நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே சினிமா விமர்சனம் : இன்றைய ஏமாற்ற நினைக்கும் இளைஞர்களின் மனநிலையை பிரதிபலித்து சவுக்கடி கொடுக்கும் பயணம் | ரேட்டிங்: 2.5/5

0
238

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே சினிமா விமர்சனம் : இன்றைய ஏமாற்ற நினைக்கும் இளைஞர்களின் மனநிலையை பிரதிபலித்து சவுக்கடி கொடுக்கும் பயணம் | ரேட்டிங்: 2.5/5

‘பூர்வா புரொடக்ஷன்ஸ்’ சார்பில், பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான பிரதீப் குமார், இசையமைத்து பாடல்களை எழுதி தயாரித்திருக்கும் படம் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே.

இதில் செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதா ராணி, மினு வாலண்டினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :- இயக்கம்: பிரசாத் ராமர், ஒளிப்பதிவு: உதய் தங்கவேல், இசை: பிரதீப் குமார், படத்தொகுப்பு : ராதாகிருஷ்ணன் தனபால், மக்கள் தொடர்பு : டிஒன், சுரேஷ் சந்திரா, நாசர்.

மதுரையில் படித்து விட்டு வேலைவெட்டிக்கு செல்லாமல் பொழுதை போக்கிக்கொண்டு, பேஸ்புக் தோழிகளுடன் அரட்டை அடித்து, அவர்களை சினிமாவிற்கு அழைத்து அத்துமீறி சில்மிஷம் செய்து கொண்டிருக்கிறார் ரவிச்சந்திரன் (செந்தூர் பாண்டியன்). ஒரு சில நண்பர்களும் இவருடன் சேர்ந்து இதையே பொழைப்பாகவும், பெண்களை ஏமாற்றுவதும் ஒரு பெண் கசந்து விட்டால் மற்றொரு பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதே இவர்களுடைய பழக்கமாக இருக்கிறது. அது போல் ரவிச்சந்திரனுக்கு மயிலாடுதுறையை சேர்ந்த அரசி (ப்ரீத்தி கரண்) என்ற இளம்பெண்ணின் நட்பு பேஸ் புக் தளத்தின் மூலம் கிடைக்கிறது. அரசி அவனிடம் மறுநாள் அவளுக்கு பிறந்த நாள் என்று கூற ரவிச்சந்திரன் உடனடியாக அவளுக்கு ஒரு பரிசுடன் பிறந்த நாள் அன்று அவள் இடத்திற்கு வருவதாக உறுதி கூறுகிறான். அரசி உடனான நட்பை காம விளையாட்டில் பயன்படுத்த நினைக்கும் ரவிச்சந்திரன், அரசியை நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் தர தனது நெருங்கிய நண்பன் காந்தியுடன் (சுரேஷ் மதியழகன்) பைக்கில் மதுரையில் இருந்து மயிலாடுதுறை செல்கிறான். மயிலாடுதுறை வந்தடைந்ததும், அரசியை தொடர்பு கொள்ளும் போது வீட்டில் யாரும் இல்லை, நீ வீட்டுக்கு வா என்று அரசி அழைக்க இன்று நம் எண்ணம் நிறைவேற போகிறது என்ற சந்தோஷத்தில் அவளது வீட்டிற்கு செல்கிறான். வீட்டில் அரசி தன்னுடைய பாட்டியுடன் இருப்பதை பார்த்து ஏமாற்றம் அடைகிறான். அதன் பின் அரசி, வெளியே அழைத்துச் செல்கிறாள். அங்கே தனது தோழிகள் சோபியா பானு (பூர்ணிமா ரவி), சபீனா பானு (தமிழ்செல்வி) வரவழைத்து ரவிச்சந்திரன், காந்தியுடன் சேர்ந்து காபி அருந்துகிறார்கள். தோழிகள் சென்றவுடன் அங்கிருந்து ரவிச்சந்திரன் தன் நண்பனை கழட்டி விட்டு அரசியுடன் தனியாக செல்கிறார். அதன் பின் இருவரும் சென்ற இடம் எது? அங்கு ரவிச்சந்திரன் எண்ணம் நிறைவேறியதா? இல்லையா? அரசி ரவிச்சந்திரன் எண்ணத்தை புரிந்து கொண்டாரா? அவளின் நோக்கம் என்ன? என்ன செய்தாள்?  என்பதே படத்தின் மீதிக்கதை.

இதில் செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஆகிய சில கதாபாத்திரங்கள் மட்டுமே வரும் படத்தில் புதுமுகங்களாக அறிமுகமாகி இயல்பான வசன மொழியில் பேசிக் கொண்டு பயணம் செய்வதை சிறப்பாக செய்துள்ளனர். இவர்களின் கெட்ட,நல்ல குணங்களை அவர்கள் பேசும் வசனங்களிலேயே தெரிந்து கொள்வது போல் சித்தரித்து, அதில் பெண்ணின் புரிதலும், மனநிலையையும் ஒப்பிட்டு சரியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரசாத் ராமர்.

உதய் தங்கவேல் ஒளிப்பதிவு, பிரதீப் குமார் இசை, படத்தொகுப்பாளர் ராதாகிருஷ்ணன் தனபால் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் நிறைவாக செய்துள்ளனர்.

மதுரை இளைஞர்களின் போக்கையும், அவர்களின் குணாதியங்களையும் பிரதிபலிக்கும் விதமாகவும், இன்றைய பேஸ்புக் நண்பர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் உஷாராக இருப்பதை சிறப்பாக காட்சிப்படுத்தி இரட்டை அர்த்த வசனங்களால் நிரப்பி எழுதி இயக்கியிருக்கிறார் பிரசாத் ராமர். இன்றைய இளைஞர்களின் நிலை, அவர்களை எதிர்கொள்ளும் பெண்கள் ஏமாறுபவர்களாகவும் இருக்கிறார்கள், ஏமாறாதவர்களாகவும் தெளிவாகவும் இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி நல்ல பழக்கவழக்கங்கள் உள்ளவரை பெண்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் பைக் பயணத்துடன் அமைத்து தான் மற்றவர்களை ஏமாற்றுவது போல் தன் குடும்பத்தில் அவ்வாறு நடந்தால் செய்வதறியாது செல்லும் இளைஞனின் நிலையை இறுதிக் காட்சியில் தெளிவாக தந்திருக்கிறார் இயக்குனர் பிரசாத் ராமர்.

மொத்தத்தில் பூர்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரதீப் குமார் தயாரித்துள்ள படம் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே இன்றைய ஏமாற்ற நினைக்கும் இளைஞர்களின் மனநிலையை பிரதிபலித்து சவுக்கடி கொடுக்கும் பயணம்.