தண்டட்டி சினிமா விமர்சனம் : தண்டட்டி காதலுக்கும், காதுக்கும் இருக்கும் நெருக்கத்தை சொல்லும் கிராமத்து எழில் காவியம் | ரேட்டிங்: 3.5/5

0
526

தண்டட்டி சினிமா விமர்சனம் : தண்டட்டி காதலுக்கும், காதுக்கும் இருக்கும் நெருக்கத்தை சொல்லும் கிராமத்து எழில் காவியம் | ரேட்டிங்: 3.5/5

பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்‌ஷ்மன் குமார் தயாரித்திருக்கும் தண்டட்டி திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராம் சங்கையா.

இதில் பசுபதி – சுப்பிரமணி,ரோகிணி – தங்கப்பொண்ணு,அம்மு அபிராமி – தங்கப்பொண்ணு (இளமை பருவம்), விவேக் பிரசன்னா – சோ பாண்டி, முகேஷ் – செல்வராசு, தீபா சங்கர் – பொன்னாத்தா, பூவிதா – சின்னாத்தா, ஜானகி – பூவாத்தா, செம்மலர் அன்னம் – விருமாயி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:-ஒளிப்பதிவாளர் – மகேஷ் முத்துசாமி, இசை – கே.எஸ்.சுந்தரமூர்த்தி, எடிட்டிங் – சிவா, பாடல்கள் – பட்டினத்தார், ஏகாதசி, ராம் சங்கையா, மக்கள் தொடர்பு : ஜான்

தங்கப்பொண்ணு கிடாரிப்பட்டி என்ற கிராமத்தில் வசிக்கும் விதவை. இவருக்கு நான்கு மகள்கள் (தீபா சங்கர்) பொன்னாத்தா, (பூவிதா)சின்னாத்தா, (ஜானகி) பூவாத்தா, (செம்மலர் அன்னம்) விருமாயி அனைவருமே திருமணமானவர்கள்.மற்றும் இரண்டு மகன்கள். இதில் ஒரு மகன் இறந்து விட மருமகள், பேரன் செல்வராசு (முகேஷ்) இருக்கின்றனர்.மற்றும் இன்னொரு மகன் திருமணம் ஆகாமல் இருக்கும் சோ பாண்டி ( விவேக் பிரசன்னா);. தினமும் குடித்து விட்டு தாய் தங்கப்பொண்ணுவிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கச் சொல்லி அலப்பறை பண்ணுவது சோ பாண்டியின் கேரக்டர். மகள்கள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் தாயிடம் பணத்தையோ பொருளையோ லாவகமாக பேசி எடுத்துச் செல்லுபவர்கள். இவர்கள் அனைவரையும் சமாளிப்பதே தங்கப்பொண்ணுவிற்கு பெரும்பாடாக இருக்கிறது. ஒரு நாள் தங்கப்பொண்ணு காணாமல் போக அவரை தேடி கண்டுபிடித்து தருமாறு பேரன் செல்வராசு மற்றும் மகள்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கின்றனர். கிடாரிப்பட்டி மக்கள் போலீசை எதிரியாகவே பார்ப்பவர்கள். அதனால் போலீஸ் நிலையத்தில் இவர்களின் புகாரை எடுக்க மறுக்கின்றனர். அப்பொழுது புதிதாக சேரும் ரிடையர் ஆகப்போகும் காவலர் சுப்பிரமணி(பசுபதி) இந்த புகாரை விசாரிக்க தைரியமாக கிளம்புகிறார். பல இடங்களில் தங்கப்பொண்ணுவை கஷ்டப்பட்டு தேடி கண்டுபிடித்து அழைத்து வரும் வேலையில் திடீரென்று தங்கப் பொண்ணு இறந்து விடுகிறார். தங்கப்பொண்ணுவின் சடலத்தை வீட்டிற்கு எடுத்து வருகிறார்கள். தாயின் சாவை விட அவரின் தண்டட்டி மேல் குறியாக மகள்கள் இருக்கிறார்கள்.அங்கு சென்றபின் தான் மகள்களின், மகனின் சுயரூபம் அவருக்கு தெரிய வருகிறது. அன்றிரவு தங்கப்பொண்ணுவின் தண்டட்டி காணாமல் போக மறுநாள் வீடும், கிராமமும் அமர்க்களப்படுகிறது. தங்கப்பொண்ணுவின் தண்டட்டியை யார் எடுத்தது? தண்டட்டிக்கும் தங்கப்பொண்ணுவிற்கும் இருக்கும் பந்தம் என்ன? தங்கப்பொண்ணுவின் இறுதிச் சடங்கு நல்லபடியாக நடந்தா? காவலர் சுப்ரமணி என்ன செய்தார்? என்பதே படத்தின் முடிவு.

