பருந்தாகுது ஊர் குருவி திரைப்பட விமர்சனம்: ‘பருந்தாகுது ஊர் குருவி’ காற்றின் வேகத்திற்கு ஏற்றபடி பறக்க தடுமாறுகிறது

0
506

பருந்தாகுது ஊர் குருவி திரைப்பட விமர்சனம்: ‘பருந்தாகுது ஊர் குருவி’ காற்றின் வேகத்திற்கு ஏற்றபடி பறக்க தடுமாறுகிறது

லைட்ஸ் ஆன் மீடியா எனும் பட நிறுவனம் சார்பில்; சுரேஷ், சுந்தர கிருஷ்ணா, வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து தயாரித்து அறிமுக இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ‘பருந்தாகுது ஊர் குருவி’.

இதில் நடிகர்கள் நிஷாந்த் ரூசோ, விவேக் பிரசன்னா, காயத்ரி ஐயர், ‘ராட்சசன்’ வினோத் சாகர், அருள் டி. சங்கர், கோடங்கி வடிவேல், மறைந்த நடிகர் ஈ. ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு -அஸ்வின் நோயல்,  இசை -ரஞ்சித் உன்னி,  எடிட்டர்-நெல்சன் ஆண்டனி, சண்டை-ஒம் பிரகாஷ், கலை-விவேக் செல்வராஜ், மக்கள் தொடர்பு சதீஷ் – சதீஷ் குமார் – சிவா (ஏய்ம்).

சின்ன சின்ன திருட்டுக்கள் செய்து போலீசில் மாட்டிக் கொள்ளும் வழக்கமுடைய ஆதி(நிஷாந்த்) ஒரு நாள் போலீஸ் நிலையத்தில் விசாரணையில் இருக்கும் போது காட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்று போனில் தகவல் வருகிறது. அந்தக் காட்டிற்கு செல்ல ஆதிக்கு வழி தெரியும் என்பதால் சப் இன்ஸ்பெக்டர் போஸ் (கோடங்கி வடிவேல்) அழைத்துச் செல்கிறார். அந்தக்காட்டில் கொலை செய்யப்பட்டு இறந்து விட்டதாக கருதப்படும் மாறனை (விவேக் பிரசன்னா) கண்டுபிடித்து ஆதியுடன் கைவிலங்கிட்டு பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு செல்கிறார் சப்-இன்ஸ்பெக்டர் போஸ். இதனிடையே மாறன் உயிரோடு இருப்பதை உணர்கிறார் ஆதி. அந்த சமயத்தில் மாறனின் போனிற்கு அழைப்பு வர, அதை எடுக்கும் ஆதியிடம் ஒரு பெண் தன் கணவரை காப்பாற்றுமாறும் பத்து லட்சம் பணம் தருவதாக வாக்குறுதி கொடுக்கிறார். அந்தப் பெண் பிரபல நடிகை என்பதாலும், நிறைய பணம் கிடைக்கும் என்பதாலும் மாறனை காப்பாற்ற முடிவு செய்கிறார் ஆதி. மாறனை சுமந்து கொண்டு காட்டில் ஒடும் போது, மாறனை தேடி இரு வேறு திசையில் போலீஸ் மற்றும் சில ரவுடிகள் துரத்தி வருகின்றனர். எதற்காக மாறனை கொல்ல ரவுடிகள் மீண்டும் வருகின்றனர்? போலீஸ் இருவரையும் பிடித்ததா? மாறன் உயிரோடு காப்பாற்றப்பட்டாரா? ஆதியினால் மாறனை காப்பாற்ற முடிந்ததா? உண்மையான குற்றவாளி யார்? ஏன் மாறனை துரத்துகிறார்கள்? என்ன காரணம்?என்பதே படத்தின் முடிவு.

ஆதியாக விவேக் பிரசன்னாவை சுமக்கும் வேலையும், அவரை வைத்துக் கொண்டு ஒடுவது என்று நிஷாந்த் ரூசோ கடின உழைப்புடன், அர்ப்பணிப்புடன்  இயல்பாக நடித்துள்ளார்.

