ப்ளூ ஸ்டார் சினிமா விமர்சனம் : ப்ளூ ஸ்டார் அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய கிரிக்கெட் விளையாட்டினை மாறுபட்ட கோணத்தில் சுவாரஸ்யம் கலந்த வித்தியாசமான திரைக்கதை வெற்றி வசூலில் பட்டையை கிளப்பும் | ரேட்டிங்: 3.5/5

0
229

ப்ளூ ஸ்டார் சினிமா விமர்சனம் : ப்ளூ ஸ்டார் அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய கிரிக்கெட் விளையாட்டினை மாறுபட்ட கோணத்தில் சுவாரஸ்யம் கலந்த வித்தியாசமான திரைக்கதை வெற்றி வசூலில் பட்டையை கிளப்பும் | ரேட்டிங்: 3.5/5

ஆர்.கணேஷ் மூர்த்தி, ஜி.சௌந்தர்யா தயாரித்திருக்கும் ப்ளூ ஸ்டார் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.ஜெயக்குமார்.

இதில் அசோக் செல்வன், ஷாந்தனு  பாக்யராஜ், பிரித்வி, கீர்த்தி பாண்டியன், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், குமரவேல், லிஸ்ஸி ஆண்டனி, டி.என்.அருண்பாலாஜி, திவ்யா துரைசாமி, சஜு நவோதயா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் : பாடலாசிரியர்கள் : உமாதேவி, அறிவு, விளம்பர வடிவமைப்பு : கபிலன், நடனம்: ஸ்ரீக்ரிஷ், சண்டைப்பயிற்சி : ஸ்டன்னர் சாம், ஆடை வடிவமைப்பு : ஏகன் ஏகாம்பரம், கலை இயக்குனர் : ஜெயரகு எல்,  படத்தொகுப்பு : செல்வா ஆர்கே, இசை : கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவு : தமிழ் ஏ.அழகன், திரைக்கதை – வசனம் : தமிழ்ப்பிரபா, பிஆர்ஒ-குணா

சென்னை அரக்கோணம் மற்றும் 90களின் மத்தியில் நடக்கும் கதையை பின்னணியாக கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது. ரஞ்சித் மற்றும் ராஜேஷ் இரண்டு போட்டி கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள், அவர்கள் இருவரும் வௌ;வேறு சாதிகளை சேர்ந்தவர்கள். காலனி மக்கள் (காலனி பசங்க) அணியை ரஞ்சித் (அசோக் செல்வன்) தலைமையில் ப்ளூ ஸ்டாரை வழிநடத்துகிறார். ராஜேஷ்(ஷாந்தனு பாக்யராஜ்)  தலைமையில் ஆல்பா பாய்ஸ் (ஊர் தெரு பசங்க) ஆதிக்க ஜாதி அணியை வழிநடத்துகிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இம்மானுவேல்(பகவதி பெருமாள்) ப்ளூ  ஸ்டாரின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக இருந்து ஆல்பா பாய்ஸ் அணியை தோற்கடித்து பல வெற்றிகளை குவிக்க இதனால் இரு அணிகளுக்கும் எப்போதும் பகை இருந்து கொண்டே இருக்க, ஒரு நாள் இம்மானுவேல் போட்டியின் போது தாக்கப்பட்டு படுகாயமடைகிறார். அந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த கிராமத்தில் இரு அணிகளும் ஒருவருக்கொருவர் மீண்டும் கிரிக்கெட் போட்டி நடத்த கூடாது என காவல் துறை முடிவு செய்து அமல்படுத்துகிறது. இதனால் இரு அணியும் எப்போழுதும் பகையாளிகளாகவே வலம் வருகின்றனர். இதனிடையே தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ரஞ்சித் மற்றும் ஆதிக்க சாதியான ராஜேஷ் ஆகியோர் உயர் சாதியினரின் எம்சிஎச் அணியின் பாகுபாட்டை எதிர்கொள்ளும்போது போட்டி வேறு திருப்பத்தை எடுக்கிறது. பகையாளி அணிகள் இருவரும் இணைந்து எம்சிஎச் அணியை எதிர்த்து விளையாடுகின்றனர். அது எப்படி பகையின் இயக்கத்தை மாற்றுகிறது மற்றும் அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே ப்ளூ ஸ்டாரில் பார்க்கலாம்.

கிரக்கெட் வீரராக ரக்கட் லுக்கில் ரஞ்சித் ஆக, அசோக் செல்வன் கோபத்திற்கும் காதலுக்கும் நட்புக்கும் இடையில் நன்றாக வேறுபாடு காட்டி நடித்துள்ளார். படத்தில் அவரின் உடல் மொழி அவரது சித்தரிப்பை மிகவும் நம்ப வைத்து அனைத்து காட்சிகளிலும் சிறப்பான முத்திரை பதித்து அசத்தலாக இயல்பாக நடித்து கை தட்டல் பெறுகிறார்.

