நான் கடவுள் இல்லை திரைவிமர்சனம்: நான் கடவுள் இல்லை சாத்தியமில்லாததை சாதித்து காட்டும் துணிச்சல் மிகுந்த போலீஸ் அதிகாரி | ரேட்டிங்: 3/5

0
666

நான் கடவுள் இல்லை திரைவிமர்சனம்: நான் கடவுள் இல்லை சாத்தியமில்லாததை சாதித்து காட்டும் துணிச்சல் மிகுந்த போலீஸ் அதிகாரி | ரேட்டிங்: 3/5

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து அவர் இயக்கியிருக்கும் 71-வது  படமாகும்.
இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, பருத்தி வீரன் சரவணன், எஸ்.ஏ.சந்திரசேகர், இனியா, சாக்ஷி அகர்வால், அபி சரவணன், யுவன் மயில்சாமி, ரோகிணி, இமான் அண்ணாச்சி, மதுரை மாயக்கா, தியான ஸ்ரீஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-ஒளிப்பதிவு – மகேஷ் கே தேவ், இசை – சித்தார்த் விபின், படத் தொகுப்பு – பிரபாகர் மற்றும் பிஜு டான் போஸ்கோ, கலை இயக்கம் – வனராஜ், மக்கள் தொடர்பு – சக்திசரவணன்.

கண்ணியமும், கண்டிப்பும் நிறைந்த போலீஸ் அதிகாரி செந்தூர பாண்டி (சமுத்திரக்கனி) மனைவி மகேஸ்வரி (இனியா), மகள் உமா (தியான ஸ்ரீ மற்றும் தாயுடன் (மதுரை மாயக்கா) வாழ்ந்து வருகிறார்.செந்தூரபாண்டி ஈவு இறக்கமற்ற கொடூரமான பல கொலைகளை செய்துவந்த கொலைக்காரன் வீரப்பனை (சரவணன்) தைரியத்துடன் பிடித்து  சிறையில் அடைக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயிலில் இருந்து தப்பிக்கும் வீரப்பன், முதலில் தனக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தையும் கொலை செய்து விட்டு தப்பித்துச் செல்கிறான். போலீஸ் தீவிரமாக தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கிறது. இந்நிலையில் அவரது மனைவி மகேஸ்வரிக்கு (இனியா) தன்னையும் தன் மகளையும் வீரப்பன் சுட்டுக் கொல்வது போல கனவு வருகிறது. அதே சமயம் வீரப்பன் தன்னை கைது செய்த செந்தூர பாண்டியையும் அவரது குடும்பத்தையும் கொலை செய்ய ஆள் அனுப்புகிறான் . இந்த முயற்சி தோல்வியடைவதால் செந்தூர பாண்டியின் மகளை கடத்தி சித்ரவதை செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கிறான். இதனால் கலவரம் அடையும் செந்தூரபாண்டியின் குடும்பம், போலீஸ் வேலையை விட்டுவிடுமாறு சொல்ல, அதன் படி ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிடுகிறார் செந்தூரபாண்டி. இன்னொரு கதையாக மறுபுறம் ஒரு சிறிய அனாதை பெண் கடவுளுக்கு புதிய ஆடைகள் கேட்டு கடிதம் எழுத ஜோதிலிங்கம் (எஸ்.ஏ.சந்திரசேகர்) என்ற தொழிலதிபர் எதேச்சையாக அந்தக் கடிதத்தைப் பெற்று அந்த சிறுமியின் ஆசையை பூர்த்தி செய்கிறார். கடவுள் தன் ஆசையை நிறைவேற்றினார் என்று அந்த சிறுமி நம்புகிறாள். இது விரைவில் வைரலாகி, மக்கள் கடவுளுக்கு கடிதங்களை அனுப்பத் தொடங்குகின்றனர். செந்தூரனின் மகள் உமா, தன் குடும்பத்தை கொலைகாரனிடமிருந்து காப்பாற்ற கடவுளுக்கு கடிதம் எழுதுகிறாள். அவளின் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றினாரா? வீரப்பனின் அட்டகாசம் ஒடுக்கப்பட்டதா? அதன் பின் என்ன நடந்தது? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

