சைத்ரா விமர்சனம் : சைத்ரா தற்கொலை செய்ய வைக்கும் பயமுறுத்தாத பேய் | ரேட்டிங்: 2/5

0
230

சைத்ரா விமர்சனம் : சைத்ரா தற்கொலை செய்ய வைக்கும் பயமுறுத்தாத பேய் | ரேட்டிங்: 2/5

மார்ஸ் பிரொடக்ஷன்ஸ் சார்பில் கே. மனோகரன் தயாரித்திருக்கும் சைத்ரா படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் எம். ஜெனித்குமார். படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

இதில் யாஷிகா ஆனந்த் (சைத்ரா) அவிதேஜ் (கதிர் )சக்தி மகேந்திரா (திவ்யா), பூஜா (மதுமிதா) கண்ணன் (இன்ஸ்பெக்டர்), ரமணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு – சதீஷ் குமார், இசை – பிரபாகரன் மெய்யப்பன், பாடல்கள் – மணிகண்டன் விஜயலட்சுமி, எடிட்டிங் –  எலிஷா, தயாரிப்பு மேற்பார்வை – தேக்கமலை பாலாஜி,இணை தயாரிப்பு – கண்ணன் வரதராஜ்,  மக்கள் தொடர்பு – மணவை புவன்.

அனாதையான சைத்ராவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் கதிர். பெரிய பங்களாவில் இருவரும் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கை துவங்கிய நிலையில் சைத்ரா மனநோயால் பாதிக்கப்படுகிறார். தனியாக இருக்கும் போது இறந்த தனது தோழி மதுமிதா, அவருடைய கணவரும் வந்து பயமுறுத்துகிறார்கள் என்று புலம்பி, தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறார் சைத்ரா. இதனால் கலக்கமடையும் கதிர் அவருக்கு மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் கொடுத்து அருகே இருந்து பார்த்துக் கொள்கிறார். ஒரு நாள் கதிரின் நண்பர் சிவா காதலர் தினத்தன்று தன் காதலி திவ்யாவிற்கு பரிசு பொருள் வாங்க கதிரை அழைக்கிறார். கதிரும் சைத்ராவை தனியே வீட்டில் விட்டு விட்டு செல்கிறார். சிறிது நேரம் கழித்து கதிர் சைத்ராவிற்கு போன் செய்கிறார். வீட்டில் அந்த போனை சைத்ராவின் இறந்த போன தோழி மதுமிதா எடுக்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் கதிர், சிவாவிடம் வீட்டில் கெட்ட சக்தி இருப்பதாக கூறி ஆனைமலை சாமியாரை அழைத்து கொண்டு வருமாறு கூறுகிறார். இதனால் சிவா காதலி திவ்யாவிடம் சொல்லிவிட்டு செல்கிறார். அதன் பின் திவ்யாவிற்கு சிவாவிடமிருந்து அழைப்பு வருகிறது, கதிர் வீட்டில் இருப்பதாகவும் தன்னை காப்பாற்றுமாறும், தன்னை அவர்கள் கொன்று விடுவார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே போன் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இதனால் கலக்கமடையும் திவ்யா, தன் போலீஸ் நண்பர் உதவியுடன் கதிரின் வீட்டிற்கு செல்கிறார். கதிர் வீட்டு வாசலில் தோழி மதுமிதா, மற்றும் அவரது கணவரை பார்க்கிறார் திவ்யா, ஆனால் அவர்களும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தெரிவிக்கின்றனர்.அங்கே சிவா அடிபட்டு சுயநினைவு இல்லாமல் கையில் ரத்தக்கரை படிந்த கத்தியுடன் கிடக்கிறார். வீட்டில் சைத்ரா, கதிர், ஆனைமலை சாமியார் ஆகிய மூவரும் எங்கே போனார்கள் என்பது தெரியாமல்,சிவாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் திவ்யா. இறுதியில் மதுமிதாவும் கணவரும் உண்மையில் உயிரோடு தான் இருக்கிறார்களா? சைத்ரா சொல்வது உண்மையா? பொய்யா? சைத்ரா, கதிர், ஆனைமலை சாமியார் என்ன ஆனார்கள்? சிவா ஏன் சுயநினைவின்றி கிடந்தார்? உண்மையில் நடந்த சம்பவம் என்ன? என்ற கேள்விகளுக்கு பதில் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

