ஃபைட் கிளப் விமர்சனம் : ”ஃபைட் கிளப்” ஆக்ஷன் பிரியர்களை பரவசப்படுத்தும் வடசென்னை விருந்து | ரேட்டிங்: 3.5/5

0
504

ஃபைட் கிளப் விமர்சனம் : ”ஃபைட் கிளப்” ஆக்ஷன் பிரியர்களை பரவசப்படுத்தும் வடசென்னை விருந்து | ரேட்டிங்: 3.5/5

ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்க, முதல் திரைப்படமாக வெளிவந்திருக்கும் “ஃபைட் கிளப்” படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அபாஸ் அ.ரஹ்மத்.

உறியடி விஜய்குமார், மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், சங்கர்தாஸ், அவினாஷ் ரகுதேவன், சரவணவேல், ஜெயராஜ், வடசென்னை அன்பு, சார்பட்டா சாய் தமிழ், மூர்த்தி, ஆதிரா பாண்டிலட்சுமி, திருநாவுக்கரசு, ஜீவா ரத்தினம், கிரண் பெருமாள், கானா மைக்கேல், ராகுல் குணசேகரன், சந்தோஷ் குமார், அரசன், மோகனக்கண்ணன், விக்னேஷ் வடிவேல், நவீன் விக்ரம், அருவி பாலா, அஸ்வின் ஈசன்கொண்டா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-கோவிந்த வசந்தா, எழுத்தாளர்-சசி, ஒளிப்பதிவு-லியோன் பிரிட்டோ, படத்தொகுப்பாளர் கிருபாகரன், மக்கள் தொடர்பு-யுவராஜ்.

2004ல்; தொடங்கும் கதைக்களத்தில் வடசென்னை பழவேற்காட்டில்; பாக்ஸிங் மூலம் தன் அடையாளத்தை பெற போராடும் பெஞ்சமினுக்கு அவரின் உழைப்பு நிராகரிக்கப்பட, தன் திறமையை வீணாக்காமல் அந்த பகுதியில் இருக்கும் ஏழை சிறுவர்களுக்கு கால்பந்து விளையாட்டை சொல்லிக் கொடுத்து ஊக்கப்படுத்துகிறார். அதில் ஒருவன் தான் செல்வா அவனுக்காக பெஞ்சமின் ஐம்பதாயிரம் பணம் கட்டி கால்பந்து அகாடமியில் சேர்ப்பதாக வாக்குறுதி கொடுக்கிறார். இந்நிலையில் பெஞ்சமினின் தம்பி ஜோசப், கஞ்சா விற்கும் கிருபாவுடன் கூட்டணி சேர்ந்து கஞ்சா விற்கிறார். இதைக் கேள்விப்படும் பெஞ்சமின், தம்பி ஜோசப்பை எச்சரித்து கிருபாவையும் அடித்து விடுகிறார். இதனால் ஆத்தரமடையும் கிருபா ஜோசப்பை அண்ணன் பெஞ்சமினுக்கு எதிராக தூண்டி வி;ட்டு, பெஞ்சமினை கொல்லவும் திட்டம் வகுக்கிறார். கிருபாவும், ஜோசப்பும் சேர்ந்து பெஞ்சமினை ஒரு இரவில் கொலை செய்கிறார்கள். அப்பொழுது கிருபா ஜோசப்பிடம் போலீசில் சரணடைந்து விடுமாறும், ஒரு வாரத்தில் ஜெயிலிருந்து வெளியே எடுக்கிறேன் என்று வாக்குறுதி கொடுக்க, அதை நம்பி ஜோசப் சரணடைகிறார். ஆனால் கிருபா வாக்குறுதியை மறந்து அரசியல் கட்சியில் சேர்ந்து பெரிய ஆளாக உருவெடுக்கிறார். 2016ல் கதைக்களம் மாறுகிறது பெஞ்சமின் இறந்ததால் கால்பந்து விளையாட்டில் முன்னேற முடியாமல் இருக்கும் செல்வா அந்த பகுதியில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுகிறார். இந்நிலையில் ஜெயிலிருந்து வெளியே வரும் ஜோசப், கிருபாவின் அரசியல் வளர்ச்சி கண்டு அவனை எதிர்க்க சதி திட்டம் தீட்டுகிறார். செல்வாவையும், அவனது நண்பர்களையும் கிருபாவின் தம்பியுடன் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மோத விட்டு பகையாக்குகிறார். இறுதியில் ஜோசப்பின் திட்டம் பலித்ததா? கிருபாவை வழி வாங்கினாரா? செல்வா ஜோசப்பின் சதியை கண்டுபிடித்து விலகிக் கொண்டாரா? இறுதியில் தன் குரு பெஞ்சமினையும், தன் சொந்த தம்பியையும் கொன்றவர்களை செல்வா என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

