வீரன் திரைப்பட விமர்சனம் : வீரன் அனைவரின் மனதை வெல்லும் சாகசங்கள் மாயாஜாலங்கள் செய்யும் அசகாய சூரன் | ரேட்டிங்: 3/5

0
632

வீரன் திரைப்பட விமர்சனம் : வீரன் அனைவரின் மனதை வெல்லும் சாகசங்கள் மாயாஜாலங்கள் செய்யும் அசகாய சூரன் | ரேட்டிங்: 3/5

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் வீரன் ‘மரகத நாணயம்’ படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியிருக்கிறார்.

இதில் ஹிப் ஹாப் தமிழா ஆதி, வினய், ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘ஹிப் ஹாப்’ ஆதி படத்திற்கு இசையமைக்க, தீபக் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மக்கள் தொடர்பு டி.ஒன், ரேகா, சுரேஷ்சந்திரா.

வீரனூர் கிராமத்தில் 2007 ஆம் ஆண்டு நடக்கும் கதைக்களத்தில் குமரன் (ஹிப்ஹாப் தமிழா ஆதி ) சக்கரை (சசி செல்வராஜ்) மற்றும் செல்வி (அதிரா ராஜ்) ஆகியோர் பள்ளி நண்பர்கள். ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் வீரன் கோயில் அருகே இடி, மின்னல் குமரனை தாக்குகிறது. இதனால் நிலைகுலைந்து விழும் குமரன் கவலைக்கிடமாக இருக்க அவனது பெற்றோர் சிங்கப்பூரில் இருக்கும் சகோதரி வீட்டிற்கு அனுப்பி சிகிச்சை அளிக்கின்றனர். அதன் பின்; குமரனுக்கு சில விசேஷ சக்திகள் மூலம் அடுத்தவரது மூளையை சிறிது நேரம் கட்டுப்படுத்த முடியும் மற்றும் கைகளிலிருந்து மின்னல் சக்தியை வெளிப்படுத்த முடியும் என்பதை அறிகிறார். சில சமயங்களில் அவரது சொந்த ஊருக்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்து குறித்து அடிக்கடி கனவுகள் வருகின்றன.  2021ல் பதினான்கு வருடங்களுக்கு பிறகு வீரனூருக்கு கிளம்பி வரும் குமரன் தன் நண்பர்கள் சக்கரை மற்றும் செல்வியை சந்திக்கிறார். 26 ஊர்களை தாண்டி இறுதியாக வீரனூர் கிராமத்தில் லேசர்பவர் டெக்னாலஜி  என்ற திட்டத்தை ஒரு தனியார் நிறுவனத்தின் முதலாளியும் (வினய்) அவரது தம்பியும் அந்த ஊர் மக்களை ஏமாற்றி அங்கு செயல்படுத்த முயற்சிக்கின்றனர். ஊரில் இருக்கும் எல்லை காவல் தெய்வமான வீரன் கோயிலை இடித்தால் மட்டுமே அந்த திட்டத்தை தொடர முடியும் என்கிற நிலை. வில்லன்களின் திட்டத்தை அறிந்துகொள்ளும் ஆதி தனது அபூர்வ சக்திகளின் மூலம், எல்லை காவல் தெய்வமான வீரனாக உருவெடுக்கிறார். வீரன் தெய்வம் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கும் வீரனூர் மக்களை தெய்வ நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். இந்த சக்திகளின் மூலமும், மக்களின் நம்பிக்கை மூலமும் நண்பர்களின் உதவியுடனும் வில்லன்களின் சதியை முறியடிக்க முடிந்ததா? வீரனூர் கிராமம் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டதா? என்பதே ‘வீரன்’ படத்தின் க்ளைமேக்ஸ்.

குமரனாக ஹிப் ஹாப் ஆதி அபரிதமான மின்காந்த சக்தி கொண்டு மின்னதிர்வுகளை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவராக வந்து பல காட்சிகளில் சிரிக்கவும் வைக்கிறார். கிராமத்தை காப்பாற்றும் வீரனாக மக்களுக்கு காட்சியளித்து நம்பிக்கையை விதைக்கும் உந்து சக்தியாக இருந்து ஆபத்திலிருந்து காப்பாற்றும் இளைஞன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். குமரனாக சாந்தமாக இருக்கும் காட்சிகளும் வீரனாக அதற்குரிய கருப்பு, சிகப்பு கெட்டப்களில் சூப்பர் ஹீரோவாக கருப்பு குதிரையில்; வரும் போது ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் பண்ணுகிறார்.

ஆதியின் நண்பனாக வரும் சசி செல்வராஜ் சில இடங்களில் நக்கல் நய்யாண்டியாக பேசி கவனிக்க வைக்கிறார். தனது காதலை திறமையாக சித்தரிக்கும் நாயகியாக வரும் ஆதிரா ராஜ், பார்வை குறைபாடு கொண்ட தோட்டக்காரராக வரும் ஜென்சன், பிரசன்னா பாலச்சந்திரன், சாவித்ரி, ஊராட்சி மன்றத் தலைவராக சின்னி ஜெயந்த் உள்ளிட்ட அனைவரும் கதைக்கேற்ற பங்களிப்பை கூடுதலாக கொடுத்துள்ளனர்.

காளி வெங்கட் மற்றும் முனீஸ்காந்தின் காமெடி புன்முறுவல் செய்ய வைக்கிறது. முருகானந்தம் அவ்வப்போது சிரிப்பை வர வைக்க முயற்சி செய்கிறார்.

மெயின் வில்லனாக வரும் வினய் இறுதியில் முறைப்பாக காமெடி வில்லனாக வந்து போகிறார்,தம்பியாக வரும் பத்ரி கோயிலில் வந்து கலாட்டா செய்யும் சில காட்சிகளில் சிரிக்க வைப்பதுடன், வில்லத்தனத்திலும் சிறப்பாக செய்து கவனிக்க வைத்துள்ளார்.

ஹிப் ஹாப் ஆதியின் பாடல்களும், பின்னணி இசை சூப்பர் ஹீரோ திரைப்படத்திற்கான பங்களிப்பை கச்சிதமாக கொடுத்துள்ளார்.

வீரன் கோயில், அதைச் சுற்றியுள்ள கிராமத்தின் இயற்கை எழில் கொஞ்சும் அழகு, மின்னல் சம்பந்தப்பட்ட காட்சிகள், லேசர் திட்டம், வில்லனின் ஆய்வுக்கூடம் என்று தீபக் மேனனின் கேமரா கண்களுக்கு விருந்து படைத்துள்ளது.

ஆபத்தை சந்திக்க இருக்கும் கிராமத்தை காப்பாற்ற நினைக்கும் சூப்பர் பவர்கள் நிறைந்த இளைஞனின் சாகசமே இப்படத்தின் திரைக்கதை. கற்பனை கலந்த அறிவியல், ஆன்மீகம், நம்பிக்கையுடன் சுவாரஸ்யக் கலவையுடன், காமெடி கலந்து வித்தியாசமான கதையம்சத்துடன் அசத்தலாக கொடுத்துள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன்.

மொத்தத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள வீரன் அனைவரின் மனதை வெல்லும் சாகசங்கள் மாயாஜாலங்கள் செய்யும் அசகாய சூரன்.