சாமானியன் விமர்சனம் : சாமான்யன் வங்கிக் கடன்களின் அட்டூழியங்களை மிரட்டலுடன் தோலுரிப்பவன் | ரேட்டிங்: 3.5/5

0
622

சாமானியன் விமர்சனம் : சாமான்யன் வங்கிக் கடன்களின் அட்டூழியங்களை மிரட்டலுடன் தோலுரிப்பவன் | ரேட்டிங்: 3.5/5

எட்செடிரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் வி மதியழகன் தயாரித்திருக்கும் சாமான்யன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர் ரஹேஷ்.

இதில் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், மைம் கோபி, கே.எஸ்.ரவிக்குமார், சரவணன் சுப்பையா, நக்ஷா சரண், லியோ சிவகுமார், வினோதினி, தீபா சங்கர், ஸ்ம்ருதி வெங்கட், அப்ரநதி, அறந்தாங்கி நிஷா, சரவணன் சக்தி, கஜராஜ், முல்லை, அருள் மணி , கோதண்டம், சூப்பர்குட் சுப்ரமணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இணைத் தயாரிப்பாளர்: டி பாலசுப்ரமணியம் மற்றும் சி சதீஷ் குமார், கிரியேட்டிவ் ஹெட்: ஸ்ரீதா ராவ், இசை: மெஸ்ட்ரோ இளையராஜா, பாடல்கள்: மெஸ்ட்ரோ இளையராஜா, பாடகர்கள்: மெஸ்ட்ரோ இளையராஜா, கார்த்திக், ஷரத், ஒளிப்பதிவாளர்: சி.அருள் செல்வன், எடிட்டர்-ராம் கோபி, கதை- வி. கார்த்திக்குமார், நடன இயக்குனர்: விஷ்ணுவிமல், பிஆர்ஒ – ஜான்.

ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் மூன்று பேரும் நண்பர்கள். பேத்தியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக ராமராஜன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் மதுரையிலிருந்து சென்னையில் இருக்கும் ராதாரவியின் வீட்டில் வந்து தங்குகின்றனர். பின்னர் ராமராஜன் தி நகரில் இருக்கும் பிரபல வங்கிக்கு பணம் எடுக்க செல்கிறார். அங்கே சென்றவுடன் ராமராஜன் தன்னிடம் வெடிகுண்டு, துப்பாக்கி இருப்பதாகவும், அதை வெடிக்க செய்து விடுவேன் என்று வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்களை மிரட்டி வங்கியை தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறார். இதே நேரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் வங்கி மேளாளரின் வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்தை துப்பாக்கி முனையில் பிணய கைதியாக வைக்கிறார். அதே போல் ராதாரவி வங்கி உதவி மேலாளரின் கர்ப்பிணி மனைவியை சிறை வைக்கிறார். போலீஸ் தகவலறிந்து வங்கிக்கு விரைகின்றனர் அதே சமயம் இந்த தகவல் ஊடகங்கள் மூலமாக பரவி தமிழகமே பரபரப்பாகிறது. வங்கி மேலாளர் மூன்றரை லட்சத்தை வட்டியுடன் கொடுக்க வேண்டும் என்றும், வங்கி ஊழியர் வசிக்கும் வீட்டை காலி செய்து மதுரையில் வசிக்கும் ஒரு குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கிறார் ராமராஜன். போலீஸ் மதுரை விரைய அங்கே ராமராஜன் சொன்ன அந்த குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, குழந்தை ஆகியோர் உயிருடன் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியாகின்றனர். ராமராஜனுக்கும் இறந்த குடும்பத்திற்கும் உள்ள உறவு என்ன? ராமராஜன் ஏன் வங்கிக்கு வந்து கொலை மிரட்டல் விடுத்தார்? காரணம் என்ன? மூன்று நண்பர்கள் சேர்ந்து குறிப்பிட்ட வங்கி ஊழியர்களை மட்டும் குறி வைத்து மிரட்டுவது ஏன்? இதற்கு பின்னால் நடந்த சம்பவங்கள் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் பல வெற்றிப் படங்களை கொடுத்து கிராம மக்களை கவர்ந்த ராமராஜன் பதிமூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் களமிறங்கி பாசக்கார தந்தையாக தேர்ந்த நடிப்பால் மனதை வெல்கிறார். இறந்த தன் உயிர் நண்பனின் மகளை, தன் மகளாக வளர்ந்து, படிக்க வைத்து, நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்து மகிழும் வேளையிலும், சென்னையில் நடக்கும் அசம்பாவிதத்தால் நிலைகுலைந்து எடுக்கும் முடிவு, படத்தின் திருப்புமனைக்கு வழி வகுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து வங்கிக்கடனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் ராமராஜன்.

