வாத்தி சினிமா விமர்சனம்: தன்னலமற்ற சேவையை சமமாக வழங்கும் ஆசிரியரின்  லட்சியத்தை பின்பற்றும் மாணவர்களைப் பற்றி அழுத்தமாக சொல்லும் அசத்தலான படம் | ரேட்டிங்: 3.5/5

0
1364

வாத்தி சினிமா விமர்சனம்: தன்னலமற்ற சேவையை சமமாக வழங்கும் ஆசிரியரின்  லட்சியத்தை பின்பற்றும் மாணவர்களைப் பற்றி அழுத்தமாக சொல்லும் அசத்தலான படம் | ரேட்டிங்: 3.5/5

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் – பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாக வம்சி எஸ் – சாய் சௌஜன்யா தயாரித்திருக்கும் வாத்தி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வெங்கி அட்லூரி. தமிழகத்தில் இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது.
இதல் தனுஷ், பாரதிராஜா, சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய் குமார், தனிகல பரணி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீநிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஆடுகளம் நரேன், ஹரீஷ் பேரடி, கென் கருணாஸ், பிரவீணா லலிதாபாய், இளவரசு, மொட்டை ராஜேந்திரன், சுமந்த், சாரா, பவிஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை: ஜி.வி.பிரகாஷ் குமார், ஓளிப்பதிவு: ஜே யுவராஜ்,கதை: நவின் நூலி, தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா, சண்டைக்காட்சிகள் – வெங்கட், பிஆர்ஒ-ரியாஸ் கே.அஹமது.

மூன்று மாணவ நண்பர்கள் சரியான வழிகாட்டுதல் இல்லாத ஆசிரியர்களால் தங்கள் பாடங்கள் படிப்பதில் போதிய ஆர்வம் இல்லாமல் இருந்து குறைந்த மதிப்பெண் பெற்று விரக்தியில் இருக்கின்றனர். அதில் ஒருவன் தாத்தாவின் பழைய விசிடி கடையை திறந்து சுத்தம் செய்யும் போது மறைத்து வைக்கப்பட்டிருக்கும் டிஎன்பிசிசி என்று எழுதப்பட்டிருக்கும் விசிடியை பார்க்கின்றான். நண்பர்களுடன் அந்த விசிடியை போட்டு பார்க்கும் போது கணக்கு சம்பந்தப்பட்ட பாடங்களை நன்றாக புரியும்படி சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரை பார்த்து வியக்கின்றனர்.அதில் குமார் என்பரின் விலாசம் இருக்க, அவரின் பழைய விலாசத்தை வைத்து விசாரிக்கும் பொது, ஆந்திராவில் ஒரு மாவட்ட ஆட்சியராக இருப்பதை அறிந்து அவரை சந்திக்க செல்கின்றனர். மாவட்ட ஆட்சியர் குமார் மூன்று மாணவர்களை அழைத்து விசாரிக்க விசிடியில் இருக்கும் ஆசிரியர் பற்றி கேட்க அவர்களின் ஆர்வத்தை பார்த்து தன்னுடைய கணக்கு ஆசிரியர் பாலமுருகனைப் பற்றி அவர்களிடம் விவரிக்கிறார்.
90 களில் தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகளில் இருக்கும் சிறந்த ஆசிரியர்களை பணம் கொடுத்து வாங்க அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகள் இழுத்து மூடும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதை சரி செய்ய அரசு அரசாணை பிறப்பிக்க இருப்பதை அறிந்து  அது வெளிவராமல் இருக்க  திருப்பதி கல்வி நிறுவனத்தின் தலைவர் திருப்பதி (சமுத்திரகனி) திட்டம் போடுகிறார். அரசு பள்ளிகளை தத்தெடுத்து தனியார் பள்ளிகளிலிருந்து ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கு அனுப்பி கற்பிக்க  எற்பாடு செய்வதாக அரசுக்கு வாக்குறுதி கொடுத்து அரசாணையை கிடப்பில் போட வைக்கிறார். அதிலும் சிறந்த ஆசிரியர்களை அனுப்பாமல் இரண்டாம், மூன்றாம் நிலை ஆசிரியர்களை அனுப்புவதே அவரின் திட்டம். இதன்படி திருப்பதி கல்வி நிறுவனத்தில் உதவி ஆசிரியராக வேலை பார்க்கும் பாலமுருகன்(தனுஷ்), தன் நிறுவனத்தின் சார்பாக சோழவரத்தில் இருக்கும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை நல்ல தேர்ச்சி விகிதத்தை காட்டும்படி அனுப்பப்படுகிறார். அந்த கிராமத்தில் சாதி பாகுபாடு, பத்தாவது வரை மட்டுமே படிக்க வைத்து விட்டு பின்னர் வேலைக்கு அனுப்பப்படும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பதால் ப்ளஸ் 1 வகுப்பில் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்காமல் இருக்கும் கிராம மக்களை சந்தித்து எடுத்துரைத்து பள்ளிக்கு மாணவர்களை வரவழைக்கிறார் பாலா. 45 மாணவர்கள் பாலாவின் வழிகாட்டுதலின் பேரில் சேர்ந்து நன்றாக படிக்கின்றனர், நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைகின்றனர். இதையறிந்து அதிர்ச்சியாகும் தனியார் கல்வி நிறுவனத்தின் தலைவர் திருப்பதி, பாலாவை அழைத்து சோழவரத்தை விட்டு மாற்றலாகி போகுமாறு கூறுகிறார். இதனை ஏற்காத பாலாவை பல விதங்களில் மிரட்ட  பள்ளியை விட்டு வெளியேறும் பாலா, தனியாக ஒரு இடத்தில் மாணவர்களை வரவழைத்து பாடத்தை சொல்லி கொடுக்கிறார். இதனால் கோபமடையும் திருப்பதி பாலாவை அடித்து துன்புறுத்த வேறு வழியில்லாமல் தன் சொந்த ஊருக்கு கிளம்பி செல்கிறார். இதனால் மாணவர்களின் கல்வி தடைபட்டு பழையபடியே வேலைக்கு செல்கின்றனர். இதை கேள்விப்படும் ஆசிரியர் பாலா என்ன முடிவு செய்தார்? சோழவரம் வராமலேயே மாணவர்களை வரவழைத்து எவ்வாறு பாடம் சொல்லி கொடுத்தார்? அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றார்களா? பாலாவின் கனவை நிறைவேற்றினார்களா? என்பதே க்ளைமேக்ஸ்.