காவலர் சுப்ரமணியாக பசுபதி வெள்ளேந்தி மனசுடன் கிடாரிப்பட்டி கிராமத்திற்கு சென்ற பின் அங்கிருக்கும் வில்லங்க மக்களை சந்தித்து பதறும் இடங்களிலும், தங்கப்பொண்ணுவின் தண்டட்டியை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகள், கிராமத்து மக்களின் நையாண்டி, கேலி, கிண்டல்களை பொறுத்துக் கொண்டு விசாரிக்க முற்படுவது, கிராமத்து மக்களை பயத்துடன் அதட்டி பணிய வைப்பது, தங்கப்பொண்ணுவின் கதையை கேட்டு அதிர்வது, அதன் பின் இறுதியில் எடுக்கும் முடிவு என்று தேர்ந்த நடிப்பு திறமை படத்திற்கு பலமாக அமைகிறது.

தங்கப்பொண்ணுவாக ரோகிணி முதுமையான கதாபாத்திரத்தில் தனிச்சிறப்புடன் தோன்றி மனதில் பதிகிறார். இவர் பிள்ளைகள் மேல் வைத்திருக்கும் பாசமும், அனைத்தையும் பொறுத்துக் கொண்டு பொறுமையாக வாழ்க்கையை வாழும் தங்கப்பொண்ணுவாக சில காட்சிகள் காட்டினாலும், மீதிக் காட்சிகள் சடலமாக உட்கார்ந்த நிலையிலேயே யதார்த்தமாக அவரைச் சுற்றி நடக்கும் சம்பவங்களும் சுவாரஸ்யத்துடன் நகர்வதும், கடைசி ஆசை நினைத்த வண்ணம் கச்சிதமாக முடிவுக்கு வருவது கை தட்டல் பெறுகின்றன.

பேரன் செல்வராசுவாக முகேஷ், குடிகாரன் மகனாக விவேக் பிரசன்னா, தங்கப்பொண்ணுவின் மகளாக வரும் தீபா சங்கர் (பொன்னாத்தா), பூவிதா (சின்னாத்தா), ஜானகி (பூவாத்தா), செம்மலர் அன்னம் (விருமாயி) ஆகியோர் கிராமத்து மனிதர்களாக, நடை, உடை, பாவனை, வசனம், சண்டை என்று அசத்தியுள்ளனர் அவர்களுடன் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகளும் ஒப்பாரி பாடல்களுடன் நையாண்டி செய்து தூள் கிளப்பியுள்ளனர்.

இளமைகால தங்கப்பொண்ணுவாக அம்மு அபிராமி சாதிவெறியால் கைவிட்டு;ப் போன காதல் ப்ளாஷ்பேக் காட்சிகளில் உணர்ச்சிகரமான நடிப்பால் கவர்கிறார்.

போலீஸ் நிலையத்தில் தொடங்கும் ஆரம்ப காட்சி முதல் கிராமத்து சடங்குகள், சம்பிரதாயங்கள், சண்டை, சச்சரவுகள், கிராமத்து மக்களின் வாழ்வியலை அழகாக படம் பிடித்து இறுதிச் சடங்கு வரை நேர்த்தியாக காட்சிக்கோணங்களில் வர்ண ஜாலங்களுடன் கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும், நேர்த்தியான சிவாவின் படத்தொகுப்பும் கிராமத்திற்கேற்ற கதைக்களத்திற்கு கை கொடுத்துள்ளது.

இளமையில் சாதிவெறியால் காதல் தடைபட, குடும்பத்தாரின் நிர்பந்த கல்யாணத்தை ஏற்றுக்கொண்டு கணவன் இறந்த பிறகும், பிள்ளைகளை கரை சேர்க்கும் ஒரு தாய், இறந்த பிறகும் பிள்ளைகள் ஏற்படுத்தும் சிக்கல்களை எவ்வாறு ஒரு நேர்மையான காவலர் அவற்றை சரி செய்கிறார் என்பதை காணாமல் போகும் தண்டட்டியை மையமாக வைத்து மனதை நெருடும் க்ளைமேக்சுடன் முடித்திருக்கிறார் இயக்குனர் ராம் சங்கய்யா. கிராமத்து கலாட்டாவை நகைச்சுவையுடன், சுவாரஸ்யத்துடன் இறுதியில் திருப்பங்களுடன் கதையை கொண்டு சென்றதில் வெற்றி பெற்றுருக்கிறார் இயக்குனர் ராம் சங்கையா.

மொத்தத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்‌ஷ்மன் குமார் தயாரித்திருக்கும் தண்டட்டி காதலுக்கும், காதுக்கும் இருக்கும் நெருக்கத்தை சொல்லும் கிராமத்து எழில் காவியம்.