சைத்ராவாக யாஷிகா ஆனந்த்  மனநல நோயாளியா? பேயா? என்று வித்தியாசம் காட்டாத அளவிற்கு நடித்துள்ளார். யாஷிகா என்றால் கிளாமர் என்று நினைத்து போகும் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக குடும்பப்பெண்ணாக ஒரே உடையில் படம் முழுவதும் வந்து போகிறார். கொஞ்ச இடங்களில் பேயாக பயமுறுத்துகிறார்.

கணவர் கதிராக அவிதேஜ் பாசமிகு கணவராக, யாஷிகாவின் நிலையை கண்டு கலங்குவதும் பின்னர் ஏற்படும் திடீர் திருப்பம் நிறைந்த கதாபாத்திரம். படம் முழுவதும் வரும் சிவாவின் காதலி திவ்யாவாக சக்தி மகேந்திரா நல்ல வசன உச்சரிப்பு நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். பூஜா (மதுமிதா) கண்ணன் (இன்ஸ்பெக்டர்), ரமணன், லூயிஸ், மொசக்குட்டி என்று சில கேரக்டர்கள் தான் படத்தில்; வந்தாலும் திறம்பட செய்துள்ளனர்.

மணிகண்டன் விஜயலட்சுமி பாடல் வரிகளில் பிரபாகரன் மெய்யப்பன் இசையில் படம் முடிவில் வரும் பாடல் ரசிக்க வைத்துள்ளது, பின்னணி இசை பயமுறுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது.

சதீஷ் குமார் ஒளிப்பதிவு ஒரே வீட்டில் நடக்கும் சம்பவங்களை தோய்வில்லாமல் கொடுப்பது என்பது கொஞ்சம் கடினம் தான் அதனை தன் காட்சிக்கோணங்களால் வித்தியாசமான கோணத்தில் பதிவு செய்திருப்பது சிறப்பு.

எடிட்டிங் –  எலிஷா முடிந்தவரை புரியும்படி கொடுக்க முயற்சித்துள்ளார்.

சைத்ரா-தி பிகினிங் ஆஃப் தி எண்ட் என்ற டைட்டிலுடன் ஒரே நாளில் நடக்கும் கதைக்களத்தை யாஷிகா தன் கதையை சொல்வது போல் ஆரம்பித்து முடிவில் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக மரணத்தை சந்திப்பது எப்படி என்பதையும், உண்மையில் யார் தான் பேய் என்பதை இறுதிவரை சஸ்பென்சை தக்க வைத்திருப்பதில் கவனத்தை ஈர்க்கிறார் இயக்குனர் எம். ஜெனித்குமார். பேய் தான் இறந்ததை அறியாமல் இருப்பதும், யாரையும் பயமுறுத்தாமல் வசனம் பேசி ஒடுவது, இறந்த பேய் சாதாரண மனிதர் போல் நடமாடுவது, தற்கொலைக்கு தூண்டுவது என்று நகைச்சுவை கலக்;காமல் திகில் நிறைந்திருக்க வேண்டும் அதே சமயம் வித்தியாசமாக கொடுக்க நினைத்து பத்து கதாபாத்திரங்களை வைத்து பட்ஜெட்டுக்கேற்றவாறு இயக்குனர் எம்.ஜெனித்குமாரின் கச்சிதமான முயற்சி பாராட்டுக்குரியது. அதே சமயம் ரசிகர்களையும் துரத்தும் முடிவில்லா ஆரம்பம் என்றும் சொல்லியிருக்கிறார்.

மார்ஸ் பிரொடக்ஷன்ஸ் சார்பில் கே. மனோகரன் தயாரித்திருக்கும் சைத்ரா தற்கொலை செய்ய வைக்கும் பயமுறுத்தாத பேய்.