மார்க் ஆண்டனி திரைப்பட விமர்சனம் : மார்க் ஆண்டனி அனைத்து தரப்பினரையும் கவரும் ஒரு சிறந்த புத்துணர்ச்சியூட்டும் ஆக்ஷன் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படம் | ரேட்டிங்: 4/5

0
895

மார்க் ஆண்டனி திரைப்பட விமர்சனம் : மார்க் ஆண்டனி அனைத்து தரப்பினரையும் கவரும் ஒரு சிறந்த புத்துணர்ச்சியூட்டும் ஆக்ஷன் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படம் | ரேட்டிங்: 4/5

மார்க் ஆண்டனி திரைப்பட விமர்சனம் :

மினி ஸ்டுடியோ சார்பில் எஸ்.வினோத் குமார் தயாரித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

இதில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சுனில், ரிது வர்மா, அபிநயா, ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, சென்ட்ராயன், விஷ்ணு பிரியா காந்தி, டத்தோ ஸ்ரீ ஜி ஞானராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:இசை: ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு : அபிநந்தன் ராமானுஜம், எடிட்டர்: விஜய் வேலுக்குட்டி, கலை இயக்குனர்: சு.மு.விஜய்முருகன், ஸ்டண்ட் : பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன், கனல் கண்ணன், தினேஷ் சுப்பராயன், நடனம்: தினேஷ், பாபா பாஸ்கர், அசார்,  வசனங்கள்: ஆதிக் ரவிச்சந்திரன், கூடுதல் திரைக்கதை: எஸ்.ஜே.அர்ஜுன், ஆர்.சவரி முத்து, பாடல் வரிகள்: மதுரகவி, அசால் கோலார், ஆதிக் ரவிச்சந்திரன், ஆடை வடிவமைப்பாளர்: சத்யா என்.ஜே, காஸ்ட்யூமர்: சீனு,ஒப்பனை: சக்தி, இசை மேற்பார்வையாளர்: யெகோவாசன் அழகர், ஒலி வடிவமைப்பு மற்றும் கலவை: சுரேன், ஜி.எஸ்.அழகிய கூத்தன், விஎஃப்எக்ஸ்: சனத் டிஜி, சதீஷ் சிடி,தயாரிப்பு நிர்வாகி: கணேசன், எஸ்.வி.ஹரி கிருஷ்ணன்,மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது.