பாலமுருகனாக தனுஷ் அரசு பள்ளி மாணவர்களை நினைத்து கூட பாhக்;க முடியாத அளவிற்கு தேர்ச்சி பெற வைத்து சாதித்து காட்டும் கணக்கு வாத்தியாராக 90களின் கெட்டபில் ஜோலிக்கிறார். மாணவர்களிடம் ஜாதி வேறுபாடை கலைய எடுக்கும் வகுப்பு, அவர்களை ஊக்கப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்த எடுக்கும் முயற்சி, தனியார் பள்ளியின் ஆதிக்கத்தை ஒடுக்க தனி ஆளாக போரட்ட களத்தில் இறங்கும் துணிவு, மாணவர்களுக்கு திரையரங்கையே வகுப்பறையாக மாற்றுவது, அவர்களுக்காக மாறுவேடத்தில் வந்து சந்தேகங்களை தீர்த்து வைப்பது, மாணவர்களை பரீட்சை எழுத விடாமல் தடுக்கும் அடியாட்களை விரட்டியடிப்பது, சாதித்த மாணவர்களிடம் உயர்கல்விக்கு உதவி செய்ய நினைக்கும் திருப்பதியின் கட்டளைக்கு சம்மதம் தெரிவிக்க சொல்லி கொடுக்கும் அறிவுரை என்று ஒவ்வொரு காட்சிக்கும் தனுஷ் அளித்திருக்கும் பங்களிப்பு அலப்பரியது. கல்வி கற்க ஆசைப்படும் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் இளைஞனாக, இறுதி வரை ஒயாமல் உதவி செய்யும் நேர்த்தியான கதை நாயகனாக படம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறார்.

பயாலஜி ஆசிரியை மீனாட்சியாக சம்யுக்தா தனுஷிற்கு உறுதுணையாக இருந்து மாணவர்களை நல்வழிப்படுத்தி, ஒருங்கிணைக்கும் பாலமாக, ஊந்துசக்தியாக இருந்து படத்தில் அளவான நடிப்பை கொடுத்து நிறைவாக செய்திருக்கிறார்.

கோட் சூட், கருப்பு கண்ணாடி போட்ட காஸ்ட்லியான வில்லன் திருப்பதியாக சமுத்திரக்கனி முதலில் பயமுறுத்தினாலும் இறுதியில் அமைதியாக பம்மிவிடுகிறார்.

சோழவரம் தலைவர் சாய் குமார் கலகலவென்று பேசி  முதலில் நல்லவனாக பின்னர் அமைதியான வில்லனாக வந்து போகிறார். இவர்களுடன் தனிகல பரணி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீநிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஆடுகளம் நரேன், ஹரீஷ் பேரடி,  பிரவீணா லலிதாபாய், இளவரசு, மொட்டை ராஜேந்திரன், சுமந்த், சாரா, பவிஷ் ஆகிய தமிழ், தெலுங்கு நட்சத்திர பட்டாளங்கள் கலவையுடன் கதைக்களத்திற்கேற்றவாறு வந்து போகின்றனர்.

