வர்ணாஸ்ரமம் விமர்சனம் : வர்ணாஸ்ரமம் காதலர்களை ஜாதியால் பிரிக்காதே மனிதநேயத்தோடு நடந்து கொள் என ஆணவ படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லி சிந்திக்க வைத்து சிலிர்க்க வைக்கும் படம் | ரேட்டிங்: 4/5
சிந்தியா புரொடக்சன் ஹவுஸ் சார்பில் சிந்தியா லௌர் டே தயாரித்திருக்கும் வர்ணாஸ்ரமம் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சுகுமார் அழகர்சாமி.
இதில் சிந்தியா லௌர் டே, ராமகிருஷ்ணன், பிக்பாஸ் அமீர், வைஷ்ணவி ராஜ், ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு பாலா, குகாசினி, நிமிமானுவேல், வாசுதேவன், வந்தனா, உமாமகேஸ்வரி, ஏ.பி.ரத்னவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு:- பிரவீணா.எஸ், பாடல்கள்- உமாதேவி, இசை :- தீபன் சக்கரவர்த்தி, சண்டைப்பயிற்சி :-ராஜேஷ்கண்ணா,நிர்வாக தயாரிப்பு :-ஏ.பி.ரத்னவேலு, எடிட்டர் :- கா. சரத்குமார், கலை :- புத்தமித்திரன், தயாரிப்பு மேற்பார்வை :-எம். பாலமுருகன் , மக்கள் தொடர்பு:- என்.விஜயமுரளி.
அமெரிக்க புலனாய்வு பத்திரிகையாளரான கன்யா டி அல்மைடா (சிந்தியா லௌர்டே) தமிழ்நாட்டில் நடக்கும் ஆணவக் கொலைகளை கேள்விப்பட்டு அதைப்பற்றி ஆவணப்படம் ஒன்றை இயக்குவதற்காக தமிழ்நாட்டிற்கு வருகிறார். அவருக்கு சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் அக்ஷையா (வைஷ்ணவி ராஜ்) ஆட்டோ டிரைவர் ராமகிருஷ்ணன், ஒளிப்பதிவாளர் உதவி செய்ய தன்னுடைய ஆராய்ச்சியை தொடங்குகிறார். நான்கு காதல் ஜோடிகள் பற்றிய கதையை மையமாக வைத்து படத்தின் கதை நகர்கிறது.
முதல் கதை கலெக்டருக்கு படிக்கும் சண்முகம் (ஸ்ரீராம் கார்த்திக்) தாழ்ந்த சாதி என்றாலும் தன்னை விரும்பும் உயர் சாதி பெண்ணான அமுதாவை(குகாசினி) காதலிக்கிறார். இருவரின் காதலை அறிந்து அமுதாவிற்க்கு அவர்கள் சாதியிலேயே திருமணம் முடிக்க பெற்றோர் முடிவு செய்கின்றனர். இவர்களில் முடிவை எதிர்க்கும் அமுதா பெற்றோர்களின் ஏச்சு பேச்சுக்களை கண்டு கோபமடைந்து பெற்றோர்களை வெட்டி கொன்று விட்டு ஜெயிலுக்கு செல்கிறார். அதன் பின் ஆத்திரத்தில் தான் செய்த தவறை நினைத்து வருந்திடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்.
இரண்டாவது காதல் கதை (ரத்னவேல்)அண்ணனின் அரவணைப்பில் வளறும் தங்கை கோமதி (உமா மகேஸ்வரி)வேறு ஜாதியைச் சேர்ந்த மாதவனைக் (வாசுதேவன்) காதலிக்க தொடங்க இதற்கு இவர்களின் சமூகத்திலிருந்து எதிர்ப்பு கிளம்ப, அண்ணன்கள் ஆதரவில் காதலித்தவனையே திருமணம் செய்த கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது. இதனால் ஆத்தரமடைந்த அவளுடைய சமூகத்தைச் சேர்ந்த சிலர் அவளை பாலியல் வன்கொடுமை செய்வதால் இறக்க, தன் குடும்ப மானத்தை காக்க தங்கையை எரித்து கொன்றதாக பொய் சொல்லி அண்ணன் ஜெயிலுக்கு செல்கிறார்.
