கருமேகங்கள் கலைகின்றன திரைப்பட விமர்சனம் : ‘கருமேகங்கள் கலைகின்றன’ தொலைந்து விட்ட பாசமிகு உறவைத் தேடிச்செல்லும் இருவரின் போராட்ட பயணம் | ரேட்டிங்: 3/5

0
381

கருமேகங்கள் கலைகின்றன திரைப்பட விமர்சனம் : ‘கருமேகங்கள் கலைகின்றன’ தொலைந்து விட்ட பாசமிகு உறவைத் தேடிச்செல்லும் இருவரின் போராட்ட பயணம் | ரேட்டிங்: 3/5

ரியோட்டா மீடியா சார்பில் வீரசக்தி துரைக்கண்ணு தயாரித்து இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’.

இப்படத்தில் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகி பாபு, மகானா, எஸ்.ஏ.சந்திரசேகர், டெல்லி கணேஷ், விபின், ஆர்.வி.உதயகுமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-ஜி.வி.பிரகாஷ்குமார், பாடல்கள்- கவிப்பேரரசு வைரமுத்து, ஒளிப்பதிவு-ஏகாம்பரம், படத்தொகுப்பு-பி.லெனின், நடனம்-ராதிகா, தயாரிப்பு வடிவமைப்பு -டி.முத்துராஜ். மக்கள் தொடர்பு ஜான்சன்.

ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதனுக்கு (பாரதிராஜா) மூன்று பிள்ளைகள். இருவர் வெளிநாட்டில் வசிக்க, கடைசி மகன் மற்றும் பிரபல வக்கீல் மகன் கோமகன் (கௌதம் வாசுதேவ் மேனன்) குடும்பத்துடன் இவர் வசிக்கிறார். தன் வாழ்நாளில் நல்ல தீர்ப்பும், நன்மதிப்புமே பெற்ற நீதிபதி ராமநாதனுக்கு நேர்எதிராக அவருடைய மகன் கோமகன் பணத்திற்காக நீதி, ஒழுக்கம் பற்றி கவலைப்படாதவர். இவர்களின் கருத்து வேறுபாட்டால் பத்து வருட காலம் பேசாமல் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். இதனிடையே பிள்ளைகள் மூவரும் தந்தையின் 70வது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாட நினைத்து தடபுடலாக ஏற்பாடு செய்கின்றனர். அன்றைய தினம் கோமகன் வேலை நிமித்தமாக வெளியூர் சென்று விட, ராமநாதன் ஒரு பதிமூன்று வருட முன்பு வந்த கடிதத்தை பார்க்கிறார். இளமை காலத்தில் வேலை செய்யும் போது ஏற்பட்ட தொடர்பால் அந்தப் பெண்ணிற்கு ஒரு மகள் இருப்பதாக கடிதத்தில் இருக்கிறது. அதன் பின் வீட்டை விட்டு வெளியேறி மகளைத் தேடி ராமேஸ்வரத்திற்கு பயணிக்கிறார். அந்த பேருந்தில் பரோட்டா மாஸ்டர் வீரமணி(யோகிபாபு) தன் வளர்ப்பு மகளை காணச் செல்கிறார். இருவரும் சந்தித்து கொண்டாலும் அவர்களின் தேடுதல் பயணத்தில் வௌ;வேறு இடங்களுக்கு பிரிந்து செல்கின்றனர். கோமகன் தன் தந்தை ராமநாதனை கண்டுபிடித்தாரா? ராமநாதன் தன் மகளுடன் இணைந்தாரா? வீரமணி தன் வளர்ப்பு மகளை பார்க்க முடிந்ததா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதனாக பாரதிராஜா தன் முதிர்ந்த தோற்றம், அழுத்தமான வசன உச்சரிப்பு, உணர்ச்சிகள் நிறைந்த நடிப்பு படத்தின் உயிரோட்டமுள்ள காட்சிகளுக்கு தகுந்த தேர்வு. தன் மகளை சந்தித்து மன்னிப்பு கேட்கும் இறுதிக் காட்சியில் கண் கலங்க வைத்துவிடுகிறார். மகனிடம் பாசத்தை மறைத்தாலும், பொது இடத்தில் மகனின் பாசத்தை மெச்சும் பாசமிகு தந்தையாக ஜொலிக்கிறார்.

