சிறுவன் சாமுவேல் திரைவிமர்சனம்: சிறுவன் சாமுவேல் குழந்தைகளின் மனதை கவரும் சின்னஞ்சிறு கள்வன் | ரேட்டிங்: 3.5/5

0
250

சிறுவன் சாமுவேல் திரைவிமர்சனம்: சிறுவன் சாமுவேல் குழந்தைகளின் மனதை கவரும் சின்னஞ்சிறு கள்வன் | ரேட்டிங்: 3.5/5

கண்ட்ரி சைட் பிலிம்ஸ் தயாரித்து சிறுவன் சாமுவேல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சாது ஃபெர்லிங்டென்.

இதில் அஜீதன் தவசி முத்து, கே ஜி.விஷ்ணு, செல்லப்பன், எஸ்.பி . அபர்ணா, எம். ஏ.மெர்சின், ஜே. ஜெனிஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை:எஸ்.சாம் எட்வின், மனோகர், ஜே. ஸ்டான்லி ஜான், ஒளிப்பதிவு: சிவனாந் காந்தி, எடிட்டர் – எஸ்.ஏ. அஜீத் ஸ்டீபன்,பி.ஆர்.ஓ ஸ்ரீ வெங்கடேஷ்.

90களில் கன்னியாகுமரியில் கூலித்தொழிலாளியின் மகன் சாமுவேல் பற்றிய கதைக்களமாக படம் தொடங்குகிறது. வறுமையில் வாடினாலும் சிறுவன் சாமுவேலுக்கு கிரிக்கெட் மீது அதீத வெறி அதனால் எப்படியாவது கிரிக்கெட் மட்டை வாங்க வேண்டும் என்பது அவனுடைய அந்த வயதில் அதிகபட்ச ஆசையாக இருக்கிறது. இது தேவையில்லாத செலவாக கருதும் தந்தையிடம் அடி, உதை வாங்கினாலும் மனதை மாற்றாமல் உறுதியாக சாமுவேல் இருக்கிறான். சிறுவன் சாமுவேல் (அஜிதன் தவசிமுத்து) மற்றும் ராஜேஷ் (கே.ஜி. விஷ்ணு) இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் கிரிக்கெட் விளையாடி மகிழ்கின்றனர். 500 டிரேட் கார்ட்டுகளை சேர்த்தால் ஒரு கிரிக்கெட் மட்டை இலவசமாக கிடைக்கும் என்ற அறிவிப்பை பார்த்து,அதற்காக சிறுக சிறுக கார்ட்டுகளை சேகரிக்க தொடங்குகிறான். இந்நிலையில் விளையாட்டின் போது பணக்கார சிறுவனின் வீடியோ கேம் தொலைந்து போக அந்த திருட்டு பழி சிறுவன் ராஜேஷ் மீது விழுகிறது. அது முதல் பள்ளிப் படிப்பை நிறுத்திpவிட்டு வேலைக்கு அனுப்புகிறார் ராஜேஷின் தந்தை. பணக்காரக் குழந்தையின் குற்றச்சாட்டுகளை விசாரிக்காமல், உள்ளுர் மக்களால் ராஜேஷ் ஒரு திருடனாக கருதப்படுகிறார். இந்த குற்றச்சாட்டு ராஜேஷின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது?அது சாம் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? என்பதே சிறுவன் சாமுவேல் முடிவு.

சிறுவன் அஜிதன் தவசிமுத்து சாமுவேல் கதாபாத்திரத்திலும்,ராஜேஷாக அப்பாவி நண்பனாக கே.ஜி.விஷ்ணு இருவருமே அவர்கள் ஏற்ற ரோலுக்கு நியாயம் செய்து பொருத்தமான நடிப்பை கொடுத்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டது நடை, உடை, பாவனை, வசன உச்சரிப்பு என்று அனைத்தையும் வித்தியாசப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு ஈடுசெய்து இணைந்து நடித்திருக்கும் அனைத்து சிறுவர்களும், குழந்தைகளிடம் கருணையும் அக்கறையும் காட்டும் இளம் டியூஷன் ஆசிரியையான ஜெபா (எஸ்.பி. அபர்ணா) மற்றும் கதையோடு பயணிக்கும் அனைவருமே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை இயல்பான நடிப்பின் மூலம் நிறைவாக செய்துள்ளனர்.

இசை-எஸ்.சாம் எட்வின், மனோகர், ஜே. ஸ்டான்லி ஜான், ஒளிப்பதிவு: சிவனாந்த் காந்தி, எடிட்டர் – எஸ்.ஏ. அஜீத் ஸ்டீபன் ஆகிய தொழில்நுட்ப வல்லுனர்கள் மிகச் சரியாக கன்னியாகுமரியின் எழிலையும், வாழ்வியலையும், குழந்தைகளுக்கேற்ற படமாக உயிரோட்டமாக கொடுத்துள்ளதால், சர்வதேச படவிழாக்களில் கலந்து கொண்டு விருதுகளையும் வென்றுள்ளது தனிச்சிறப்பு.

இரண்டு சிறுவர்களின் ஆசைகள், நிராசைகள், அதற்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் அவர்களுக்கு எத்தகைய வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்துவதும்,தனிநபர்களைப் பற்றிய கருத்துக்களை உருவாக்குவதில் தோற்றமும் செல்வமும் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதையும் இதில் சுட்டிக்காட்டி குழந்தைகளின் யதார்த்தமான வாழ்க்கையும், அவர்களின் ஆசையையும் திறம்பட அர்த்தமுள்ள கிராமத்து சூழ்நிலையோடு விளக்கி அசத்தியுள்ளார் இயக்குனர் சாது ஃபெர்லிங்டென்.

மொத்தத்தில் சிறுவன் சாமுவேல் குழந்தைகளின் மனதை கவரும் சின்னஞ்சிறு கள்வன்.