மூன்றாவது காதல் கதை பத்மாவதி -அன்பழகன் காதலர்கள், இவர்கள் காதலை அறிந்த பத்மாவதி பெற்றோர்கள் காசிக்கு சென்று விட, அனாதையாகும் பத்மாவதியை அன்பழகன் பார்த்துக்கொள்கிறார். இதனை அறிந்த கட்ட பஞ்சாயத்து ராமானுஜம் (ராமகிருஷ்ணன்) அவளை பாலியல் வன்கொடுமை செய்ய, பத்மாவதி புத்தி பேதலித்து ராமானுஜத்தை கொன்று விடுகிறாள். அதன் பின்னர் மனநலம் பாதிக்கப்பட்ட பத்மாவதிக்கு குழந்தை பிறக்க, அன்பழகன் அந்த குழந்தையை வளர்க்க, இளைஞனாக ராமகிருஷ்ணன் (சிங்காரம்) வளர்ந்து ஆட்டோ ஒட்டி பிழைக்கிறான். சிங்காரம் தன் தாயின் வெறுப்பை சம்பாதித்ததனால் தாய் பாசமின்றி பிடிப்பில்லாமல் வாழ்கிறான். அதன் பின் அமெரிக்க பெண் கன்யாவிற்கு ஆவணப்பட எடுக்க உதவி செய்கிறான்.
நான்காவது காதல் கதை பவித்ரா பெற்றோர்கள் கார்த்திக்கை காதலிப்பதாக நினைத்து அவளை திட்ட, அதுவே காதலாக மாறுகிறது. தற்செயலாக நடந்த சம்பவத்தால் இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். வீட்டை விட்டு ஒடி பேருந்து நிலையத்தில் காத்திருக்க, இவர்கள் துரத்தும் உறவினர்களுக்கு பயந்து அங்கே வரும் அமெரிக்கப் பெண் கன்யா டி அல்மைடா காரில் தப்பித்து செல்ல, அவர்கள் இருப்பிடத்தை அறிந்து பவித்ராவின் தந்தை அங்கே வந்து அவர்களை அழைத்துச் செல்கின்றார். அதன் பின் என்ன ஆனது என்பதே படத்தின் பதற வைக்கும் க்ளைமேக்ஸ்.
ஜாதியால் வேறுபட்ட நான்கு காதல் ஜோடிகளின் கதையை படமாக எடுக்க வரும் அமெரிக்க பெண் நிரூபர் இவர்களின் கதையை கேட்டு இறுதியில் என்ன முடிவு எடுத்தார்? அவர்களுக்காக போராடினாரா? இல்லையா? என்பதைச் சொல்லும் படம் வர்ணாஸ்ரமம்.
அமெரிக்க பெண் நிரூபர் கன்யா டி அல்மைடாவாக தயாரிப்பாளர் சிந்தியா லௌர் டே நடித்துள்ளார். தமிழ் வம்சா வழி அமெரிக்க பெண் சிந்தியா லௌர் டே தமிழை கற்று நன்றாக பேசுவது மட்டுமின்றி புரிந்து கொள்ளக் கூடியவர். பல உலக மொழிகளில் பாடல்கள் பாடும் வல்லமை பெற்றவர், இந்தியாவில் பாடல்கள் பாட வந்து பின் தமிழ் படத்தை தயாரிக்க முடிவு செய்து படத்தின் கதையை கேட்டு பிடித்து போக, இதில் முக்கிய வேடத்தில் நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்து விட்டார். வசன உச்சரிப்பு, நடிப்புத் திறன் இவை இரண்டிலும் தன் திறமையை காட்டி சர்ச்சைக்குரிய படத்தை சிறப்பாக எடுத்து வெற்றியும் பெற்று விட்டார் சிந்தியாலௌர் டே.
ராமானுஜம், சிங்காரம் என்ற இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் ராமகிருஷ்ணன் நடிப்பு அற்புதம். வில்லன் தந்தை ராமானுஜமாக காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்து கொள்ளும் விதம், நடை, உடை பாவனையில் அச்சு அசலாக வாழ்ந்திருக்கிறார் மகனாக வரும் சிங்காரம் கதாபாத்திரம் முழுவதும் சாதியை வெறுப்பவராக, அதைப் பற்றி பேசினாலே ஒதுங்கி போகக்கூடிய கதாபாத்திரம் யதார்த்தம்.
வைஷ்ணவி ராஜ் அமெரிக்க பெண்ணிற்கு உதவி செய்து, உறுதுணையாக இருக்கும் பிராமணப் பெண்ணாக, சடங்குகள், சம்பிரதாயங்களில் நாட்டம் இல்லாதவராக, சமத்துவம் பேசும் தைரியமான பெண்ணாக படத்தின் உயிர் நாடி.
ஸ்ரீராம் கார்த்திக் கலெக்டர் பரீட்சை எழுதும் இளைஞராக நடித்து, தன் இன மக்களுக்கு வழிகாட்டியாக, வெளிச்சமாக இருக்க நினைக்கும் அமைதியான, அதிர்ந்து பேசாத குணம் கொண்ட கதாபாத்திரத்தில் தனித்து நிற்கிறார்.
