டியர் சினிமா விமர்சனம் : டியர் புதுமண தம்பதிகளின் எதிர்பாராத குடும்ப பிரச்சனையின் அழுத்தமான பதிவு | ரேட்டிங்: 3/5

0
591

டியர் சினிமா விமர்சனம் : டியர் புதுமண தம்பதிகளின் எதிர்பாராத குடும்ப பிரச்சனையின் அழுத்தமான பதிவு | ரேட்டிங்: 3/5

நட்மெக் புரொடக்ஷன்ஸ் சார்பில் வருண் த்ரிபுரனெனி, அபிஷேக் ராமிஷெட்டி, ஜி.பிருத்விராஜ் தயாரித்து ரோமியோ பிக்சர்ஸ் வெளியீட்டில் வந்துள்ள டியர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஆனந்த் ரவிச்சந்திரன்.

இதில் ஜி.வி. பிரகாஷ் குமார் – அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் – தீபிகா , காளி வெங்கட் – சரவணன், நந்தினி – கல்பனா, தலைவாசல் விஜய் – சண்முகம் , ரோகினி – லட்சுமி, இளவரசு – ரங்கராஜ், கீதா கைலாசம் – வசந்தி , ஜெ. கமலேஷ் – சந்தோஷ், அப்தூல் லீ – பாண்டா, மகாலக்ஷ்மி சுதர்சனன் – ஜெனிஃபர் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :  ஒளிப்பதிவு – ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி, இசை – ஜி.வி. பிரகாஷ் குமார், படத்தொகுப்பு – ருக்கேஷ், மக்கள் தொடர்பு – யுவராஜ்

சிங்கிள் பேரன்ட் லட்சுமிக்கு (ரோகிணி) சரவணன் (காளி வெங்கட்) மற்றும் அர்ஜுன் (ஜி.வி.பிரகாஷ்) இரண்டு மகன்கள். கண்டிப்பு நிறைந்த சரவணனுக்கு திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறார். இளைய மகன் அர்ஜுன் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர், பிரபல தனியார் தொலைக்காட்சியில் சேர்ந்து நிதி அமைச்சர் மற்றும் பல பிரபலங்களை நேர்காணல் செய்ய வேண்டும் என்ற எதிர்கால லட்சிய கனவுடன் வாழ்கிறார். சரவணனும் அவனது தாய் லட்சுமியும் அர்ஜுனுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து, குன்னூருக்கு தீபிகாவை பெண் பார்க்க செல்கிறார்கள். தீபிகாவிற்கு குறட்டை பிரச்சனை இருக்க, அதனால் திருமணம் தள்ளிப் போவதால் தாயின் ஆலோசனைப்படி இந்த பிரச்சனையை மறைத்து  திருமணம் முடிக்க நினைக்கின்றனர். இந்த சமயத்தில் அர்ஜுனை பார்த்தவுடன் தீபிகாவிற்கு பிடித்துப் போக திருமணம் தடபுடலாக நடந்து முடிகிறது. தீபிகாவுக்கு குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது என்பதை முதலிரவு அன்று அர்ஜுனுக்கு தெரிய வர பிரச்சனை ஆரம்பமாகிறது. தீபிகாவும் அர்ஜுனும் இந்த குறட்டையை சமாளிக்க புதுமையான வழிகளைக் தேடுகிறார்கள். இதன் விளைவாக தூக்கமின்றி இருவரும் தவிக்க, முக்கியமாக அர்ஜுன் பிரபல தனியார் சேனலில் வேலை கிடைத்தும் நேர்காணல் செய்ய முடியாமல் வேலையில் தடை ஏற்படுகிறது. தன் லட்சிய கனவு சிதைந்ததால் கோபத்தில் இருக்கும் அர்ஜுன் தீபிகாவிடமிருந்து விவாகரத்து கேட்கிறார். இதற்கு சம்மதிக்காத தீபிகா அர்ஜுனை சமாதானப்படுத்த பார்க்கிறார். இறுதியில் அவர்கள் குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு சேர்ந்து தீர்வு கண்டார்களா? இருவரும் விவாகரத்து பெற்றார்களா? அல்லது சேர்ந்து வாழ்ந்து குறட்டை பிரச்சனையை சமாளித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அர்ஜுனாக ஜி.வி.பிரகாஷ் லட்சிய கனவுகளுடன் பயணிக்கும் கணவன் கதாபாத்திரத்தில் கோபம், துக்கம் இரண்டையும் சமாளித்து உணர்ச்சிகளை வெளிக்காட்டும் நடிப்பில் முன்னேற்றம் தெரிகிறது. இதில் இவருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க அவுட் ஆகியுள்ளது.

தீபிகாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் குறட்டையால் அவதிப்படும் பெண்ணாக, தன் மண வாழ்க்கை பாதிக்கும் நிலைக்கு செல்லும் போது அதை தடுக்க பல முயற்சிகள் செய்யும் பொறுமை நிறைந்த பெண்ணாகவும், கணவன் குடும்பத்தில் பல பிரச்சனைகளை எடுத்துரைத்து தீர்க்கும் வழிகாட்டியாகவும் அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார். அர்ஜுனாக ஜி.வி.பிரகாஷ{ம், தீபிகாவாக ஐஸ்வர்யாவும் தங்கள் உறுதியான நடிப்பால் தனித்து தெரிகின்றனர்.

அண்ணன் காளி வெங்கட் சரவணனாக மற்றொரு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கண்டிப்பு, ஆதிக்கம் செலுத்தி மொத்த குடும்பத்தையும் தாங்கி பிடிக்கும் தூணாக மிளிர்கிறார்.

நந்தினி – கல்பனா, தலைவாசல் விஜய் – சண்முகம் , ரோகினி – லட்சுமி, இளவரசு – ரங்கராஜ், கீதா கைலாசம் – வசந்தி , ஜெ. கமலேஷ் – சந்தோஷ், அப்தூல் லீ – பாண்டா, மகாலக்ஷ்மி சுதர்சனன் – ஜெனிஃபர் என்று இந்தப் படத்தில்  முன்னணி ஜோடி முதல் அதன் துணை நடிகர்கள் வரை அனைவருமே கச்சிதமாக செய்து முழுமையாக படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் குமாரின் ரசிக்கும்படியான நல்ல இசை, ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் நேர்த்தியான காட்சியமைப்புகள் அனைத்தும் இந்தப் படத்திற்கு ப்ளஸ்.

எடிட்டர் ருக்கேஷ் சில மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள், படத்தின் நம்பகத்தன்மை தீவிரத்தை காட்டும் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

தீபிகா மற்றும் அர்ஜீன் ஆங்கில முதலெழுத்தில் இருப்பதே படத்தின் டைட்டில். தம்பதிகளாக லைட் ஸ்லீப்பர் மற்றும் சவுண்ட் ல்லீப்பர் இணைந்தால் என்னவாகும் என்பதை சொல்லும் படம்.  இந்த திரைப்படம் சொல்லத் தோன்றும் பெரிய விஷயம்  என்னவென்றால் ஒரு திருமணம் என்பது இருவரின் தவறுகள் மற்றும் வரம்புகளை மன்னிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் போதுமான அளவு புரிதலுடன் உருவாக வேண்டும் என்பதே.குடும்ப உறவுகள் மற்றும் மோதல்கள் உண்மையில் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளன என்பது படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாகும். சில காட்சிகள் வசனங்கள், உரையாடலில் மூலமாகவே கடந்து சென்று விடுவதை இன்னும் சுவாரஸ்யமாக அழுத்தமாக காட்டியிருக்கலாம். குறட்டை பிரச்சனை பின்னர் சாதாரணமாக கடந்து செல்ல, மற்ற குடும்ப சிக்கல்கள் பெரிதாக உருவெடுக்க அதை சமாளிக்க வேறு கோணங்களில் கதை பயணிப்பது போல் எழுதி இயக்கியிருக்கிறார் ஆனந்த் ரவிச்சந்திரன்.

மொத்தத்தில் நட்மெக் புரொடக்ஷன்ஸ் சார்பில் வருண் த்ரிபுரனெனி, அபிஷேக் ராமிஷெட்டி, ஜி.பிருத்விராஜ் தயாரித்திருக்கும் டியர் புதுமண தம்பதிகளின் எதிர்பாராத குடும்ப பிரச்சனையின் அழுத்தமான பதிவு.