மஹா விமர்சனம்: மஹா படம் ஒரு தாயின் பரிதவிப்பும், பாசமும் ஒன்று சேர, கோப உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் ஆரம்பமாகும் சைக்கோ தேடுதல் வேட்டை |மதிப்பீடு: 3.5/5

0
383

மஹா விமர்சனம்: மஹா படம் ஒரு தாயின் பரிதவிப்பும், பாசமும் ஒன்று சேர, கோப உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் ஆரம்பமாகும் சைக்கோ தேடுதல் வேட்டை |மதிப்பீடு: 3.5/5

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள மஹா படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் யு.ஆர்.ஜமீல்.
இதில் சிம்பு, ஹன்சிகா, குழந்தை மானஸ்வி, ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-ஜிப்ரான், பாடல்கள்-மதன் கார்க்கி, உடை-யு,ஆர்.ஜமீல் ரேஷ்மா, ஒளிப்பதிவு-லக்~;மன், பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா.

பைலட்டாக இருக்கும் சிம்பு விமானப்பணிப்பெண்ணான ஹன்சிகாவும் காதலர்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை மானஸ்வி இருக்கிறாள். இந்த சமயத்தில் எட்டு வயது பெண் குழந்தை காணாமல் போக, சில நாட்களில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கும் குழந்தையின் சடலத்தை மீட்கும் போலீஸ் அதிகாரி ஸ்ரீகாந்த் விசாரணையை தொடங்குகிறார். பலவித கோணங்களில் விசாராணை நடந்து கொண்டிருக்க, ஹன்சிகாவின் குழந்தையும் காணாமல் போகிறாள். இதனால் அதிர்ச்சியாகும் ஹன்சிகா போலீசில் புகார் கொடுத்து. குழந்தையை மீட்குமாறு கெஞ்சுகிறார். ஆனால் எந்த பயனும் இல்லாததால், விரக்தி அடைகிறார். இதனிடையே போலீஸ்காரர் தம்பி ராமையாவின் பேத்தியும் கடத்தப்படுகிறார். போலீசிற்கு செல்லும் தகவல்களை உடனுக்குடன் அறிந்து முன்னெச்சிரிக்கையாக தப்பிக்கும் சைகோ கொலையாளி யார்? கொடூரமாக கொல்ல காரணம் என்ன? இறுதியில் கொலையாளியை யார் கண்டுபிடித்து பழி வாங்குகிறார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

சிம்பு சிறப்பு தோற்றத்தில் சில காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கிறார்.
ஹன்சிகாவின் 50வது படத்தில் ஒரு குழந்தையின் தாயாக, குழந்தையை காணாமல் தவிக்கும் பாசத்தின் விளிம்பாக கதையின் நாயகியாக தன்னை முன்னிறுத்தி நடத்தும் பாசப் போராட்டம் படத்திற்கு ப்ளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. பிரிவால் வாடும் தாயின் மனவலியை பிரதிபலித்து அச்சு அசலயாக இயல்பாக காட்சிகளில் நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார்.

போலீஸ் அதிகாரியாக ஸ்ரீகாந்த் விசாரிக்கும் திறனும், முக்கியத்துவமும் இன்னும் அழுத்தமாக கொடுத்திருக்கலாம்.

இதில் ஸ்ரீகாந்திடம் தனக்கு நேர்ந்த அவலத்தை விவரிக்கும் காட்சிகளில் தம்பி ராமையா தனது சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். கருணாகரன் நடிப்பதற்கு அதிக ஸ்கோப் இல்லாவிட்டாலும் கண்ணியமான வேலையைச் செய்திருக்கிறார்.குழந்தை மானஸ்வி படத்தின் இன்றியமையாத காட்சிகளுக்கு உயிர் கொடுத்து சிறபபாக செய்துள்ளனர்.

மிஸ்ட்ரி க்ரைம் திரில்லர் படங்களுக்கு இசை மிக முக்கியம். அதைப் பூர்த்தி செய்து கைதட்டல் பெறுகிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

லக்~;மணின் காட்சிக்கோணங்கள் படத்திற்கு முக்கிய பங்கு வகித்து, மிரள வைத்துள்ளார்.

குழந்தைகளை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்யும் சைக்கோவை கண்டுபிடித்து தண்டனை கொடுக்க பல போராட்டங்களை சந்தித்து சாதித்து காட்டும் ஒரு தாயின் குமறலை திரைக்கதையாகயமைத்து எழுதி இயக்கியிருக்கிறார் யு.ஆர்.ஜமீல். படத்தின் சில நிமிடங்களிலே கொலையாளி யார் என்பதை சொல்லிவிட்டாலும், அவரின் நடவடிக்கைகள், வாக்கி டாக்கியில் பேசுவதை அறிந்து கொள்வது என்று இறுதியில் சுவாரஸ்யத்தை கலந்திருந்தாலும் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி அழுத்தத்துடன் கொடுத்திருந்தால் சில லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம். இருந்தாலும் அறிமுக இயக்குனர் யு.ஆர்.ஜமீலின் அயராத உழைப்பிற்கும், முயற்சிக்கும் பாராட்டுக்கள்.

மொத்தத்தில்  எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் மற்றும மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள மஹா படம் ஒரு தாயின் பரிதவிப்பும், பாசமும் ஒன்று சேர, கோப உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் ஆரம்பமாகும் சைக்கோ தேடுதல் வேட்டை.