மற்றும் பிக்பாஸ் அமீர், விஷ்ணு பாலா, குகாசினி, நிமிமானுவேல், வாசுதேவன், வந்தனா, உமாமகேஸ்வரி, அண்ணனாக ஏ.பி.ரத்னவேல் ஆகியோர் படத்திற்கு தேவையான அளவான நடிப்பை கொடுத்து ஸ்கோர் செய்கின்றனர்.
பெண் ஒளிப்பதிவாளர் பிரவீணா அனைத்து காட்சிகளையும் உயிர்ப்புடன், அச்சு அசலாக கிராமத்து மண் வாசனையுடன் சாதி வெறி பிடித்த மனிதர்களின் செயல்பாடுகளை அசத்தலாக கொடுத்துள்ளார். ஆண்களுக்கு நிகராக திறன், காட்சிக் கோணங்களில் நேர்த்தியோடு அர்ப்பணிப்போடு செயலாற்றியுள்ளார். வாழ்த்துக்கள்.
உமாதேவி பாடல் வரிக்கு தீபன் சக்கரவர்த்தி தந்திருக்கும் இசை வார்த்தைகள் புரியும்படி கொடுத்திருப்பதும், பின்னணி இசையும் படத்திற்கு பலம். பறையிசை பாடல் சிலிர்க்க வைத்து, தாளம் போட வைக்கிறது.
சண்டைப்பயிற்சி :-ராஜேஷ்கண்ணா, எடிட்டர் :- கா. சரத்குமார், கலை :- புத்தமித்திரன் ஆகியோர் கச்சிதமாகவும், கதைக்கேற்ற பங்களிப்பை திறம்பட செய்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.
வர்ணம் என்றால் தொழில். ஆஸ்ரமம் ஒன்றால் வாழ்க்கை. இதனைக் கொண்டு வர்ணாஸ்ரம தர்மம் என்பதனை தொழில் சார்ந்த வாழ்க்கை நடைமுறைகள் எனப் பொருள் கொள்ளலாம். அடிப்படையில் நான்கு பிரிவுகள் வரையறுக்கப் படுகின்றன. இதைத் தான் வர்ணாஸ்ரமம் என்று குறிப்பிடுகின்றனர். இந்த நான்கு பிரிவுகளிலிருந்து பிறப்பால் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று பிளவை ஏற்படுத்தி அந்த வட்டத்திற்குள் சிக்கித் தவிக்கும் சமூகத்தில் காதல் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைச் சொல்லும் படம் வர்ணாஸ்ரமம். பெரும்பாலும் இத்தகைய காதல் ஒரு கதையை மட்டுமே மையப்படுத்தி படத்தை எடுக்கும் சூழலில் இதில் வர்ணாஸ்ரமம் நான்கு பிரிவுகள் போல் நான்கு வகை காதல் கதைகளை ஒரே படத்தில் எடுத்திருக்கிறார் இயக்குனர் சுகுமார் அழகர்சாமி.ஜாதி கலப்பு காதலால் எத்தகைய சூழல் இவர்களின் சமூகத்தில் உருவாகிறது? அதனால் இவர்களின் குடும்பம் மட்டுமல்ல, இவர்களைச் சுற்றி இருப்பவர்களும் பாதிக்கப்பட்டு, எடுக்கும் முடிவுகள் எவ்வளவு விபரீதத்தையும், வாழ்க்கையே புரட்டி போட்டு அவதிக்குள்ளாகும் நிலையையும் ஏற்படுத்துகிறது? ஈவு இரக்கமின்றி உயிர் பலி வாங்குகிறது என்பதை தன் வசனத்தாலும்,திரைக்கதையாலும் மெய்பட இயக்கியிருக்கிறார் சுகுமார் அழகர்சாமி. எவ்வளவு வழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் ஆணவப் படுகொலைகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது ஒரு சில பெற்றோர்கள் மனம் மாறினாலும், மற்றவர்கள் அவர்களை மாற விட மாட்டார்கள் எந்த காலத்திலும் இந்த மக்கள் திருந்த மாட்டார்கள் என்பதை விரக்தியுடன் ஆணித்தரமாக சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர் சுகுமார் அழகர்சாமி. பாராட்டுக்கள்.
மொத்தத்தில் சிந்தியா புரொடக்சன் ஹவுஸ் சார்பில் சிந்தியா லௌர் டே தயாரித்திருக்கும் வர்ணாஸ்ரமம் காதலர்களை ஜாதியால் பிரிக்காதே மனிதநேயத்தோடு நடந்து கொள் என ஆணவ படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லி சிந்திக்க வைத்து சிலிர்க்க வைக்கும் படம்.