1975 ஆம் ஆண்டு தொடங்கும் முதல் காட்சியிலேயே, கடந்த காலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களுடன் தொடர்பு கொண்டு பயணிக்கக்கூடிய தொலைபேசியை டைம் டிராவிலிங் ஃபோனைக் வெற்றிகரமாக கண்டுபிடிக்கிறார் விஞ்ஞானியான சிரஞ்சீவி (செல்வராகவன்). அந்த டைம் டிராவிலிங் போனை தன் கார் டிக்கியில் வைத்துக் கொண்டு கிளப்பிற்கு செல்கிறார். அங்கே நடக்கும் சண்டையில் சீரஞ்சீவி இறந்து விடுகிறார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, 1995 இல், மறைந்த கேங்ஸ்டர் ஆண்டனியின் (விஷால்) மகன் மார்க் (விஷால்) மற்றும் அவரது நெருங்கிய நண்பர் ஆண்டனியின் மரணத்திற்குப் பழிவாங்கக் காத்திருக்கும்; ஜாக்கி (எஸ்.ஜே. சூர்யா) ஆகியோரைச் சுற்றி கதை நகர்கிறது. ஆண்டனியின் மகன் மார்க் (விஷால்) தொழிலில் மெக்கானிக்காக வளரும் போது, ஜாக்கியின் மகன், மதன் பாண்டி (எஸ்.ஜே. சூர்யா) ஒரு கேங்ஸ்டராக வளர்கிறார். ஆண்டனி எப்படி இறந்தார்? ஏன் மார்க் தந்தை ஆண்டனியை வெறுக்கிறார் என்பதற்கான காரணத்தை அறிய அவர்களின் கதைக்களம் விரிவடைகிறது. ஆண்டனி (விஷால்) மற்றும் ஜாக்கி மார்த்தாண்ட (எஸ்.ஜே. சூர்யா) இருவரும் தாதாக்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவரும் இன்னொரு எதிரி கேங்க்ஸ்டர் ஏகாம்பரம் (சுனில்) உடன் சண்டையிட ஏகாம்பரம் ஆண்டனியை கொன்றுவிட்டு ஊரை விட்டுத் தப்பிச் செல்கிறார். தன் நண்பனைக் கொன்றதற்காக ஏகாம்பரம் பழிவாங்க வேண்டும் என்பதில் ஜாக்கி உறுதியாக இருக்கிறார். ஜாக்கி ஆண்டனியின் மகன் மார்க்கை (விஷால்) வளர்க்கிறார், மேலும் அவர் தனது சொந்த மகன் மதனை விட (எஸ்.ஜே. சூர்யா) மார்க்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இருந்தாலும் தனது தாயின் மரணத்திற்கு தந்தை ஆண்டனி தான் காரணம் என்று மார்க் நம்புவதால் தந்தையை வெறுக்கிறார். இந்த சமயத்தில் தன் காதலி ரம்யா மார்க் மெக்கானிக் என்பதால் தன் தந்தையில் காரை ரிப்பேர் செய்யும்படி கூற, அங்கே டைம் டிராவல் போன் இருப்பதை கண்டுபிடிக்கிறார். கடந்த காலத்தில் தனது தந்தையுடன் தொடர்புடையவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்ற மார்க், தனது தந்தை ஆண்டனி சந்தித்த பல நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்கிறார்.மார்க் கடந்த காலத்திலிருந்து சில சம்பவங்களை மாற்றி, எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக தனது தந்தையை உயிருடன் கொண்டு வர முடிந்ததா? ஜாக்கியின் சுயரூபம் மார்க்கிற்கு தெரிந்ததா? அதன் பின் டைம் டிராவலிங் போன மூலம் மார்க்,மதன், ஜாக்கி ஆகியோரின் வாழ்க்கை எப்படி புரட்டி போடப்படுகிறது? இறுதியில் மார்க் தன் தந்தையின் அருமையை அறிந்து கொண்டாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

விஷால் தந்தை மகன் என்ற இரட்டை வேடங்களையும் வித்தியாசமாக தெளிவாக காட்சிப்படுத்தி வசன உச்சரிப்பு, சண்டைக் காட்சிகள் என்று படம் முழுவதும் தன்னுடைய தேர்ந்த நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா விஷால் காம்பினேஷன் காட்சிகள் பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளிப்பதோடு அட்டகாசத்தின் உச்சம்.

படத்தில் மிக முக்கியமான நடிப்பு நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு சொந்தமானது, அவர் மகன் மதன் மற்றும் தந்தை ஜாக்கியின் கதாபாத்திரங்களை தனது அற்புதமான சித்தரிப்புடன் தெளிவாக உயர்ந்து நிற்கிறார். அவர் தனது நடை, உடை, பாவனையால் வித்தியாசமான மேனரிசங்களை தந்து வசன உச்சரிப்பிலும் பல மாடுலேஷன்களையும் மற்றும் பெண் பித்தராக அதகளம் பண்ணுகிறார். கேங்ஸ்டர் மற்றும் வில்லன் பாத்திரத்தில் நடித்தாலும், சூர்யா மிகவும் தேவையான நகைச்சுவை வழங்குகிறார். உதாரணமாக, மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை அவர் சந்திக்கும் காட்சி நகைச்சுவையாக இருக்கிறது.

காதலியாக நடித்துள்ள ரிது வர்மா, சிறிது நேரமே வந்தாலும் அவரது கதாபாத்திரத்தில் எதிர்பார்த்ததை வழங்கியுள்ளார்.

அச்சு அசலாக மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை ஒரு மிக முக்கியமான காட்சியில் மீண்டும் கொண்டுவரும் எண்ணம் மிகவும் பாராட்டத்தக்கது.

சிறிய வேடத்தில் தோன்றினாலும் தனது நடிப்பாலும் சண்டைக் காட்சிகளாலும் கவர்ந்த மற்றொரு கலைஞர் தெலுங்கு நடிகர் சுனில்.

விஞ்ஞானி சிரஞ்சீவியாக செல்வராகவன், அப்பா விஷாலுக்கு ஜோடியாக அபிநயா, ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, சென்ட்ராயன், விஷ்ணு பிரியா காந்தி, டத்தோ ஸ்ரீ ஜி ஞானராஜா இவர்கள் அனைவருமே படத்தில் முக்கிய பங்கு வகித்து படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர்.