போலீஸ் சிஐடி அதிகாரி செந்தூரபாண்டியாக சமுத்திரகனி தன் கதாபாத்திரத்தை உணர்ந்து மிடுக்கான தோற்றத்துடன், அதிகாரத்துடன் கம்பீரமாக வலம் வருகிறார். குற்றவாளியை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கைகள், வியூகங்களை அமைத்து இறுதியில் பதவியால் முடியாததை, தன்னந்தனியாக இருந்து சாதித்து காட்டுவதில் கை தட்டல் பெறுகிறார்.

இனியா அன்பான மனைவி, பாசமாக தாயாக முத்திரை பதிக்கிறார்.

சமுத்திரக்கனியின் உதவியாளராக வரும் சாக்ஷி அகர்வால், குறிப்பாக ஸ்டண்ட் காட்சிகளில் சிறப்பாக நடித்து கவர்ச்சியிலும், அழகிலும் வசீகரிக்கிறார்.

கொடூர வில்லனாக சரவணன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துவதோடு தன் கண்களிலேயே ஆக்ரோஷத்தை  காட்டி மிரள வைத்து ரத்தவெறி பிடித்த மிருகமாக உலா வருகிறார்.

இப்படத்தில எஸ் ஏ சந்திரசேகர் தனது அனுபவமிக்க நடிப்பால் மிளிர்கிறார். மகத்தான உதவி செய்யும் ‘கடவுள்’ கதாபாத்திரத்தின் இவருக்கு பொருந்துகிறது மற்றும் அபி சரவணன், யுவன் மயில்சாமி, ரோகிணி, இமான் அண்ணாச்சி, மதுரை மாயக்கா, தியான ஸ்ரீ ஆகியோர் படத்தின் கதைக்கேற்ப நன்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மகேஷ் கே தேவ் ஒளிப்பதிவு படத்தின் அதிரடி சண்டை பகுதிகளை ரசிகர்கள் ரசிக்கும் பாணியுடன் படம்பிடித்து பரபரக்கும் ரணகள திரைக்கதைக்கு ஏற்ற ஒளிப்பதிவை நேர்த்தியாக கொடுத்து காட்சிக்கோணங்களில் அசத்தியுள்ளார்.
சித்தார்த் விபின் படத்திற்கேற்றவாறு பொருத்தமாகவும், வித்தியாசமாகவும் இசையமைத்திருக்கிறார்.

சண்டைக்காட்சிகள் தான் படத்தின் உயிர் நாடி. அதனை திறம்பட கையாண்டு மிரட்டியிருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர்.

எடிட்டர்:  பிரபாகர் மற்றும் பிஜு டான் போஸ்கோ, கலை இயக்குனர்: வனராஜ்  இவர்களின் பங்களிப்பு இப்படத்தின் கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படம் ஒட்டுமொத்தமாக 80களின் உணர்வைக் கொண்டுள்ளது. வன்முறை மிகுந்த ஆக்ரோஷன் படங்களை விரும்புபவர்கள் மட்டுமே பார்க்க முடியும். உண்மையான புலனாய்வு வேலைகளை விட உணர்ச்சிகரமான காட்சிகளில் அதிக நேரம் செலவிடப்படுகிறது. ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் குறிக்கிடும் குற்றவாளியை தேடி வேட்டையாடும் கதைக்களத்தில் குடும்ப செண்டிமென்ட், பகை, சமூக அக்கறை கலந்து திறம்பட அனுபவத்தோடு இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

மொத்தத்தில் ஸ்டார் மேக்கர்ஸ் நான் கடவுள் இல்லை சாத்தியமில்லாததை சாதித்து காட்டும் துணிச்சல் மிகுந்த போலீஸ் அதிகாரி.