டிங்கில் சத்யா பிஸியாகிறார். மறுநாள் காலை அவர் எழுந்து பார்க்கும் போது அந்த பெண் தனது குளியலறையில் இறந்துவிட்டதைக் கண்டு அதிர்ச்சியாகிறார்.  மேலும் அவரது போலீஸ் நண்பர் விவேக் பிரசன்னா உடலை அப்புறப்படுத்த சத்யாவிற்கு அறிவுறுத்துகிறார். சத்யா சூட்கேசில் பேக் செய்து உடலை அப்புறப்படுத்த எடுத்துச் செல்லும் போது துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் மற்றும் மரணங்கள் நிகழ்கின்றன. கொலைசெய்யப்பட்டபெண் யார்? அவள் ஏன் கொல்லப்பட்டாள், யார் குற்றங்களைச் செய்கிறார்கள்? மீதி திரைக்கதை இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்கிறது.

இதுவரை தன் திறமைக்கு ஏற்றவாறு, தான் இயக்கும் போதும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜிக்கு இது ஒரு நம்பிக்கையான மாற்றம். ஒரு நொடியையும் வீணாக்காத இந்த இடைவிடாத த்ரில்லரில் அவர் ஜொலிக்கிறார், கடைசி நிமிடம் வரை சிலிர்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலங்களில் இதுவும் ஒன்று. ஆர்.ஜே பாலாஜி கதாபாத்திரத்திற்கும் படத்தின் கதைக்கும் ஏற்றவாறு கச்சிதமாக நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா மற்றும் இஷா தல்வார், ஸ்ம்ருதி வெங்கட், ஜார்ஜ் மரியான், ஜோ மல்லூரி, ஹரிஷ் பேரடி, நாகிநீடு, விவேக் பிரசன்னா, தமிழரசன், கேபி பாலா, கபாலி விஷ்வந்த், ராஜ் அய்யப்பா, பகவதி பெருமாள், பிரியதர்ஷினி, ரெத்திகா ஸ்ரீனிவாஸ் உட்பட மற்ற கதாபாத்திரங்களுக்கான காட்சிகள் குறைவாகவே உள்ளன. அவர்களும் தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ரன் பேபி ரன் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இவரின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்துள்ளது

எஸ். யுவாவின் ஒளிப்பதிவு படத்தின் அத்தனை காட்சிகளையும், மர்மங்களையும் தனித் திறமையோடு கொடுத்துள்ளார்.

‘ரன் பேபி ரன்” படத்தில் சிறப்பாக படுவது என்னவென்றால், திரைக்கதையின் முதல் அரை மணிநேரம் பார்வையாளர்களை திரையில் ஒட்ட வைக்கும் அளவுக்கு மர்மத்தை நீடித்திருக்கிறார் இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார். மேலும் படம் முழுவதும் அவ்வப்போது பார்வையாளரின் கவனத்தை ஒரு சந்தேகத்தில் இருந்து மற்றொருவருக்கு மாற்றுவதில் வெற்றி பெறுகிறது. இது ஒரு அசாதாரண சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் ஒரு சாதாரண இளைஞனின் கதை தன்னை இக்கட்டிலிருந்து விடுவித்துக் கொள்ள அவர் எடுக்கும் முயற்சிகளைப் பற்றியும், அதன் பின்னர்  சிக்கலில் மாட்டிக் கொண்டு அதிலிருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகள் பற்றிய படத்திற்கு நிச்சயமாக ஒரு சிறந்த எதிரி மற்றும் வலுவான திருப்பம் தேவை ஆனால் வில்லன்களை வலுவானவர்களாக காட்டப்படாமல் நகர்கிறது.திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளை இன்னும் சிறப்பாக வடிவமைத்திருந்தால் ரன் பேபி ரன், இன்னும் பாராட்டுக்குரியதாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மண்குமார் தயாரித்திருக்கும் ரன் பேபி ரன் க்ரைம் த்ரில்லர் கதையில் புதிரும், திருப்பமும் கலந்து சஸ்பென்ஸ் நிறைந்த தேடல்.