செல்வாவாக விஜயகுமார் வட சென்னை இளைஞனாக கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்;தை உணர்ந்து அடி தடி சண்டைக்காட்சிகள், துரத்தல்கள், இடையே கொஞ்சம் காதல் என்று படம் முழுவதும்  கோபக்கார இளைஞனாக முன்னிலைப்படுத்தி தன் குருவின் சாவிற்கு பழி வாங்கும் காட்சியில் மிரள வைத்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக நடித்த மோனிஷா மோகன் படத்திற்கு தேவையில்லாத ஒன்று. எதற்கு வந்தார் எப்படி சென்றார் என்பது புரியாத புதிர்.

ஜோசப்பாக அவினாஷ் அபாரமான தந்திர வேலையைச் செய்யும் வில்லன் வேடத்தில் தன் நடை, உடை, பாவனை, போடும் திட்டங்கள் மோசமான கதாபாத்திரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியிருக்கிறார்.

கிருபாவாக சங்கர் தாஸ் கச்சிதமான தேர்வு. ஒவ்வொரு காட்சியிலும் தன் பதவிக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளும் பாங்கு, தன் கூட்டாளிகளையும், தம்பியையும தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திறன், சமரசமாக பேசி சுமூகமாக முடித்து விட பாடுபடுவதும், அதன் பின்னர் வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கும் விதத்தில் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார்.

இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சரவணவேல், ஜெயராஜ், வடசென்னை அன்பு, சார்பட்டா சாய் தமிழ், மூர்த்தி, ஆதிரா பாண்டிலட்சுமி, திருநாவுக்கரசு, ஜீவா ரத்தினம், கிரண் பெருமாள், கானா மைக்கேல், ராகுல் குணசேகரன், சந்தோஷ் குமார், அரசன், மோகனக்கண்ணன், விக்னேஷ் வடிவேல், நவீன் விக்ரம், அருவி பாலா, அஸ்வின் ஈசன்கொண்டா என்று ஏகப்பட்ட நட்சித்திர பட்டாளத்துடன் வடசென்னை பாணி புதுமுகங்களின் அணிவகுப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

கோவிந்த் வசந்தாவின் இசை திரைப்படத்தின் கருப்பொருளுக்கு ஏற்ற பங்களிப்பை சிறப்பாகவும், பழைய பாடலையும் இணைந்து நன்றாக  செய்துள்ளார்.

மற்றும் லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவு விறுவிறு ஒட்டத்துடன் சண்டைக்காட்சிகள், துரத்தல் காட்சிகள், பஸ் பயணங்கள், கஞ்சா விற்பது, மெட்ராஸ் டாக்கீஸ் சண்டைக் காட்சிகள்,  போலீஸ் ஸ்டேஷன் விசாரணை காட்சிகள், வடசென்னை பகுதிகள், வீடுகள் ஆகியவற்தை தன் காட்சிக் கோணங்களால் அசத்தியுள்ளார்.

படத்தொகுப்பாளர் கிருபாகரன் அளப்பறிய வேலை பாராட்டுக்குரியது. மீதமுள்ள கலை, சண்டை ஆகிய தொழில்நுட்ப அம்சங்களும் நன்றாக உள்ளன.

சசி எழுதிய வடசென்னை கதைக்களத்தில் கஞ்சா விற்பனை, தொழில் பகை, கொலை, பழிக்கு பழி, விளையாட்டு போட்டி ஆர்வம், அடிதடி, அரசியல், துரோகம் என பல படங்களில் வந்தாலும், சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தி நான் லீனியராக புரியும் வண்ணம் ரத்தம் தெறிக்க விறுவிறுப்பாக ஒட ஒட விரட்டும் ஆக்ஷன் காட்சிகளுடன் திறம்பட கொடுத்துள்ளார் இயக்குனர் அபாஸ் அ. ரஹ்மத்.

மொத்தத்தில் ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும் ”ஃபைட் கிளப்” படம் ஆக்ஷன் பிரியர்களை பரவசப்படுத்தும் வடசென்னை விருந்து.