விசித்திரன் விமர்சனம்: விசித்திரன் சஸ்பென்ஸ் கலந்த மெடிக்கல் க்ரைம் த்ரில்லரில் மரணத்தையே துச்சமென நினைத்து அசத்திடும் அசகாய சூரன் | ரேட்டிங் – 3/5
இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் எம். பத்மகுமார் இயக்கத்தில் ஸ்டூடியோ 9 சார்பில் ஆர்.கே. சுரேஷ் வெளியீட்டுள்ள திரைப்படம் விசித்திரன்.
படத்தில் ஆர்.கே. சுரேஷ், பூர்ணா, மது ஷாலினி, இளவரசு, மாரிமுத்து, ஜார்ஜ், பகவதி பெருமாள், ஜே.பி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்;கள்:- இசை-ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு: வெற்றி மகேந்திரன், படத்தொகுப்பு: சதீஷ் சூர்யா, கலை: மாயபாண்டி, நிர்வாக தயாரிப்பு: எம்.செந்தில் குமார், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.
வால்பாறையில் குடும்ப பிரச்னை காரணமாக விருப்ப ஒய்வு பெற்ற போலீஸ்காரர் ஆர்.கே.சுரேஷ், எந்த ஒரு குற்ற சம்பவங்களையும் சுலபமாக விசாரித்து கண்டுபிடிக்கும் திறன் பெற்றவர். இதனால் எந்நேரமும் போலீஸ் அதிகாரிகள் இவரின் உதவியை நாடி பயன் பெறுவார்கள். முன்னாள் காதலி இறந்து கிடக்க அதனை விசாரிக்க செல்லும் இடத்தில் அறிந்து கொள்ளும் ஆர்.கே.சுரேஷ் அந்த சோகத்திலிருந்து வெளி வர முடியாமல் பல மாதங்கள் தவிக்க, இதனால் மனைவி பூர்ணா சண்டையிட்டு பிரிந்து சென்று விடுகிறார்.பின்னர் பூ+ர்ணா வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். மகளை தன்னுடன் வளர்க்கும் ஆர்.கே.சுரேஷிற்கு எதிர்பாராத அதிர்ச்சி ஏற்படுகிறது. விபத்தில் மகள் உயிரிழக்க ஆறு மாதத்தில் முன்னாள் மனைவி பூர்ணாவும் இறந்து விடுகிறார். இருவரின் இறப்பிற்கும் ஏதோ தொடர்பும், காரணமும் இருப்பதாக ஆர்.கே.சுரேஷ் நினைக்கிறார். தன் காவல்துறை நண்பர்கள் உதவியுடன் தீவிரமாக விசாரணையில் இறங்குகிறார். இறுதியில் மனைவி,மகள் இறந்த காரணத்தை கண்டுபிடித்தாரா? மெடிக்கல் மாஃபியா பற்றி துப்புத்துலக்கினாரா? அதற்காக ஆர்.கே.சுரேஷ் எடுத்த முயற்சி என்ன? என்பதே மீதிக்கதை.
மாயனாக ஆர்.கே.சுரேஷ் இவர் நடித்த படங்களிலேயே தி பெஸ்ட் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். வயதான தோற்றத்தில் தொந்தியோடு மெதுவான நடை,ஆரஅமர விசாரிக்கும் திறன், எதற்கும் கவலைப்படாத பேச்சு, நினைக்கும் போது குடிக்கவும், புகைக்கவும் என்ற வாழ்க்கையை தன் போக்கில் கடந்து செல்வது, மனைவி மேல் அபரிதமான அன்பை பொழிவது, மனஉளைச்சலில் தத்தளிப்பது, நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவது, இறுதியில் தனக்கு ஏற்பட போகும் ஆபத்தைப் பற்றி கவலைப்படாமல் துணிச்சலாக மெடிக்கல் துறையில் நடந்து கொண்டிருக்கும் அட்டுழியங்களை கண்டுபிடிக்க உதவுவது என்று மூன்று வருட கடின உழைப்பையும்,பங்களிப்பையும் கொடுத்து அசத்தியுள்ளார். இருந்தாலும் முடிந்து போன காதலுக்காக இருக்கின்ற நல்ல வாழ்க்கையை மனைவியை தொலைத்து விடுவது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என்றாலும் அபரிதமான அழுத்தமான நடிப்பிற்கு ஆர்.கே.சுரேஷிற்கு பாராட்டுக்கள்.
மாயனின் காதலி மீனாட்சியாக வரும் மதுஷாலினி, மனைவி ஸ்டெல்லாவாக வரும் பூர்ணாவும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி கொஞ்சம் நேரம் வந்தாலும் மனதில் நிற்கின்றனர். இவர்களுடன் மாயனின் நண்பர்களாக வரும் மாரிமுத்து, இளவரசு உள்ளிட்ட நண்பர்கள் கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் ஜார்ஜ், பகவதி பெருமாள், ஜே.பி நடிப்பு சிறப்பு.
ஜி.வி.பிராகஷ் இசையில் படத்தின் பாடல்கள் ஒகே ரகம் என்றாலும். பின்னணி இசை படத்திற்கு பலம்.
மெதுவாக செல்லும் கதைக்களத்தில் அதுவும் மெடிக்கல் க்ரைம் த்ரில்லரை தன்னுடைய காட்சிக் கோணங்களில் சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார் வெற்றி மகேந்திரன்.
படத்தின் எடிட்டிங்கை மிகவும் சிறப்பாக அமைத்து இருக்கிறார் சதிஷ் சூர்யா.
மலையாள சினிமாவில் 2018-ஆம் ஆண்டின் சூப்பர் ஹிட் கிரைம் திரைப்படமான ‘ஜோசப்” திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமாகும் விசித்திரன். படத்தில் காவல்துறை அதிகாரி கொலையாளியை எப்படி புலானாய்வு செய்து கண்டு பிடிக்கிறார் என்பதை தத்துருவமாக காட்சிபடுத்திய விதமும், போலீஸ்காரர் வாழ்க்கையில் ஏற்படும் துயர சம்பவத்தையும் இணைத்து, மருத்துவ துறையில் உடலுறுப்பு தானத்தை பிராதானமாக வைத்து பணம் சம்பாதிக்கும் மாஃபிய கும்பலின் திட்டங்களையும் அப்பட்டமாக தோலுரித்து காட்டும் படத்தை மலையாளத்தில் இயக்கிய பத்மகுமார் தமிழிலும் அதே கோணத்தில் சிறப்பாக கொடுத்துள்ளார். முதலில் மெதுவாக செல்லும் கதைக்களம், இடைவேளிக்குப்பிறகு கொஞ்சம் பிக்அப் செய்து க்ளைமேக்ஸ் காட்சி வேகமெடுத்து முடிவடைகிறது என்பது புது அனுபவமான சிறப்பு.
மொத்தத்தில் இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விசித்திரன் சஸ்பென்ஸ் கலந்த மெடிக்கல் க்ரைம் த்ரில்லரில் மரணத்தையே துச்சமென நினைத்து அசத்திடும் அசகாய சூரன்.