பொம்மை நாயகி விமர்சனம் : பொம்மை நாயகி மீண்டும் ஒரு அர்த்தமுள்ள சமூக அக்கறை சமத்துவம் கலந்து நீதிக்கு தலை வணங்கும் இந்த ஆண்டின் முக்கியமான படமாக அமையும் | ரேட்டிங்: 3.5/5
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘பொம்மை நாயகி’.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஷான். இந்த படத்தில் யோகி பாபு, சுபத்ரா, ‘மெட்ராஸ்” ஹரி கிருஷ்ணன், குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி, ஜி.என்.குமார், அருள்தாஸ், விசி ஆண்டனி, கேலப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-
ஒளிப்பதிவு -அதிசயராஜ், இசை -கே. எஸ். சுந்தரமூர்த்தி, எடிட்டிங்-செல்வா ஆர்.கே., கலை -ஜெயரகு, பாடல்கள்-கபிலன், அறிவு, லோகன், சித்தன் ஜெயமூர்த்தி, ஒலிப்பதிவு-அந்தோனி ஜே ரூபன், சண்டை-ஸ்டன்னர் சாம், உடை-ஏகாம்பரம், இணை தயாரிப்பு- விக்னேஷ் சுந்தரேசன், வேலன், லெமுவேல், மக்கள் தொடர்பு குணா.
தந்தை, தாய், மனைவி கயல்விழி, 9 வயது பொம்மை நாயகி மகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் கடலூர் அல்லிக்குப்பம் என்ற ஊரில் டீக்கடையில் வேலை பார்த்து வரும் வேலு (யோகி பாபு). தந்தையின் இரண்டாம் தாரத்தின் பட்டியலின மகன் என்பதால் ஊரிலும், சொந்தத்திலும் பாகுபாடு காட்டி ஒதுக்கி வைக்கப்படுகிறார். அதே பகுதியில் மேல் சாதி முதல் மனைவியின் மகன் அண்ணன் செந்தில் (அருள்தாஸ்) குடும்பத்தினர் செல்வாக்குடன் வசித்து வருகின்றனர். டீக்கடை உரிமையாளர் உடல் நலகுறைவால் கடையை விற்க முடிவு செய்கிறார். வேலுவுக்கு வேலை பறிபோகிறது. முதலாளியிடமே கடையை வாங்கலாம் என எண்ணி பணம் திரட்டி கொண்டிருக்கும் போது, அவரது மகள் பொம்மை நாயகி திடீரென கோவில் திருவிழாவின்போது காணாமல் போகிறார். வேலு தன் மகளைத் தேடிக் கண்டு பிடிக்கும் பொழுது மேல் சாதியில் இருக்கும் ஒரு சிலர் குழந்தையிடம் தவறாக நடக்க முயற்சி செய்வதை பார்த்து அவர்களை அடித்து துரத்தி காப்பாற்றி குழந்தையை மருத்துவமனையில் சேர்கிறார். இந்த விஷயத்தை தன் அண்ணனான செந்திலிடம் கொண்டு செல்ல அண்ணனோ தவறு செய்தவர்கள் அவருடைய சாதி என்பதால் பணத்தை கொடுத்து சரி செய்ய நினைக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தன்னுடைய மகளுக்கு நடந்தவற்றை தட்டி கேட்க ஊரில் மக்கள் யாரும் முன் வராத காரணத்தினால் முதலில் தயங்கினாலும் காவல்துறையின் உதவியை நாடுகிறார். ஆனால் அங்கே புகாரை வாங்க மறுத்ததால் நேரடியாக நீதிமன்றத்திற்க்கு சமூக ஆர்வலர் ஹரி கிருஷ்ணன் உதவியுடன் வழக்கை தொடுக்கிறார் வேலு. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுத்து சிறையில் அடைக்கின்றனர். வேலுவும் சொந்த ஊரை விட்டு விட்டு தன் மனைவி, குழந்தையுடன் வேறு இடத்தில் சென்று வசிக்கிறார். ஆறு மாதத்திற்கு பின் குற்றஞ் சாட்டப்பட்ட குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வருகின்றனர். அவர்கள் வேலுவையும், அவருடைய மகளையும் மிரட்டுகின்றனர். இவர்களிடமிருந்து வேலுவும், குழந்தை பொம்மை நாயகியும் தப்பித்தார்களா? அவர்கள் மீண்டும் ஜெயிலுக்கு சென்றார்களா? அதன் பின்னர் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
யோகிபாபு சாதாரண தோற்றத்துடன், முகத்தில் சோகம், தன்னை ஏளனத்துடன் நடத்தும் மேல்சாதி அண்ணனிடம் முகம் சுளிக்காமல் சகித்து கொண்டு செல்வதிலும், அதிர்ந்து பேசாத குணத்துடன், தன் மகளுக்கு நேர்ந்த கொடுமையை கண்டு வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஒதுங்கி நின்று அழுவதும், போலீஸ் நிலையத்தில் மிரட்டும் போதும் முதலில் தயங்கினாலும், பின்னர் துணிந்து புகார் கொடுக்க சென்று மிரட்டலால் அடிபணிந்து மௌனமாக தவிப்பதும், நீதி கிடைக்க கடைசி வரை போராடும் தைரியத்துடன், இறுதியில் குற்றவாளிகளை மீண்டும் ஜெயிலுக்கு அனுப்ப போடும் திட்டம் என்று படம் முழுவதும் நிறைந்து கதையின் நாயகனாக வலம் வந்து ஒட்டு மொத்த கைதட்டலையும் அள்ளிச் செல்கிறார்.