இவருக்கு உதவும் நண்பர்களாக ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் வயதிற்கேற்ற முதிர்ச்சியுடன், மிரட்டலுடன் அசர வைத்துள்ளனர்.

இளம் தம்பதிகளாக லியோ சிவகுமார் மற்றும் லக்‌ஷா சரண் பாசத்தையும் அன்பையும் கலந்த நடிப்பும், பின்பு அவமானங்களால் அவதிப்படும் இடங்களிலும், விபரீத முடிவு எடுக்கும் போதும் தத்ரூபமாக செய்துள்ளனர்.

வங்கி அதிகாரியாக போஸ் வெங்கட், பிரபல கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக சைலன்ட் கில்லர் வில்லனாக மைம் கோபி, காவல்துறை உயர் அதிகாரியாக கே.எஸ்.ரவிக்குமார், ஊடக நிருபராக அபர்ணதி, போலீஸ் இன்ஸ்பெக்டராக கஜராஜ், ஸ்ருமதி வெங்கட், வினோதினி, தீபா சங்கர், அறந்தாங்கி நிஷா, சரவணன் சக்தி, முல்லை, அருள் மணி , கோதண்டம், சூப்பர்குட் சுப்ரமணி மற்றும் பலரின் நடிப்பு படத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளது.

இளையராஜாவின் இசையில் ராமராஜனின் பழைய படங்களின் பாடல்கள் இடையிடையே வந்து தேனிசை விருந்து படைப்பதோடு இரண்டு பாடல்களும், பின்னணி இசை படத்திற்கு முக்கிய பலம்.

ஒளிப்பதிவாளர் சி.அருள் செல்வன், படத்தொகுப்பாளர் ராம் கோபி ஆகியோரின் உழைப்பு படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.

மகிழ்ச்சியான குடும்பத்தில் வீடு வாங்க வேண்டும் என்ற ஆசையால், கடன் வாங்கி அவதிப்படும் பரிதாப நிலையை மையப்படுத்தி தந்தை மகள் பாசம் கலந்து விறுவிறுப்பாக கொடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர் ஆர் ரஹேஷ். கடனால் வாங்கிய வீடு இல்லை வங்கி வீடு, கடன் ஆயுளை குறைக்கும் என்று இறுதிக் காட்சியில் பல வசனங்கள் அழுத்தமாக பதிவு செய்ததிலும், அதிக வட்டி, தரமற்ற கட்டுமானம், கடனால் வரும் தொல்லைகள், மக்கள் படும் அவதிகள், அவமானங்கள், அத்து மீறல்களை நயம்பட விவரித்து நயவஞ்சக கடன் வலையில் சிக்காமல் இருக்க எச்சரிக்கை அவசியம் என்பதை வலியுறுத்தி இயக்கியிருக்கிறார் ஆர் ரஹேஷ்.

மொத்தத்தில் எட்செடிரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்திருக்கும் சாமான்யன் வங்கிக் கடன்களின் அட்டூழியங்களை மிரட்டலுடன் தோலுரிப்பவன்.