வீரமணியாக யோகிபாபு, பரோட்டா மாஸ்டராக ஒட்டலின் ஊழியராக, அப்பாவி கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றி அடைக்கலம் கொடுத்து, அவரது மகளை தன் சொந்த மகளாக வளர்க்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக தன் வளர்ப்பு மகளை இழந்து தவிக்கும் தவிப்பு, அவளை தேடி வந்து அவமானப்படும் இடத்தில் மனதை கொள்ளை கொள்கிறார்.

பிரபல வக்கீல் மகன் கோமகனாக கௌதம் வாசுதேவ் மேனன் அமைதியான, தீர்;க்கமான பார்வை, யோசித்து உச்சரிக்கும் வசனம், தந்தையை தேடி அலைந்து பின்னர் அதிதியிடம் சமாதானமாக பேசி தன் முகவரியை கொடுத்து விட்டு செல்லும் இடத்தில் யதார்த்தமாக செய்துள்ளார்.

இவர்களுடன் கஷ்டப்படும் நேரத்தில் அனாதையாக விட்டுச் சென்ற தந்தையை மன்னிக்காத இரும்பு மனம் கொண்ட பெண்ணாக அதிதி பாலன், மகானா, எஸ்.ஏ.சந்திரசேகர், டெல்லி கணேஷ், விபின், ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் படத்தின் உயிர்நாடிகள்.

கவிப்பேரரசு வைரமுத்து பாடல் வரிகளுக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை படத்திற்கு பலம்.

இப்படத்தில் ஒளிப்பதிவு-ஏகாம்பரம், படத்தொகுப்பு-பி.லெனின் ஆகியோர் கச்சிதமாக செய்துள்ளனர்.

2006ல் எழுதிய தனது சொந்த சிறுகதையை தழுவி கருமேகங்கள் கலைகின்றன என்ற திரைஒவியமாக படைத்திருக்கிறார் இயக்குனர் தங்கர்பச்சான்.இதில் அறத்தை மறந்த மகனை நினைத்து வாடும் தந்தை, பணம், புகழ் தான் பெரிசு என்று நினைக்கும் மகன், இருவரையும் ஒருங்கிணைத்துச்செல்லும் மருமகள், வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகள் தந்தையின் அன்பை பெறமுடியாமல் தவிக்கும் தவிப்பு, கயவனால் வாழ்க்கையை தொலைக்கும் பெண், வளர்ப்பு மகளின் அன்பை பெற முடியாமல் தவிக்கும் தந்தை, வாழ்க்கையில் துன்பத்தை மட்டுமே அனுபவித்து மன்னிக்க மறுக்கும் மகளின் கண்ணீர்,  தொலைந்த சந்தோஷத்தை கண்டு பிடித்தும் பெற முடியாமல் குற்ற உணர்ச்சியால் தவிக்கும் தந்தை, பாசத்தை உணர்ந்த பிறகு காணாமல் போகும் தந்தையை தேடும் மகன் ஆகியோரை சுற்றி நகரும் கதைக்களத்தில் ஒன்றொடொன்று மனித உணர்வுகளையும், உறவுகளையும், படம் பிடித்து இரண்டு நபர்களின் பயணத்தோடு தொடர்புபடுத்தி திரைக்கதையமைத்திருக்கும் இயக்குனர் தங்கர் பச்சானின் உழைப்புற்கும், முயற்சிக்கும் பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ரியோட்டா மீடியா சார்பில் வீரசக்தி துரைக்கண்ணு தயாரித்திருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ தொலைந்து விட்ட பாசமிகு உறவைத் தேடிச்செல்லும் இருவரின் போராட்ட பயணம்.