கென் கருணாஸ் மாற்றுத்திறனாளியாக முதலில் தீய பழக்கத்திற்கு அடிமையாகி, பின்னர் தனுஷின் கண்டிப்பு அவரை மாற்றி நல்ல மதிப்பெண் பெற்று சிறு வயது மாவட்ட ஆட்சியர் குமாராக வந்து குணச்சித்திர நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். இவரின் நடிப்புத்திறன் மென்மேலும் படத்திற்கு படம் மெருகேறுவதால் எதிர்காலத்தில் முக்கியமான குணச்சித்திர நடிகராக வலம் வருவார் என்பது உறுதி.

இரு வேறு காலகட்டத்தின் இசையும், பின்னணி இசையும் படத்தில் கலந்து தனித்துவமாக கொடுத்து படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.

ஒவ்வொரு காட்சியையும் காலத்திற்கேற்ற வகையில் பள்ளிக்கூடம், வகுப்பறை, சோழவரம் கிராமம், திரையரங்கு, விசிடி கடை, பேருந்து, சண்டை காட்சிகள் என்று செட்கள் அனைத்தும் படத்தின் ஒட்டத்திற்கு துணை புரிந்துள்ளது. ஓளிப்பதிவாளர் ஜே யுவராஜ் கச்சிதமாக செய்து முடித்துள்ளார். சண்டைக்காட்சிகள் – வெங்கட் கச்சிதம்.

நவின் நூலியின் கதையை 90 காலகட்டத்தில் நடந்த சம்பவங்களாக திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் வெங்கி அட்லூரி. தனியார் கல்வி மையங்களை குறி வைக்கும் ஒரு சமூக சீர்திருத்தவாதியின் வீழ்ச்சி மற்றும் எழுச்சியின் ஒரு வெற்றி படத்தில் இருக்கும் கரு என்றாலும், எல்லா சவால்களையும் மீறி, கல்வியின் மூலம் பின்தங்கிய மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க கதையின் முதுகெலும்பாக மாற்றுகிறார் என்பதை எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை இயக்குனர் வெங்கி அட்லூரி வணிகரீதியாக வலுவூட்டும் திரைப்படத்தை வழங்குவதற்கு பெரும்பாலான காட்சிகளை அமைத்து வாத்தி வாழ்க்கை தருணங்களை விட பார்வையாளர்களின் துடிப்பை நல்ல அமைப்போடு பிடிக்க முயற்சிக்க சிறப்பாக கொடுத்துள்ளார்.

படத்தில் பொதிந்து கிடக்கும் செய்தி, அதன் தொடர்புத்தன்மை காரணமாக படத்திற்கு ஒரு பெரிய பாசிட்டிவ். பெரும்பாலான காட்சிகள் எளிமையானவை மற்றும் வழக்கமானவை, காதல் கோணம் சிறிதளவு கலந்து வந்தாலும் இது திரைக்கதையின் பிடியை தளர்த்தவில்லை. தனுஷ் கிராமத்தை விட்டு வெளியேறும் காட்சி அதன் உண்மையான தருணங்களின் மூலம் பார்வையாளர்களைத் ஈர்க்கிறது. தனியார் பள்ளிகளின் வணிக கல்வி, அரசு பள்ளிகளை முடக்குதல், அரசியல்வாதிகளை பணத்தால் விலைக்கு வாங்குவது, தனியார் பள்ளிகளின் அதிகார ராஜ்ஜியம் என்று முதல் பாதி பயணிக்க, இரண்டாம் பாதியில் அரசு பள்ளி மாணவர்களை படிக்க வைத்து பெரிய பதவியில் ஏற்றும் முயற்சி,அதற்கான தடைகளை தாண்டி வெற்றியை தொடும் வகையில் அழுத்தமாக இயக்கியிருக்கிறார் வெங்கி அட்லூரி. இந்தப் படத்தில் மாணவர்களை படிக்க வைப்பது மட்டுமே கருவாக அமைத்து, மாணவர்கள் மேற்படிப்பிற்கு உறுதுணையாக யார் உதவி செய்தாலும் எதிரியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு முன்னேறி வந்து சம்பாதித்து ஏழை எளியோருக்கு உதவி செய்து அவர்களையும் முன்னேற உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தை இக்கதையின் கருவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் வெங்கி அட்லூரி.

மொத்தத்தில் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் – பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாக வம்சி எஸ் – சாய் சௌஜன்யா தயாரித்து தமிழகத்தில் செவன் ஸ்கிரீன் நிறுவனம் ரிலீஸ் செய்ய வாத்தி படத்தில் எளிமை வலிமையை எதிர்கொண்டு துணிவுடன் கல்வியை அனைவருக்கும் தன்னலமற்ற சேவையை சமமாக வழங்கும் ஆசிரியரின்  லட்சியத்தை பின்பற்றும் மாணவர்களைப் பற்றி அழுத்தமாக சொல்லும் அசத்தலான படம்.