பகாசூரன் விமர்சனம்: பகாசூரன் கொடியவர்களை வதம் செய்யும் அசுரன் | ரேட்டிங்: 3/5

0
533

பகாசூரன் விமர்சனம்: பகாசூரன் கொடியவர்களை வதம் செய்யும் அசுரன் | ரேட்டிங்: 3/5

ஜி.எம்.கார்ப்ரேஷன் தயாரித்து ஜிடிஎம் பட நிறுவனம் சார்பில் கௌதம் வெளியிட பகாசூரன் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் மோகன்.ஜி.
இதில் செல்வராகவன், நட்டி, ராதாரவி, கே.ராஜன், மன்சூர் அலிகான், தேவதர்சினி, பி.எல்.தேனப்பன், குணாநிதி, ராம்ஸ், சசி லையா, ரிச்சா, கூல் ஜெயந்த், அருணோதயன், குட்டி கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்;கள்:- இசை-சாம்.சி.எஸ், ஒளிப்பதிவு-ஃபருக் ஜே பாட்ஷா, எடிட்டிங்-எஸ்.தேவராஜ், கலை -எஸ்.கே, ஸ்டண்ட்-மிரட்டல் சிவா, நடனம்-ஜானி, தயாரிப்பு மேற்பார்வை-முருகன், மக்கள் தொடர்பு-மணவை புவன்.

இரண்டு கோணங்களில் கதை ஆரம்பமாகிறது.கோயில்களில் சேவகம் செய்து கொண்டு வாழும் பீமராசு. கல்லூரி ஆசிரியர், வாட்ச்மேன், கல்லூரி விடுதி வார்டன் ஆகியோரை பின் தொடர்ந்து சென்று அவர்களை கொன்று விட்டு தப்பிச் செல்கிறார். ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரி அருண் வர்மன் அதிர்ச்சிகள் நிறைந்த க்ரைம் சம்பந்தப்பட்ட வீடியோக்களை வெளியிடும் யூ டியூபர். தன் அண்ணன் மகள் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சியாகி அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயல்கிறார். செல்போன் செயலிகளால் பாதிக்கப்பட்டு பாலியியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு மிரட்டப்படும் பல இளம்பெண்கள் இறப்பதை கண்டுபிடிக்கிறார். அதே சமயம் அவர்களின் பெற்றோர் புகார் கொடுக்க தயங்குவதையும் அறிந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தில் யாராவது புகார் கொடுத்துள்ளார்களா என்பதை விசாரிக்கும் போது பீமராசுப்பற்றி தெரிந்து கொள்கிறார். அவரை தேடி கடலூருக்கு செல்கிறார். அங்கே பீமராசுவின் அப்பா தன் பேத்தி திடீரென்று தற்கொலை செய்து கொண்டதாகவும், அதன் பின் பீமராசு வீட்டை விட்டு சென்று விட்டதாகவும் சொல்கிறார். அருண் வர்மன் பீமராசுவை கண்டுபிடித்தாரா? பீமராசு எதற்காக மூன்று கொலைகள் செய்தார்? இறுதியாக கொலை செய்ய இருக்கும் நபர் யார்?  அந்த நபரை காப்பாற்றினார்களா? பீமராசுவின் மகள் ஏன் இறந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

தெருக்கூத்துக் கலைஞர் பீமராசுவாக செல்வராகவன் அமைதியாக வந்து மகள் மீது பாசத்தை பொழிவதும், படித்து முதல் பட்டதாரியாக காணும் போது சந்தோஷப்படுவதும், மேற்படிப்பிற்கு படிக்க அனுப்பி விட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டு அவள் படும் துன்பத்தை நினைத்து வருந்துவதும், மகளின் சாவுக்கு காரணமானவர்களை பழி தீர்ப்பது என்று ஆக்ரோஷமான கொலைகளை செய்யும் தந்தையாக வாழ்ந்திருக்கிறார். பாதிப்பு, அப்பாவித்தனம் மற்றும் மூர்க்கத்தனம் அனைத்தும் கலந்து எமோஷனல் காட்சிகளில் தூள் பரத்தியிருக்கிறார். பாராட்டுக்கள். சிவன் கோயிலில் அவர் ஆடும் நடனமும், பாட்டும் மெய் சிலிர்க்க வைக்கிறது.

அருண் வர்மனாக நட்டி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நன்றாக செய்திருக்கிறார். இவர்களுடன்  கல்லூரி முதல்வர் கல்வித்தந்தை வில்லன் ராதாரவி, தாத்தாவாக கே.ராஜன், மகள் ஸ்வேதாவாக ரிச்சா, மன்சூர் அலிகான், இன்ஸ்பெக்டராக தேவதர்சினி, பி.எல்.தேனப்பன், குணாநிதி, ராம்ஸ், சசி லையா, கூல் ஜெயந்த், அருணோதயன், குட்டி கோபி ஆகியோர் துணை கதாபாத்திரங்களாக வந்து சிறப்பிக்கின்றனர்.

சாம் சி.எஸ்.ஸின் இசை, அசத்தலான பாட்டுக்கள் குறிப்பாக சிவசிவாயம் பாட்டு தெய்வீகமாக மனதில் பதிகிறது. ஃபருக் ஜே பாட்ஷா அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பயனுள்ள உணர்ச்சிகரமான காட்சிகளுடன், ரத்தம் தெறிக்கும் கொலைகள் என்று நன்றாகப் பொருந்தி காட்சிக் கோணங்களை அமைத்து ஒளிப்பதிவு  செய்துள்ளார்.

ஏற்கனவே பல படங்கள் சைபர் துன்புறுத்தல் , பிரச்சனைகள் பற்றி வெளிவந்துள்ளது. இது ஒரு பழைய குற்றத்தின் புதிய வெளிப்பாடு,  பகாசுரன் அதை அறுவடை செய்வதில் மும்முரமாக இருப்பதால் பிரச்சினையின் மூலத்தை ஆராய்வதில் ஆர்வம் காட்டவில்லை.  வேலை விஷயமாக அழைத்து பாலியல் தொழிலில் தள்ளுவது, இவர்களை படம் பிடித்து பிளாக்மெயில் செய்து மிரட்டுவது, அதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு வேறு வழியின்றி உயிரை மாய்த்துக் கொள்ளும் பெண்களைப் பற்றிய திரைக்கதையில் தந்தை மகள் பாசத்தையும், இழப்பையும் சொல்லி பழி வாங்கும் த்ரில்லர் கதையாக கொடுத்துள்ளார் இயக்குனர் மோகன் ஜி. நாம் உபயோகிக்கும் செல்போன் தான் பகாசூரன், அது ஒரு நாள் நம்மை அழித்து முழ்கடித்து விடும் என்பதை மெசேஜாக இறுதியில் சொல்லி, பெற்றோர்கள் அனைவரும் தங்களுடைய பிள்ளைகளை செல்போன் உபயோகிக்கும் போது கண்காணிக்க வேண்டும் என்பதை எடுத்துரைத்து எச்சரிக்கை மணி அடித்துள்ளார் இயக்குனர் மோகன் ஜி.

மொத்தத்தில் ஜி.எம்.கார்ப்ரேஷன் தயாரித்து ஜிடிஎம் பட நிறுவனம் சார்பில் கௌதம் வெளியிட பகாசூரன் கொடியவர்களை வதம் செய்யும் அசுரன்.