சாந்தனு பாக்யராஜ், ராஜேஷாக, பலவிதமான உணர்ச்சிகளைக் கொண்ட ஒரு திமிர்பிடித்த சாதியவாதியாக இருந்து, பின்னர் தன்னைச் சுற்றியுள்ள அரசியல் யதார்த்தத்தைக் புரிந்து கொண்டு தன் எண்ணத்தை மாற்றி பகையை மறந்து முரண்பட்ட கருத்துக்கள் கொண்ட கிரிக்கெட் வீரராக இருந்தாலும் விளையாட்டு என்று வரும் போது ஒற்றுமையோடு செயல்படுத்தும் கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார்.

கீர்த்தி பாண்டியன்  பாத்திரம் சிறியதாக இருந்தாலும், மிகுந்த ஆர்வத்துடன், ஊக்கமளிக்கும் தோழி போல்  காதலியாக வந்து உண்மையில் மறக்கமுடியாத நடிப்பைக் கொடுத்துள்ளார். பகவதி பெருமாள், இம்மானுவேலாக, சோர்வடையும் வீரர்களுக்கு உந்துதல் சக்தியாக பொறுப்புடன் வழி நடத்துகிறார்.

மற்றும் அசோக் செல்வனின் தம்பியாக பிரித்விராஜன், விளையாட்டு, நகைச்சுவை கலந்த காதலுடன் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார். பைபிள் நம்பிக்கை கொண்ட பாசமுள்ள அம்மாவாக லிஸ்ஸி ஆண்டனி, பாசக்கார அப்பாவாக இளங்கோ குமரவேல் ஆகியோரின் நடிப்பும் டி.என்.அருண் பாலாஜி, திவ்யா துரைசாமி, சஜு நவோதயா உள்ளிட்டோர் படத்திற்குப் பலம் சேர்த்திருக்கின்றனர்.

உமாதேவி, அறிவு ஆகியோரின் பாடல் வரிகளில் கோவிந்த் வசந்தாவின் இன்னிசை கலந்த பாடல்கள் செவிக்கு விருந்து. பின்னணி இசையிலும் அதிர வைத்துள்ளார்.

தமிழ் ஏ.அழகனின் ஒளிப்பதிவு கிராமத்தில் நடக்கும் சாதி வேறுபாட்டையும், கிரிக்கெட் மைதானத்தின் வேறுபாட்டையும், அரக்கோணம் ரயில் நிலையத்தையும் திறம்பட தன் காட்சிக்கோணங்களால் யதார்த்தமான பதிவுடன் முத்திரை பதித்துள்ளார்.

செல்வா ஆர்.கேவின் படத்தொகுப்பு இரண்டாம் பாதியில் இன்னும் கைவரிசையை காட்டியிருக்கலாம்.

90களின் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் இரு அணிகளின் பகை, சாதி மோதல், காதல், நட்பு, மூன்றாவது அணியின் வருகையால் ஏற்படும் ஒற்றுமை, விளையாட்டு திறமை, வெற்றி களிப்புடன் திறம்பட கொடுத்துள்ளார் இயக்குனர் எஸ் ஜெயக்குமார். தமிழ் பிரபாவின் திரைக்கதை, வசனம் நகைச்சுவை கலந்து மிக நுணுக்கமாக இருப்பதால் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது. ‘ப்ளூ ஸ்டார்’ சாதி, சமூக அரசியல் சார்ந்த விளையாட்டு சம்பந்தப்பட்ட பொழுதுபோக்கு கலந்த படத்தில் குறைகளை விட நிறைகள் அதிகம் இருக்கிறது. கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள், அதன் நுணுக்கங்கள், தகவல்களை அள்ளி தந்து தேர்ந்த நடிகர்களை நடிக்க வைத்து இயல்பு மாறாமல் கொடுத்திருப்பதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜெயக்குமார். புல்லட் பாபு காட்சிகள், காதலியின் வினோதமான கிரிக்கெட் ஆசை என்று பார்த்து பார்த்து நுணக்கமாக கதைக்களத்தை கொடுத்து கொஞ்சம் நகைச்சுவையோடு சிந்திக்க வைத்துள்ளார் இயக்குனர் எஸ். ஜெயக்குமார். பாராட்டுக்கள். பல விருதுகள் காத்திருக்கின்றன என்பதில் ஐயமில்லை.

மொத்தத்தில் ஆர்.கணேஷ் மூர்த்தி, ஜி.சௌந்தர்யா தயாரித்திருக்கும் ப்ளூ ஸ்டார் அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய கிரிக்கெட் விளையாட்டினை மாறுபட்ட கோணத்தில் சுவாரஸ்யம் கலந்த வித்தியாசமான திரைக்கதை வெற்றி வசூலில் பட்டையை கிளப்பும்.