பீட்டர் ஹெய்ன், திலிப் சுப்பராயன், கனல் கண்ணன், தினேஷ் சுப்பராயன் ஆகியோரின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள், குறிப்பாக டபுள் டெக்கர் சண்டைக்காட்சி, இறுதிக் காட்சியில் பீரங்கி வண்டியில் இருந்து சீறிப் பாய்ந்து வெடிக்கும் காட்சிகள் சிறப்பாக வடிவமைத்து காட்சிப்படுத்தியுள்ளனர்.

ஆர்.கே.விஜய் முருகன் கலை மற்றும் அபிநந்தன் ராமானுஜத்தின் இரு காலகட்டங்களில் நடைபெறும் காட்சிகள், கடந்த காலம், நிகழ்காலம் ஆகியவற்றை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கும் விதமும், ரெட்ரோ டோனில் படம் முழுவதும் ஒவ்வொரு காட்சியையும் தனித்திறமையோடு கொடுத்துள்ளார்.

டைம் டிராவலிங் கதையுடன் பயணிக்க விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு படத்திற்கு பக்க பலம்.

இந்த நகைச்சுவையான அறிவியல் புனைகதையை தன் அதிரடி 75, 95 இசைகளால் நிரப்பி  சரியான மனநிலையை கதாபாத்திரங்களுக்கு அமைத்து கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். மார்க் ஆண்டனியின் வெற்றிக்கு அடுத்த பெரிய காரணம் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை. அருமையான பின்னணி ஸ்கோர் மற்றும் சில சுறுசுறுப்பான சிக்கலான கதையை திறம்பட இசையால் கையாண்டுள்ளார்.

படத்தில் காலப்பயணம் கலந்த அம்சத்துடன் அறிவியல் புனைகதை, கடந்த காலத்தில் மக்களுக்கு அழைப்பு விடுக்கக்கூடிய தொலைபேசி, நண்பர்களின் நட்பு, துரோகம், மகன்களின் பழி வாங்கும் படலம் என்று மொத்தம் இரண்டரை மணிநேர இடைவிடாத பொழுதுபோக்கை தந்திருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். படத்தின் கதை பாணியை விறுவிறுப்பாக்கியுள்ளது எஸ்.ஜே.சூர்யாவின் விசித்திரமான நடிப்புதான் முழுவதுமாக படத்தில் ஈடுபட வைக்கிறது. உதாரணமாக, எஸ்.ஜே. சூர்யாவின் மகன் எதிர்காலத்தில் அவருடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் காட்சி மிகவும் வேடிக்கையாகவும் நயம்படவும் தந்து பார்வையாளர்களுக்கு விருந்து படைத்துள்ளார். அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா பற்றிய குறிப்புகளால் மார்க் ஆன்டனியை நிரம்பியுள்ளார் இயக்குனர் ஆதிக். இந்த அமர்க்களமாக படத்தின் தலைப்பு ரஜினி நடித்த பாஷா (1995) திரைப்படத்தில் மறைந்த ரகுவரன் நடித்த மார்க் ஆண்டனியின் புகழ்பெற்ற பாத்திரத்தைக் குறிக்கிறது. கேங்ஸ்டர் நாடகத்தின் வழக்கமான டெம்ப்ளேட்டைப் பின்பற்றுகிறது என்றாலும், ஆதிக் தனது அனைத்து திறமைகளையும் காட்சிப்படுத்தி முக்கியமான அதிரடி காட்சிகளை திறம்பட அரங்கேற்றி வெற்றி பெற்றிருக்கிறார். க்ளைமாக்ஸ், குழப்பமாக இருந்தாலும்; இறுதிக்கட்டத்தில் ஆண்டனியின் ரீ-என்ட்ரி என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக மாஸாக இயக்குனர் ஆதிக் கொடுத்துள்ளார்.

மொத்தத்தில் மினி ஸ்டுடியோ சார்பில் எஸ்.வினோத் குமார் தயாரித்திருக்கும் மார்க் ஆண்டனி அனைத்து தரப்பினரையும் கவரும் ஒரு சிறந்த புத்துணர்ச்சியூட்டும் ஆக்ஷன் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படம்.