பிரபல நடிகையின் கணவராகவும், ஊழலில் சிக்கும் விவேக் பிரசன்னா, பின்னர் தாக்கப்பட்டு உயிர் தப்பிக்க போராடும் கதாபாத்திரமும், கொலை செய்ய யார் அனுப்பினார்கள் என்ற குழப்ப நிலையை நிறைவாக செய்துள்ளார். பிரசன்னா- காயத்ரி ஐயர், கதாபாத்திரங்களின் காதல் காட்சிகள் கண்ணியமாகவும், மாறனின் மனைவி மற்றும் ஒரு பிரபல நடிகையாக காயத்ரி ஐயர் நடித்திருப்பது பாராட்டுக்குரியது

போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் வரும் ‘ராட்சசன்’ வினோத் சாகர், அருள் டி. சங்கர், சப்-இன்ஸ்பெக்டராக வரும் கோடங்கி வடிவேல், மறைந்த நடிகர் ஈ. ராமதாஸ் ஆகியோர் பாத்திரப்படைப்பு சிறப்பு.

விவேக் பிரசன்னாவை கொல்ல முயலும் கௌதம், ராஜேஷ், ஆனந்த் மற்றும் ஆதிக் கூட்டணியில் அதிக டயலாக் இல்லாவிட்டாலும், அவர்களின் செயல்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

ஒளிப்பதிவாளர் அஸ்வின் நோயல் படத்தின் மிகப்பெரிய பலமாக இருந்து அடர்ந்த காட்டில் பயணிக்கும் கதை பரபரப்பாகவும், விறுவிறுப்புடன் காட்சிப்படுத்தப்பட்டு, ஒரே இடத்தில் நடக்கும் சம்பவங்களை பல்வேறு கோணங்களில் ரசிக்க வைத்துள்ளது பாராட்டுக்குரியது.

எடிட்டர்-நெல்சன் ஆண்டனி, சண்டை-ஒம் பிரகாஷ், கலை-விவேக் செல்வராஜ் பங்களிப்பு படத்தின் ஈர்ப்பை அதிகரிக்கிறது.

இசையமைப்பாளர் ரஞ்சித் உன்னியின் பின்னணி இசை காட்சிகளின் சுறுசுறுப்பை கூட்டி படத்தில் பாடல்கள் இல்லையென்றாலும், பின்னணி இசை படத்திற்கு பெரிதும் கைகொடுக்கிறது.

ஒரு இரவு ஒரு பகல் கதையில் தேவையில்லாத விஷயங்களை திணிக்காமல் நேர்த்தியாகவும் அதே சமயம் சொல்ல நினைத்ததையும் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ். பல புதிர்கள் நிறைந்த காட்டுக்குள் இருவர் மாட்டிக்கொள்ளும் சிக்கலான சூழலில், படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நம் கவனத்தை ஈர்க்கும் இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ், ஒருவர் மற்றொருவரை எப்படி காப்பாற்றுகிறார், அவர்கள் எப்படி உயிர் பிழைக்கிறார்கள் என்பதை ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில், சர்வைவல் திரில்லர் பாணியில் சொல்வதே இப்படம். இரண்டு கதாபாத்திரங்களுடன் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி நம்மை ரசிக்க வைத்தவர் அதே நிலை இரண்டாம் பாதியில் நீடிக்காததால் படம் கொஞ்சம் பலவீனமாகிவிட்டது. உயிருக்குப் போராடும் ஒருவரின் நிலையைக் காட்டும் விதமும் கொல்வதற்கான காரணத்தை வலியுறுத்தாதது படத்திற்கு சற்று தொய்வைத் தருகிறது. இருப்பினும், கொலை செய்ய முயற்சிப்பது யார்? என்ற சஸ்பென்ஸ் படத்தில் உள்ள குறைகளை மறைத்து ரசிக்க வைக்கிறது. திரைப்படம் வித்தியாசமாக இருக்க முயற்சிக்கிறது, ஆனால் அதன் சாதாரணமான திரைப்படத் தயாரிப்பு மற்றும் பொருத்தமற்ற கதாபாத்திரங்கள் காரணமாக இறுதியில் சுவாரஸ்யத்தை குறைத்து விடுகிறது.

மொத்தத்தில் லைட்ஸ் ஆன் மீடியா எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சுரேஷ், சுந்தர கிருஷ்ணா, வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் ‘பருந்தாகுது ஊர் குருவி’ காற்றின் வேகத்திற்கு ஏற்றபடி பறக்க தடுமாறுகிறது.