மனைவி கயல்விழியாக சுபத்ரா மாமா மாமா என்று யோகிபாபுவை வெள்ளந்தி மனதுடன் அழைத்து, ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.
ஒன்பது வயது மகளாக ஸ்ரீமதி அப்பாவித்தனமான முகம், கள்ளங்கபடமில்லாமல் பழகும் குணத்துடன், துறுதுறுவென்று அப்பாவிடம் பேசுவதும், நீதிபதியிடம் கேட்கும் கேள்வி என்று தேர்ந்த அழுத்தமான நடிப்பால் சிறப்பாக செய்துள்ளார்.
ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக சமூக ஆர்வலர் மெட்ராஸ் ஹரி கிருஷ்ணன், தந்தையாக ஜி.என்.குமார், அண்ணனாக அருள்தாஸ், விசி ஆண்டனி, கேலப் மற்றும் பலர் கிராமத்து கதாபாத்திரங்களாக வாழ்ந்துள்ளனர்.
சுந்தரமூர்த்தி கே.எஸ், அதிசயராஜ்.ஆர், ஜெயரகு எல் மற்றும் செல்வா ஆர்.கே ஆகியோரின் இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம் மற்றும் படத்தொகுப்பு முறையே திரைக்கதைக்கு துணை நிற்கிறது.
அறிமுக இயக்குனர் ஷான் பொருத்தமான ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுத்து, அதை இயல்பாகவும் அதே சமயம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் தன்னால் முடிந்ததைச் செய்திருக்கிறார். அநீதியின் பல்வேறு அம்சங்களையும், சமூகத்தின் சில பிரிவினர் நடத்தப்படும் முறையான ஒடுக்குமுறையையும் ஆராய்ந்து பல தலைப்புகள் வந்தாலும், நீதிமன்றங்களுக்கு அப்பாற்பட்ட நீதி பற்றி பொம்மை நாயகி பேசுகிறார். நீதித்துறை என்பது நீதியை நிலைநிறுத்துவதற்கான நீதிமன்றங்களின் அமைப்பு, ஆனால் நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட நீதி, காவல்துறை போன்ற மற்ற முக்கிய தரப்பினரால் மதிக்கப்படாவிட்டால் என்ன செய்வது? சமூகத்தின் பல குரலற்ற பிரிவினருக்கு, சண்டை ஒரு தீர்ப்போடு நின்றுவிடாது அது முடிவில்லாத ஒன்றாகும், அதற்காக அவர்கள் மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாசூக்காக உணர்த்தி உள்ளார் இயக்குனர் ஷான். வழக்கமான நேரடியான கதையில் சில திருப்பங்களுடன், எழுத்தாளர்-இயக்குனர் ஷான் ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தேவையான பல கேள்விகளை முன்வைக்க போதுமான இடத்தை கொடுத்து அசத்தியுள்ளார். இறுதிக் காட்சியில் குழந்தை கேட்கும் கேள்வியால் நடந்த சம்பவங்களை விவரித்து சொல்லும் காட்சியில் படம் முடிவது திருப்புமுனை.
மொத்தத்தில் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் பொம்மை நாயகி மீண்டும் ஒரு அர்த்தமுள்ள சமூக அக்கறை சமத்துவம் கலந்து நீதிக்கு தலை வணங்கும் இந்த ஆண்டின் முக்கியமான படமாக அமையும்.